Sep 05, 2010 at 10:25 AM
adheedhan@gmail.com
முதல் பக்கம் arrow Blog arrow Articles arrow பன்றிக் காய்ச்சல் உயிர்க்கொல்லி நோயல்ல...
பன்றிக் காய்ச்சல் உயிர்க்கொல்லி நோயல்ல...
நாம் பயந்தது நடந்தே விட்டது. பன்றிக் காய்ச் சல் நோய், தமிழகத்தில் முதல் உயிரை பலி கொண்டிருக்கிறது. இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்கட்ட மரணங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் நேர்ந்தன. அம்மாநிலத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த நோய், இப்போது தமிழகத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் தன் நச்சுக் கரங்களை நீட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு முதன்முதலாக பள்ளிச் சிறுவன் சஞ்சய் பலியாகி இருக்கிறான்! அவனுக்கு அந்த நோய்க்கிருமி எப்படித் தொற்றியது என்பது புரியாத புதிராக இருக் கிறது..! சிங்கப்பூரிலிருந்து பயணித்து வந்த அவனுடைய தந்தை மூலமாக இந்நோய்க் கிருமிகள் வந்திருக்கலாம் என்ற தகவல் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. சிறுவனிடமிருந்து அந்த நோய் அவனுடைய அண்ண னுக்கும் அவன் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக் கும் வேறு சில குடும்பத்தவருக்கும் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்ட றிந்துள்ளனர். பலியான சிறுவனிடமிருந்து, அவன் படித்த பள்ளியில் மற்ற பிள்ளைகளுக்கும் அந்த நோய் தொற்றி இருக்குமோ என்ற பயத்தில், அந்த பள்ளிக்கு இப்போது விடுமுறை விட்டி ருக்கிறார்கள். இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் நோயின் பாதிப்புக்கு அதிகம் ஆளாகி யிருப்பது, மகாராஷ்டிர மாநிலம்தான். அம்மாநிலத்தின் புனே மற்றும் சதாரா மாவட்டங்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மாவட்டங்களிலுள்ள பள்ளிகள் பலவும் இப்போது மூடப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச் சல் தொற்றிவிடுமோ என்ற பயத்தில் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களிலும்கூட பள்ளி களுக்கு இப்போது விடுமுறை. இந்த நோய் மழைக்காலங்களில்தான் வேகமாகப் பரவும் என்று ஏற்கெனவே உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. ஆனால், அதைப்பற்றி நம்முடைய மத்திய அரசு அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. மத்திய சுகாதார அமைச்சரோ, டெலிவிஷன் மூலம் மக்கள்தொகையைக் கட்டுப் படுத்துவது பற்றிய கண்டுபிடிப்பில் மூழ்கி யிருந்தாரேயழிய, இதைப்பற்றி பெரிதாகஅலட்டிக் கொள்ளவில்லை. பலியான ஒரு மாணவியின் குடும்பத்தாரின் செயல்பாடு குறித்து சில வார்த்தை களைச் சொல்லி அதற்கும் வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார் அமைச்சர். உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது போலவே, இப்போது பன்றிக் காய்ச் சலின் தாக்கம் இந்தியா வில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளைவிட ஆசிய நாடுகளில்தான் இந்த நோய் வேகமாகப் பரவும் என்று ஏற்கெனவே மருத்துவ நிபுணர்கள் கூறியிருந் தனர். அதிலும் குறிப்பாக, இந்தியாவில் இந்த நோய் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் அபாய அறிவிப்பு செய் திருந்தது. அதற்குக் காரணம், இங்கே அந்த நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளையும், மருந்துகளையும் வாங்குவதற்கு போதிய வசதியற்றவர்கள் அதிகம் என்பது மட்டுமின்றி, இங்கேயிருக்கும் மக்கள் தொகை நெருக்கமும், சுகாதார கேடு நிறைந்த சுற்றுப்புறமும் அந்த நோய் எளிதில் பரவுவதற்கு வழிவகுத்துவிடும் என்பதுதான். