|
'பயப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம்'என்று நாம் எவ்வளவுதான் சொல்லிக் கொண்டிருந்தாலும், பன்றிக் காய்ச்சல் பீதி மக்களிடையே பரவிக்கொண் டுதான் இருக்கிறது. இந்த நோயால் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் சாவு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போக, அதனால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகமும் அந்தக் கவலை வரிசையில் வருகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல. உலகின் 168 நாடுகள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு லட்சம் பேருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்திலும், அர்ஜென்டினாவிலும் பன்றிக் காய்ச்சலின் இரண்டாவது அலை, இப்போது மக்களைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் குளிர்காலத்தில் இங்கிலாந்தில் இந்நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அங்கு கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒன்பது பேர் இறந்துள்ளனர். இதுவரை முப்பத்தாறு பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பன்றிக் காய்ச்சலால் மக்களிடையே பீதி பரவுவதற்குக் காரணம், அது குறித்த முழு
விழிப்பு உணர்வு இல்லாததுதான். சரியான தகவல்கள் மட்டுமே அந்த விழிப்பு உணர்வை அளிக்கமுடியும். இந்த நோயைப் பற்றி மிகைப்படுத்திச் சொல்லி மக்களை பீதியடைய வைப்பது எப்படி தவறோ, அதேபோலத்தான் மக்களுக்குத் தைரியமூட்டுகிறேன் என்ற பெயரில் இந்த நோய் குறித்து உண்மையான ஆபத்துகளைச் சொல்லாமல் இருப்பதும்! சரியான தகவல்கள் எவ்வளவு கசப்பானவையாக இருந்தாலும், அவற்றை மக்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதும் மிக அவசியம்.
இப்போது உலகை பயமுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய், ஏற்கெனவே 1918-19 காலகட்டத்தில் உலகை தாக்கிய 'ஸ்பானிஷ் ஃப்ளூ'நோயைப் போல கொடூரமானதாகப் பரவுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகள் மத்தியில் உருவாகியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகள் உலகத்தையே பிடித்து உலுக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ நோய்க்கு, சுமார் பத்து கோடி பேர் பலியானார்கள். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து முதல் இருபது சதவிகிதம் பேர் வரை இறந்து போனார்கள். இதுவரை மனிதகுல சரித்திரத்தில் மிகப்பெரிய கொள்ளை நோயாக அதுதான் வர்ணிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி பேர் இறந்து போனதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறையோ, தகவல் தொடர்பு வழிமுறையோ, மக்கள் விழிப்பு உணர்வோ இந்த அளவுக்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
'ஸ்பானிஷ் ஃப்ளூவுக்கான வைரஸ், ஆரம்பத்தில் சாதுவாகத்தான் இருந்தது. அடுத்தடுத்து அது உருமாற்றம் அடைந்து, மிகவும் கொடூரமானதாக மாறியது. அதைப் போலவே இப்போதைய பன்றிக் காய்ச்சல் வைரஸும் உருமாற்றம் அடைந்து, மேலும் அதிகமான நாசத்தை விளைவிக்குமா?'என்று விஞ்ஞானிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. சிலர் அப்படியெல்லாம் நடக்காது என்கின்றனர். சிலரோ, அப்படி நடப்பதற்கு வாய்ப் பிருக்கிறது என்று கவலையூட்டுகின்றனர்..!
இதனிடையே, 'நியூ சயின்டிஸ்ட்'என்ற பத்திரிகை, தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் அறுபது பேரிடம் சர்வே ஒன்றை நடத்தி அதன் விவரங்களை வெளியிட் டுள்ளது. அவர்களிடம் மூன்று கேள்விகளை அந்தப் பத்திரிகை கேட்டுள்ளது -
1. பன்றிக் காய்ச்சல் வைரஸ், ஸ்பானிஷ் ஃப்ளூவைப் போல கொடூரமானதாக உருமாற்றம் பெறுமா? 2. உங்கள் நாடுகளில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள், அப்படியரு நிலைமை வந்தால் அதை சமாளிப்பதற்குப் போதுமானதாக இருக்குமா? 3. நீங்கள் இதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறீர்களா?
இவற்றில், முதல் கேள்விக்கு பதிலளித்த நிபுணர்களில் முப்பது சதவிகிதத்தினர், 'பன்றிக் காய்ச்சல் வைரஸ் கொடூரமானதாக மாறுவதற்கு பாதிக்கு பாதி வாய்ப்பு உள்ளது'என்று கூறியுள்ளனர். ஆனால், பெல்ஜியத்தைச் சேர்ந்த மாலிக்யூலர் பயாலஜிஸ்ட்டான வால்டர் ஃபயர் என்பவரோ, பன்றிக் காய்ச்சல் வைரஸ் கொடூரமானதாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்உள்ளது என்றும், அப்படி அது மாறினால், இப்போது தயாரிப்பில் இருக்கும் தடுப்பூசி மருந்துகள் பயனற்றவை ஆகிவிடக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படி அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்தால், தற்போதுள்ளசுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் அதை சமாளிப்ப தற்குப் போதுமானவையாக இருக்காது என்பதை பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் ஒப்புக்கொண்டிருக் கிறார்கள். பெரும்பாலான மருத்துவ நிபுணர்களேகூட தங்களுடைய தற்காப்பைப் பற்றிக் கவலைப்படாத நிலையில்தான் இருக் கின்றனர்.
