அன்பார்ந்த தோழர்களே இந்தக் கூட்டம் இன்றைக்கு இருக்கிற சூழலை கணக்கில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதல்ல என்பதை துவக்கத்திலேயே நண்பர்கள் சொன்னார்கள். அந்தத் தருணத்தில் இதைப்பற்றி கேட்டபோது நான் கலந்துகொள்கிறேன் என்று சொன்னேன், இன்றைக்கு இந்தக் கூட்டத்திற்கு கூடுதலான ஒரு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. அது என்ன முக்கியத்துவம் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும், தமிழ்த்திரை உலகம் எங்கே போகிறது என்ற தலைப்பில் கருத்தரங்கம் என்று சொன்னபோது தமிழ்த்திரை உலகம் பற்றி சில பிரச்சினைகளை பேசுவதற்கான வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒப்புக்கொண்டேன் |
உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும், ஒரு திரைப்படம் எடுப்பதற்கு எவ்வளவு தொகை செலவாகுமென்று, ஏறத்தாழ இந்தியாவிலே அதிகமான சினிமா தயாரிக்கப்படுகிற ஒரு மொழியாக தமிழ் இருக்கிறது, இந்தத்துறையில் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும்கூட 1000த்திலிருந்து 2000 கோடி ரூபாய் ஒரு ஆண்டுக்கு திரைப்படத்துறையிலே முதலீடாக செய்யப்படுகிறது, இதன் டர்ன்ஓவர் என்று பார்த்தீர்களென்றால் 10,000 கோடி ரூபாய்க்கு மேலே இருக்கும், தமிழ்நாட்டின் பட்ஜெட்டுக்கு கூடுதலான தொகை புழங்குகிற ஒரு துறை அதிலிருந்து வருகிற இலாபம் என்பது எங்கே முதலீடு செய்யப்படுகின்றது என்று நாம் யாரும் சிந்திப்பதில்லை.
இன்றைக்கு தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் அரசியல்வாதிகளை கண்காணிக்க வேண்டும் என்கிற ஒரு முயற்சியை எடுத்து தேர்தலிலே போட்டியிடுகிறவர்கள் தங்களுடைய வருமான கணக்கை வேட்புமனு தாக்கல் செய்யும்போது கூடவே சொத்துக் கணக்கைக் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டதை நாம் கடந்த தேர்தலில் பார்த்தோம், எவ்வளவு வரி கட்டினார்கள், அவர்கள் பேரில் உள்ள சொத்து என்ன? என்று பத்திரிகைகளில் எல்லாம் வெளியிட்டார்கள், இந்தத் தலைவருக்கு இவ்வளவுதான் சொத்து, இந்த தலைவருக்கு இவ்வளவு கடன் இருக்கிறதாம் என்று அந்த வேட்புமனு சமயத்திலே பல்வேறு ஏடுகள் அதைச் செய்திகளாக்கின ஏன் என்றால் அவர்கள் பொய் கணக்கு காட்டுகிறார்கள் என்று அம்பலப்படுத்துவதாக அந்தச் செய்திகளை வெளியிட்டார்கள். இன்றைக்கு கூடுதலாக தகவல்கள் வருகின்றன. வேட்புமனு செய்தபோது சமர்ப்பிக்கப்பெற்ற அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் வருமான வரித்துறைக்கு அனுப்பி அங்கே அவர்கள் தாக்கல் செய்திருக்கிற கணக்கோடு சேர்த்து ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் ஏதும் பொய்க்கணக்கை காட்டியிருக்கிறார்களா என்று கண்டறியச் சொல்லி கேட்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆக தேர்தல் என்கிற ஒரு விசயத்தை ஒரு கண்காணிப்பின் கீழ் கொண்டுவருகிற முயற்சியை தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் செய்திருக்கின்றன. இது வரவேற்கப்படுகிற ஒரு முன்முயற்சி ஆகும், ஏனென்று சொன்னால் தேர்தலிலே செலவு செய்ய அனுமதிக்கப்பட்டத் தொகை எவ்வளவு ஆனால் உண்மையிலேயே செலவு செய்யப்படுகிற தொகை எவ்வளவு என்று நமக்கெல்லாம் தெரியும். தேர்தல் என்றாலே திருட்டுத் தனம்தான் என்பது இன்றைக்குப் பட்டவர்த்தனமாக இருக்கிறது. அப்படித்தான் திரைப்படம் என்பதும் திரைத்துறை என்பதும் திருட்டுத்தனத்தின் உறைவிடமாக இருக்கிறது. ஒரு துண்டுப்படம் எடுக்கவேண்டும் என்றால்கூட பத்திரிகைப் பாணியிலே சொல்லவில்லை ஒரு சிறிய படம் என்ற பொருளில் சொல்கிறேன் அந்த சிறிய படத்தை எடுக்க வேண்டும் என்று சொன்னால்கூட அதைப் பொய்க்கணக்கு எழுதித்தான் திருட்டுத்தனம் செய்துதான் எடுக்க முடியும் என்கிற ஒரு நிலை. இதில் யாரும் விதிவிலக்கு கிடையாது.