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பன்றிக் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக சுகாதாரத்துறை மேற் கொண்டிருக்கிறது. அந்தப் பாதிப்புக்குள்ளான பகுதி களில் மருத்துவ முகாம்களை நடத்தி, இந்த நோயின் அறிகுறிகள் உள்ளனவா என்று பார்ப்பது, ரயில்வே ஸ்டேஷன்களில் இதற்கான சோதனை நிலையங்களை நிறுவுவது என்று பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த சிறப்பு முகாம்களில் மருத்துவம் செய்வதற்காக மகராஷ்டிர மாநிலத்திலிருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதய நோய், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு உள்ளாகி யிருப்பவர்கள்; நரம்பு தளர்ச்சியாலும், நோய் எதிர்ப்பு சக்தியின்மையாலும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் போன்றவர்களையும் இந்நோய் எளிதில் தாக்குமாம். ஒருவரையருவர் தொடுவதால் மட்டுமின்றி, காற்றின் மூலமாகவும் இந்த நோயின் கிருமிகள் வேகமாகப் பரவுமென்பதால், இந்த நோயின் ஆபத்து அதிகமாக இருக்கிறது- என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களின் ஈடுபாடு இல்லாமல் இந்நோயைக் கட்டுப்படுத்துவது இயலாது. எனவே, நாம் முதலில் இந்நோய் குறித்து விழிப்பு உணர்வு பெறவேண்டும். குழந்தைகளுக்கு இந்த நோயின் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைப் பெற்றோர்கள் விழிப்போடு கவனிக்க வேண்டும். குழந்தைகள் மூச்சுவிட சிரமப்பட்டாலோ, அவர்களின் தோலின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டு, சாம்பல் நிற அல்லது கருநீல நிறக் கறைகள் தென்பட்டாலோ, குழந்தைகள் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டாலோ அல்லது அடிக்கடி வாந்தி எடுத்தாலோ, உடனடியாகப் பன்றிக் காய்ச்சலுக்கான சோதனையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பெரியவர்களுக்கு காய்ச்சலோடு நெஞ்சிலோ வயிற் றிலோ கடுமையான வலி ஏற்பட்டாலும், சோர்வும் மயக்கமும் வந்து வாந்தி வருவதுபோல குமட்டல் வந்தாலும், இந்த நோய்க்கான பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். இதற்கான மருத்துவம் என்பது எளிதானதுதான். டாமிஃப்ளூ அல்லது ரெலின்ஸா ஆகிய மாத்திரைகள்தான் இந்த நோய்க்குக் கொடுக்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர், மற்றவர்களுக்கு அதைப் பரப்பி விடாமல் இருக்கும் பொருட்டே குணமாகும் வரை, அவர் தனித்து வைக்கப்படுகிறார். மற்றபடி, இந்நோய் எளிதில் குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான். இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டாலே, அவர் செத்துப் போய்விடுவார் என பயப்படவேண்டியதில்லை. இது தொற்று நோயே தவிர உயிர்க்கொல்லி நோய் அல்ல. இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பன்றிக் காய்ச்சல் வந்த நபர் அதற்கான மருத்துவம் செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமின்றி, மற்றவர்களுக்குப் பரப்பாமல் இருக்கும் பொருட்டு சில தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அவர் இருமும் போதும், தும்மும்போதும் டிஷ்யூ பேப்பரை வைத்து வாயை மூடிக்கொள்வது அவசியம். அதன் பிறகு அந்தக் காகிதத்தை, பாதுகாப்பாக மூடியுள்ள குப்பைத் தொட்டிக்குள் போடவேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். அந்தக் கைகளால் தன்னுடைய கண்களையோ, மூக்கு, வாய் போன்ற பகுதிகளையோ நேரடியாகத் தொடக்கூடாது. வீட்டி லுள்ள மற்றவர்களைத் தொடுவதோ, அவர்களுக்கு அருகில் செல்வதோ நல்லதல்ல. பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கான தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே, 'இதற்காகத் தடுப்பூசி போடுகிறேன், தடுப்பு மருந்து கொடுக்கிறேன்' என்று யாராவது சொன்னால், அதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். இதுபோன்ற