|
கடந்த ஏப்ரல் மாதத்தில் பன்றிக் காய்ச்சல் மெக்சிகோவை தாக்கியபோது, அந்த அரசாங்கம் செய்வதறியாது நிலைகுலைந்துபோனது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் குவிந்தனர். இதை சமாளிப்பதற்கு உடனடியாக ஆலோசனையில் இறங்கிய மெக்சிகோ அரசாங்கம், கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மெக்சிகோவில் 'ஹெல்த் எமர்ஜென்சி'யை அறிவித்தது. அரசுத் துறை, தனியார் துறை சார்ந்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டன. உணவு, மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அனாவசியமாக வெளியே செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. மக்களும் அதை மதித்து நடந்துகொண்டார்கள்!
பன்றிக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் அதை மற்றவர்களுக்குத் தெரிவிக்காதிருந்தால், அந்த வீடுகளில் அரசாங்க மருத்துவர்கள் எந்த நேரத்திலும் புகுந்து அந்த நோயாளிகளை கொண்டுவந்து தனிமைப்படுத்தி வைப்பதற்கு சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது.
மெக்சிகோவில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் உலக தொழிலாளர் தின கொண்டாட்டங்களையும் அரசு ரத்து செய்தது. பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு மெக்சிகோ கையாண்ட வழி மிகவும் அதிகப்படியானது என்றும், அதனால் பீதி அதிகரித்துவிட்டது என்றும் அப்போது சிலர் விமர்சனம் செய்தார்கள். ஆனால், மெக்சிகோ அது குறித்துக் கவலைப்படாமல் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் இப்போது அங்கே அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!
துவக்கத்தில் மெக்சிகோதான் பன்றிக் காய்ச்சலின் குவிமையமாக வர்ணிக்கப்பட்டது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, மெக்சிகோவுக்கு முன்னால் அமெரிக்கா (353), பிரேசில் (192), அர்ஜென்டினா (165) முதலான நாடுகள் உள்ளன. அவற்றுக்கு அடுத்தபடியாகத்தான் மெக்சிகோ உள்ளது.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள புனே நகரத்திலும், மெக்சிகோவைப் போலவே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புனே மாநகராட்சி தன்னுடைய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ''பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்டால் மட்டும் போதாது. மொத்த நகரத்தின் நடவடிக்கைகளையும் முடக்கினால்தான் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். மெக்சிகோ மாடலைப் பின்பற்றி புனே நகரத்தை முழுவதும் மூட வேண்டும் என்று மாநில அரசை நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளோம்...'' என புனே மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்னொரு ஆபத்தும் அங்கே ஏற்பட்டிருக்கிறது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர்... தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தோ, தெரியாமலோ புனே நகரிலிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். அங்கே சாவு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அச்சமடைந்த அவர்கள் அங்கிருந்து வெளியேறினால்தான், உயிர்பிழைக்க முடியும் எனக் கருது கிறார்கள். இதனால் பன்றிக் காய்ச்சல் மேலும் புதிய பகுதிகளுக்குப் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, மகாராஷ்டிர அரசாங்கம் இனியும் தாமதிக்காமல் புனே நகர எல்லைகளை சீல் வைக்கவேண்டும்.
'புனேவுக்குப் பயணம் செல்வதை முடிந்தவரை தவிருங்கள்'எனத் தமிழக அரசு ஏற்கெனவே பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தற்போது நிலைமை மோசமாவதால், இது தொடர்பாக இன்னும் கடுமையான அறிவுறுத்தல் ஒன்றை வழங்குவதுபற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
|
Leave a Comment