யாருமே தாங்கள் வாங்குகிற சம்பளத்தை அரசாங்கத்திற்கும் சொல்வதில்லை. மக்களுக்கும் சொல்வதில்லை. மக்களை ஏமாற்றுகிறார்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை நண்பர்கள் பத்திரிகை ஆசிரியர்கள் பலபேர் இங்கே எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அரசாங்கத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்குத் தெரியாத ஒரு விசயமல்ல. இதையெல்லாம் யார் கேட்பது. இது அரசாங்கம் செய்யவேண்டியப் பணி அல்லவா? மிகப்பெரிய பேரலல் எக்கனாமி (றிணீக்ஷீமீறீறீமீறீ ணிநீஷீஸீஷீனீஹ்) என்று சொல்வார்களே அப்படி, தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையிலே காட்டுகிற தொகையைவிட இந்தியாவின் நிதிநிலை அறிக்கையிலே காட்டுகிற தொகையைவிட டர்ன்ஓவர் அதிகம் கொண்டதாக சினிமா மூலதனம் இருந்து கொண்டு இருக்கிறது, அது முழுக்க முழுக்க சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது, அதை எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அங்கேதான் பிரச்சினை இருக்கிறது, அதை நாம் நேர்படுத்தாமல் இந்தத் திரைத்துறையிலே மேலே தெரிகிற பிரச்சினைகளை மேலே தெரிகிற குறைகளை நாம் தாக்கிக் கொண்டிருக்கிறோம்.
உங்களுக்கெல்லாம் தெரியும் எம்,ஜி,ஆர், கட்சி ஆரம்பிக்கும்போது அவருக்கு ஒரு இன்கம்டாக்ஸ் ரெய்ட் விட்டாங்க என்று சொன்னார்கள், இன்றைக்கு விஜயகாந்துக்கு அப்படி ஒரு நெருக்கடி தரப்பட்டதா என்று தெரியவில்லை, இன்றைக்கு சினிமாத்துறையினர் யாரையும் மிரட்ட வேண்டும் என்றால் ஐ,டி,ரெய்ட் செய்வார்கள், சமீபத்தில் பல நடிகர் நடிகைகள் வீட்டில் ரெய்டு நடந்தது நீங்கள் எல்லாம் பத்திரிகையிலே பார்த்து இருப்பீர்கள், ரெய்ட் விட்டால் போதும் அவர்கள் கப்சிப் என்று அடங்கிவிடுவார்கள், கட்டுப்படுத்திவிடலாம், ஆக, அவர்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகத்தான் சட்ட நடவடிக்கையை அரசாங்கம் பயன்படுத்துகிறதே தவிர தனது கடமையைச் செய்வதில்லை, இன்றைக்கு மக்களுடைய பணம் பெருமளவிலான வரிப்பணம் இழப்பீடு என்று சொன்னால், உங்களுக்கும் எனக்கும் வரவேண்டிய பணம் அது, நம்முடைய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படவேண்டிய பணம் அது. அவற்றையெல்லாம் எங்கே செலவிடுகிறார்கள்.