பன்றிக் காய்ச்சல் வைரஸ் குறித்த பல்வேறு சந்தேகங் களுக்கு உலக சுகாதார நிறுவனம் அண்மையில் விளக்க மளித்துள்ளது. மிக முக்கியமான எச்சரிக்கைகளை அது விடுத்துள்ளது. ஆகஸ்ட் ஆறாம் தேதி, இதற்காக பிரத்தி யேகமான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் தொலைபேசி மூலமாகக் கேட்ட கேள்விகளுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
பன்றிக் காய்ச்சலுக் கான தடுப்பூசி மருந்து உருவாக்குவது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும், அந்த மருந்தை பயன்படுத்துவதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது பற்றியும் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வளர்முக நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி மருந்துகளை போதுமான அளவு அனுப்புவதற்கு உலக சுகாதார நிறுவனம் தனிப்பட்ட கவனம் எடுத்துக்கொண்டுள்ளதா என்று அப்போது ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ தகவல் தொடர்பாளர், ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக ஒரு குறிப்பிட்ட அளவு மருந்தை அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று மிகவும் முக்கியமானது. 1976-ம் ஆண்டில் அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு நோய்க்குத் தடுப்பூசி போடப்பட்டபோது, அதனால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டன. 'கில்லான் பார்ரே சிண்ட்ரோம்'என்று அழைக்கப்பட்ட அந்த பக்க விளைவுப் பிரச்னைக்கு ஆயிரக்கணக்கானோர் ஆளானார்கள். அப்படியான சிக்கல் இப்போதைய தடுப்பூசி மருந்தால் ஏற்படுமா? 'முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை வேறு, இப்போதைய நிலை வேறு. மருத்துவத் துறையில் நாம் இப்போது பெருமளவு முன்னேறி விட்டோம். எனவே, அத்தகைய ஆபத்து இப்போது ஏற்படாது!'என்று உலக சுகாதார நிறுவனத்தின் பேச்சாளர் அதற்கு பதிலளித்தார்.
பன்றிக் காய்ச்சல் வந்தால், அதைக்குணப்படுத்துவதற்காக தற்போது வழங்கப்படும் டாமி ஃப்ளு என்ற மாத்திரை குறித்தும் இப்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. அந்த மாத்திரைகள் குழந்தைகளுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று புகார்கள் கூறப்படுகின்றன. இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மாத்திரைகள் குழந்தைகளின் காய்ச்சலைக் குறைக்கின்றன என்பது உண்மைதான் என்றபோதிலும், இதனால் அந்த நோய் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க முடிவதில்லை. அது மட்டுமல்லாமல், இந்த மாத்திரைகளை சாப்பிடும் பெரும்பாலான குழந்தைகளுக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு முதலான பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை சாப்பிடுவதால் பக்க விளைவு உண்டாகும் என்று அதன் உறையிலேயே அச்சிடப்பட்டிருக்கிறது என்றபோதிலும், இந்த பாதிப்பு எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருக்கிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள கவலை. குறிப்பாக, பன்னிரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இந்த மாத்திரைகளை கொடுக்கும்போது பக்கவிளைவுகள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளன என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பவர்களோ, 'இந்த முடிவுகள் பன்றிக் காய்ச்சல் வந்த நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து பெறப்படவில்லை. வேறுவித தொற்றுநோய்களுக்கு இந்த மாத்திரைகளை வழங்கியபோது மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்துதான் இது சொல்லப்படுகிறது'என்று விளக்கமளிக்கின்றனர். இப்படியான புகார்களை உலக சுகாதார நிறுவனமும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. 