கொள்ளை நோய்கள் வரும்போது அவற்றுக்கான தடுப்பூசிகளை உருவாக்குவது பற்றி உலக சுகாதார நிறுவனம் சில வழிகாட்டுதல்களைத் தந்திருக் கிறது. அந்த நோயின் அறிகுறி கண்டறியப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் அதற்கான தடுப்பூசியை உருவாக்கிவிட முடியும் என்று அது கூறியுள்ளது. அப்படிப் பெருமளவில் தடுப்பூசிகளை உருவாக்கும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், தற்போது இந்த நோய் உலக அளவில் ஏற்படுத்தி வரும் பீதியைத் தம்முடைய வியாபாரத்துக்கான வாய்ப்பாக கருதுகிற சில மருந்து தயாரிப்புக் கம்பெனிகள், அவசர அவசரமாக தடுப்பூசி களை உருவாக்குவதில் முனைந்துள்ளன. அவை அப்படி தடுப்பூசிகளை உருவாக்கும்போது போதுமான பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போனால், அந்த மருந்துகளேகூட இந்த நோயைப் பரப்பும் வாய்ப்பு இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக் கின்றனர். இந்த நோய்க்கான வைரஸை பிரித்து ஆயிரக்கணக் கான கோழி முட்டைகளில் செலுத்தி, அந்த முட்டை களை இரண்டு மூன்று நாட்களுக்குப் பாதுகாத்து வைத்து, முட்டையின் வெள்ளைக்கருவில் இந்த வைரஸ்கள் பல்கிப்பெருக வைக்கப்படும். அதன்பிறகு அந்த வைரஸ் கள் பிரித்தெடுக்கப்பட்டு, அது வேதிப்பொருட்கள் மூலம் கொல்லப்படும். அதனுடைய புரோட்டீன் பகுதி மட்டும் சுத்திகரிக்கப்பட்டு, அதுவே தடுப்பூசி மருந் தாகப் பயன்படுத்தப்படும். இப்படி இந்த மருந்தை உருவாக்குவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள காலம் குறைந்தாலோ அல்லது அந்த செய்முறைகளில் சிறு தவறு நேரிட்டாலோ, இந்தத் தடுப்பூசி என்பதே நோய் பரப்பும் சாதனமாகிவிடக் கூடிய ஆபத்து உள்ளது. எனவே, இதில் அவசரப்படாமல் நிதானமாக மருந்து கம்பெனிகள் செயல்பட வேண்டும் என தற்போது உலக சுகாதார நிறுவனம் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் மிக எளிதாக ஆயிரக்கணக் கானோருக்கு இந்த நோயின் கிருமிகளைப் பரப்பிவிட முடியும். அது மட்டுமில்லாமல், தேவையில்லாமல் கூட்டம் கூடுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இது பல்வேறு மதச்சடங்குகள், பண்டிகைகள் வரக்கூடிய காலமென்பதால், இதுபற்றிப் பொதுமக்கள் பொறுப் போடும், விழிப்போடும் இருப்பது அவசியம்..! எல்லாம் அரசாங்கத்தின் பொறுப்புதான் என நினைக்காமல், பல்வேறு அரசியல் கட்சிகளும்கூட இந்த விஷயத்தில் அக்கறை காட்டவேண்டும். பன்றிக் காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு அவர்களுக்கும் உள்ளது. பன்றிக் காய்ச்சல் ஆபத்து முற்றாக நீங்கும்வரை அதிக அளவில் மக்கள் திரளக்கூடிய மாநாடுகள், ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்தாமல் தவிர்ப்பது நல்லது. இதை அரசியல் கட்சிகள் பரிசீலிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம்வரை மாநாடுகள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு அனுமதி மறுப்பது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்தை அரசு கேட்டறியலாம். கொள்ளை நோய்கள் தாக்கும்போது மக்களிடையே பீதி பரவுவது இயல்புதான். அது சில சமயங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாகக்கூட மாறிவிடும் வாய்ப் புள்ளது. எனவே, விழிப்புஉணர்வு ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் பீதியைப் பரப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை, நம் எல்லோருக்குமே இருக்கிறது. மனித உயிர்கள் மதிப்பு மிக்கவை. அந்த உணர்வு அரசாங்கத்துக்கும் வேண்டும்; நமக்கும் வேண்டும்..!

Leave a Comment


 Name (required)

 Email (required will not be displayed.)

 Website

Comment
Tamil ( தமிழ் ) English
(tamil typing : ammaa = அம்மா)