உங்களுக்கெல்லாம் தெரியும் தமிழ்நாட்டிலே அதிகமாக சம்பளம் வாங்கிய நடிகை என்று கே.பி. சுந்தரம்பாளைச் சொல்லுவார்கள், பக்த நந்தனார் படத்திலே நடித்ததற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்வார்கள், ஏறத்தாழ 50, 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே இருக்கலாம். இன்றைக்கு இருக்கின்ற நடிகர்கள், நடிகைகள் வாங்குகிற சம்பளம் உண்மையிலேயே அது ஐம்பது மடங்கு நூறு மடங்கு அதிகம், ஒரு அரசு ஊழியராக இருக்கிறவர் அல்லது தனியார் துறையிலே ஊழியராக இருக்கிறவர் ஏறத்தாழ 40 விழுக்காட்டை சம்பளத்திலிருந்து வரியாக செலுத்திக் கொண்டிருக்கிறார். மார்ச்சு மாதம் வந்துவிட்டதென்றால் ஆலாய் பரப்பது ஒவ்வொரு அரசு ஊழியனுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் இவர்கள் எவ்வளவு செலுத்துகிறார்கள். யாராவது ஒரு நடிகன் நான் வாங்கிய சம்பளத்திற்கு இத்தனை விழுக்காடு ஒழுங்காக வரி செலுத்துகிறேன் என்று சொல்லமுடியுமா? தமிழ்நாட்டைச் சேர்ந்த சிதம்பரம் அவர்கள்தான் நிதியமைச்சராக இருக்கிறார். இதை அவர் ஏன் கணக்கிலெடுத்துக்கொள்ளக்கூடாது. மிகத் துல்லியமாக கணக்கு எடுத்து ரூ,25,000 பணத்தை வங்கியிலிருந்து எடுத்தால் அதற்கு வரி கொடுடா என்று சொல்லி சட்டம் போட்டு, அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தைப் பெற்று கல்வி வளர்ச்சி மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்போகிறோம் என்று சொல்கிற ப. சிதம்பரம் ஏன் இந்தத் திரைத்துறையைக் கவனத்தில் எடுக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத்துறையினர் வரி கட்டினால் இந்தியா முழுமைக்கும் இருக்கிற குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்கலாம். தமிழ்நாட்டிலே இருக்கிற திரைத்துறையை கண்காணித்து இவர்களிடம் மட்டும் வரிவசூல் செய்தால் இந்தியாவில் இருக்கிற அத்தனை ஏழைக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி கொடுக்கலாமே! ஏன் இது சிதம்பரத்திற்குத் தெரியாதா? ஆகவே, நண்பர்களே நாம் இப்படி தனிப்பட்ட நடிகர், நடிகைகளை விமர்சிப்பதை விட்டுவிட்டு சரியாக, சரியான இலக்கு எது என்று அடையாளம் கண்டு நாம் அடிக்க வேண்டும். தமிழ்த்திரைத்துறையை அரசின் நேரடி கண்காணிப்பின்கீழ் கொண்டுவா இதை ஒழுங்குபடுத்து என்று போராட வேண்டும். இந்தப் போராட்டத்தை நாம் நடத்த வேண்டும். இதை இங்கே வந்திருகிற பத்திரிகை ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் முன்பாக கோரிக்கையாக முன்வைக்கிறேன்.
அடுத்ததாக இன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிற பிரச்சினையான குஷ்பு பிரச்சினையை நாம் பார்ப்போம். ஒரு பக்கம் முற்போக்கான கருத்துக்களை கொண்டிருக்கிறவர்கள், அவர்கள் சொல்லுகிற வெளிப்படுத்துகிற கருத்துக்கள். ஆதங்கங்கள், இன்னொரு பக்கம் சாதாரண மக்களிடமிருந்து கிளம்புகின்ற எதிர்ப்புகள். இந்தப் பிரச்சனை எப்படி துவங்கியது? இந்தியா டுடே பத்திரிகை ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் விருந்தினர் பக்கம் என்ற பகுதியில் குஷ்புவிடம் மூன்று கேள்விகளைக் கேட்டார்கள். இந்த கருத்துக் கணிப்பு ஏன் நடந்தது? இதை நாம் பார்க்க வேண்டும். இந்தியா டுடே தமிழில் மட்டும் வெளிவரவில்லை. அது ஒரு ஆங்கிலப் பத்திரிகை. அது அவர்களுடைய எல்லா பதிப்புகளிலும் கவர் ஸ்டோரியாக வந்துள்ளது. இந்தியா டுடே செக்ஸ் கவர் ஸ்டோரி பண்ணும்போது போட்டி காரணமாக அதே வாரத்தில் அவுட்லுக் பத்திரிகையும் இந்த செக்ஸ் பிரச்சினையை கவர் ஸ்டோரியாக பண்ணுகிறார்கள். பத்திரிகைத்துறையில் இருக்கிற போட்டி காரணமாக அவர்களும் செய்தார்கள். ஆண் விபச்சாரிகளைப் பற்றி அவர்கள் கவர்ஸ்டோரி செய்தார்கள். இந்த இரண்டு இதழும் எதற்காகச் செய்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