'டாமி ஃப்ளு மாத்திரை தான் பன்றிக்காய்ச்சலுக்கு சரியான மருந்து. அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகமிக சொற்பமானவைதான்'என்று அது மறுபடியும் உறுதிப்படுத்தியுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ள இன்னொரு கவலை, பன்றிக் காய்ச்சல் வைரஸும், பறவைக் காய்ச்சல் வைரஸும் ஒன்று சேர்ந்து இன்னும் பயங்கரமான புதிய வைரஸ் ஒன்றை உருவாக்கிவிடுமோ என்பதுதான். ஒப்பீட்டளவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் மிகவும் கொடூரமானது. அதனால் பாதிக்கப்படுகிறவர்களில் சுமார் அறுபது சதவிகிதத்தினர் உயிரிழந்து விடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த வைரஸ் எளிதில் பரவுவதில்லை. பன்றிக் காய்ச்சல் வைரஸோ அந்த அளவு உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், இது மிகமிக எளிதாகப் பரவக்கூடியதாக இருக்கிறது. 'இந்த இரண்டு வைரஸ்களும் ஒன்றிணைந்து புதிய வைரஸ் ஒன்று உருவானால் அது எப்படி இருக்கும்?'என்பதைப் பற்றியே இப்போது விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர். இந்த இரண்டு வைரஸ்களும் ஆசிய நாடுகளில்தான் தற்போது அதிகமாக பரவிக்கொண்டுள்ளன. எனவே, இங்குதான் அவை ஒன்றிணைந்து புது வகை வைரஸாக உருவெடுக்கக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது என்று விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதற்கு முன்பு உலக அளவில் பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய கொள்ளை நோய்கள் யாவும் பறவைகள் மூலம் பரவக் கூடியனவாக இருந்தன என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சமீபத்தில் தாக்கிய பறவைக் காய்ச்சல், அப்படியான புது அவதாரம் ஒன்றை எடுக்கும் பட்சத்தில், அது 1918-ம் ஆண்டு ஏற்பட்ட கொள்ளை நோயான ஸ்பானிஷ் ஃப்ளூவைவிட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனமும்கூட இதை மறுக்கவில்லை. பன்றிக் காய்ச்சல் மீது எல்லோருடைய கவனமும் திரும்பியிருக்கும் நிலையில், பறவைக் காய்ச்சல் வைரஸ் பற்றியும் விஞ்ஞானிகள் தொடர்ந்து விழிப்போடு கண்காணிக்க வேண்டுமென்று அது அறிவுறுத்தியுள்ளது. 'ஹெச்ஒன் என்ஒன்' எனப்படும் பன்றிக் காய்ச்சல் வைரஸும், 'ஹெச் ஃபைவ் என்ஒன்' எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸும் கூட்டுச் சேரும் அபாயம் உண்டா..? அல்லது அவை ஒன்றோடு ஒன்று இணைந்து புது வைரஸ் ஒன்றை உருவாக்கக்கூடுமா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.
இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வைரஸின் குவிமையமாக இருக்கும் மகாராஷ்டிராதான் பறவைக் காய்ச்சல் நோய்க்கும் மையமாக இருந்தது. எனவே, அங்கிருந்தேகூட அடுத்த ஆபத்து புறப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பதால், உச்சகட்ட எச்சரிக்கைப் பார்வையை அங்கே அரசாங்கம் பதித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. உண்மையாகவே இது போர்க்கால அவசரம்! பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று உலகமே பரபரத்துப்போயிருக்கும் இந்தச் சூழ்நிலையில், பன்றிக் காய்ச்சல் வைரஸால் அதிகம் பாதிப்புக்குஆளாகி வரும் நம்முடைய நாட்டிலோ அதைத் தடுப்பதற் கான ஏற்பாடுகள் மிக மந்தமாகத்தான் நடந்து வருகின்றன. இந்த நோய் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. அரசாங்க சோதனைக்கூடங்களில் இந்த சோதனை இலவசமாகச் செய்யப்பட்டபோதிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சோதனைகளை மேற்கொள்ளலாம் என்று அரசு தற்போது கூறியிருப்பதால், அங்கு முடிந்தவரை பணத்தைக் கறந்துவிடுவார்கள் என்பது தெரிந்த கதைதான். இந்த வைரஸைக் கண்டறிவதற்கான 'டெஸ்டிங் கிட்'வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்கிறார்கள். அதனால்தான் அது போதுமான அளவில் கிடைப்பதில்லை. எனவே, விலை மலிவான 'டெஸ்டிங் கிட்'ஒன்றை இந்தியாவிலேயே உருவாக்கப்போவதாக இப்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. காலம் கடந்தாலும் இந்த முடிவு வரவேற்கத் தக்கதுதான். ஆனால், அதில் தேவை அதிவேகம்!
இப்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்: பன்றிக்காய்ச்சல் என்பது இன்று வந்து நாளை முடிந்துவிடப்போகிற ஒரு பிரச்னை அல்ல. நீண்டகாலத்துக்கு நம்மை பாதிக்கவிருக்கிற ஒரு சிக்கல். எனவே, அரசாங்கம் எதைத் திட்ட மிட்டாலும், அதை நீண்டகால நோக்கி லிருந்து திட்டமிடவேண்டும். நாமும்கூட நம்முடைய வாழ்க்கை முறையை இந்த ஆபத்தை மனதில் வைத்து, அதற்கேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும்!
|
Leave a Comment