வருடத்தில் இரண்டு முறையாவது இப்படி செக்ஸ் சம்பந்தமான சர்வேக்களை இதழ்கள் வெளியிடுவது அவற்றைத் தொடர்ந்து கூர்மையாக கவனிப்பவராக இருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பத்திரிகை துறை நண்பர்கள் பலபேர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். இதுமாதிரியான விசயங்களை ஸ்டாக் செய்து வைத்துக் கொள்வார்கள். இதை முன்பே எடுத்துவைத்துக் கொள்வார்கள். எப்பொழுதெல்லாம் பத்திரிகை விற்பனையிலே ஒரு தொய்வு ஏற்படுகிறதோ அப்போது அதைப் போடுவார்கள். சினிமா தியேட்டரில்கூட பார்க்கலாம். தீபாவளிக்கு முன்பு ஒரு இடைவெளி இருக்கும். புதுப்படம் வருவதற்கு முன்பு ஒரு இடைவெளி இருக்கும். பெரும்பாலான தியேட்டர்களில் இந்த மாதிரியான நேரத்தில் செக்ஸ் படங்களைப் போட்டு காசு பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அதேபோல பத்திரிகையில் விற்பனையில் தொய்வு ஏற்படுகிற காலத்திலே பரபரப்பான அரசியல் செய்திகள் இல்லாத காலத்திலே அவர்கள் உடனே இந்த ஸ்டாக்கிலிருந்து எடுத்து ஒரு கவர் ஸ்டோரி போடுவார்கள். இது முழுக்க முழுக்க வியாபாரத்திற்காகச் செய்கிற ஒரு மலிவான யுக்தி. அந்த சமயத்திலே அது தொடர்பான பொருட்களுக்கும். ப்ராடக்டுகளுக்கும் விளம்பரம் வாங்குவார்கள். செக்ஸ் சர்வே வெளியான இந்தியாடுடே, அவுட்லுக் பத்திரிகைகளை நீங்கள் பார்த்தீர்களென்றால் ஆணுறைகளுக்கான விளம்பரம் வந்துள்ளது. நாங்கள் ஸ்பெஷல் பண்ணப் போகிறோம். நீங்கள் விளம்பரம் தரவேண்டும் என்று கேட்டு வாங்குவார்கள். இது வணிகப் போட்டியிலே வியாபாரத்திற்காக செய்யப்படுகிற ஒரு விசயம். இப்படியான செக்ஸ் சர்வேக்கள் உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படி கிடைக்கின்ற சர்வே முடிவுகளை என்ன செய்கிறார்கள் என்றால், தங்களுடைய ஆராய்ச்சியின் அங்கமாக மாற்றுகிறார்கள். மக்களுடைய பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கிறது. மக்களுடைய ‘செக்சுவல் பிஹேவியர்’ எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து சேகரிக்கப்படுகிற செய்திகள் பல்வேறு திட்டங்களுக்குப் பின்புலமாக அமைகின்றன. இது பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஆய்வுகளை மேற்கொள்ளுகிறவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், அப்படியான தகவல்களை வெகுமக்கள் மத்தியில் பரப்பும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
காலாவதியான கற்பு என்ற தலைப்பிலே இந்தியா டுடே குஷ்புவின் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது. அதற்குக் கீழே என்ன போட்டிருக்கிறார்கள் என்றால் 82 விழுக்காடு சென்னைப் பெண்கள் திருமணம் ஆகும்போது பெண்ணின் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை ஹைலைட் பண்ணியிருக்கிறார்கள். அப்படி என்றால் இந்தத் தகவலை எல்லாம் சொல்லித்தான் குஷ்புவிடம் பீர்முகமது என்கிற பத்திரிகையாளர் அந்த கருத்தைக் கேட்கிறார். அப்போதுதான் அவர் கருத்து சொல்லியிருக்கிறார். பீர்முகமது என்பவர் சொன்னவற்றின்மீதுதான் அவர் கருத்து சொல்லியிருக்கிறார். ஏனென்றால் அவருக்குத் தமிழே ஒழுங்காகத் தெரியாது. அவர் ஜெயா டிவியில் நடத்துகிற நிகழ்ச்சியைப் பார்த்தீர்களென்றால் என்ன மாதிரி அவர் தமிழ் பேசுகிறார் என்று உங்களுக்குத் தெரியும். அதைத் தொகுத்து எழுதியிருக்கிறார்கள். இந்தியா டுடேவில் அவர் சொன்ன கருத்துக்கள் பெரிய விசயமில்லையே அந்த கருத்துமீது ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்குப் பின்னாலே அவர் தினத்தந்தி பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும்போதுதான் தமிழ்நாட்டிலே திருமணத்திற்கு முன்பு அப்படி உறவு கொள்ளாத பெண்கள் எத்தனைபேர்? என்று கேட்டதற்கு பின்னாலேதான் அது ஒரு பிரச்சனையாக மாறுகிறது. ஏனென்றால் இன்றைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் 90 விழுக்காட்டினர் நிச்சயமாக இந்தியா டுடேவில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று படித்திருக்கமாட்டார்கள். அதைப் படிக்கிற வாசகர்கள் அல்ல அவர்கள். எது பரவலாகப் போகிறது என்றால் தினத்தந்திதான் அந்த செய்தியை மிகப் பரவலாகக் கொண்டு போகின்றது. அதற்குப் பின்புதான் அதற்கான எதிர்ப்பு தன்னிச்சையாக மேலெழுந்து வந்தது, இப்போ அவர் சொன்ன கருத்து சரியா? தவறா என்பதிலே பல பெண்ணியவாதிகள், முற்போக்கான சிந்தனை உடையவர்கள் எல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு மனோத்தத்துவ நிபுணர் கிடையாது. அப்படியானவர் இந்த கருத்தை சொல்லியிருந்தால் அதற்கு வருகிற எதிர்வினை வேறு. இவர் கல்வியாளராக இருந்து இதே கருத்தை சொல்லியிருந்தால் அதற்கு இப்படியான எதிர்வினைகள் நிச்சயமாக ஒருபோதும் வந்திருக்காது. இன்னும் சொல்லப்போனால் இதைவிடக் கடுமையான தொனியிலே இன்றைக்குப் பல பெண் கவிஞர்கள் நல்ல கவிதைகளை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கெல்லாம் இப்படி பிரச்சனை ஏற்படவில்லை. விமர்சனம் வந்தது, விவாதம் என்கிற அளவிலே நடந்து கொண்டிருக்கிறதே தவிர இப்படியான எதிர்வினை வரவில்லை. ஆனால். ஏன் இவர் சொன்னதற்கு எதிர்ப்பு வருகிறது என்று சொன்னால் இதை மற்ற விசயங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
திருமணம் ஆவதற்கு முன்பு நீங்கள் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமானால் பால்வினை நோய்வராமலும். கர்ப்பமாகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால், மறைமுகமாக என்ன சொல்கிறார் என்றால் ஆணுறையைப் பயன்படுத்தி உறவு வைத்துக் கொள்ளுங்கள் என்ற ஆலோசனையைத்தான் சொல்லுகிறார். இதுவுகூட யாரும் சொல்லாத ஒன்றல்ல. இந்த ஆலோசனையைப் பல பேருந்துகளில் பார்த்திருக்கலாம், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிற விளம்பரங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். உங்கள் மனைவியைத் தவிர மற்றவர்களோடு நீங்கள் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள், இல்லையென்றால் எய்ட்ஸ் வந்துவிடும். எனவே ஆணுறை அணிந்து உறவு கொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற அரசாங்கத்தின் விளம்பரங்களைப் பார்த்திருக்கலாம், அவை எல்லாமே முறையற்ற பாலுறவு சமயத்தில் ஆணுறையைப் பயன்படுத்துங்கள் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.
அறிமுகமற்ற ஒரு ஆளோடு உறவு வைத்துக் கொள்ள நேரும்போது இப்படியான தற்காப்புகள் தேவை. யாரென்றே தெரியாதவனோடு நீங்கள் பாலுறவு வைத்துக் கொள்ளுங்கள் தப்பில்லை. ஆனால், அதில் தற்காப்போடு நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்வதாகத்தான் அதற்குப் பொருளாகிறது. அப்போதுதான் இந்தப் பிரச்சினை வந்தது. அப்படி என்றால், எல்லோரையும் முறை தவறிய நடத்தை உள்ளவர்களாக சித்தரிக்கிறீர்களா என்கிற கோபம் வருகிறது. சாதாரண மக்களிடம் இருந்து ஏன் கோபம் பிறீட்டு வருகின்றது என்று சொன்னால், நேரிடையாக அவர் தமிழ்ப் பெண்களை விபச்சாரிகள் என்று சொன்னாரா? அவர்கள் நடத்தை கெட்டவர்கள் என்று சொன்னாரா? என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள்? அப்படிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் மற்ற விசயங்களோடு நீங்கள் இணைத்துப் பார்த்தீர்களென்றால் அதுதான் அதற்குப் பொருளாகிறது. அதனால்தான் இந்த எதிர்ப்பு என்பது வருகிறது.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்கள் குஷ்பு நாட்டைவிட்டே ஓடவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இது சரியா? தமிழ்த்தேசிய இனவெறி கோஷமல்லவா? என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். இதே குஷ்புவுக்கு கோவில் கட்டிய நாடு என்று ஆரம்பத்திலேயே நண்பர் பாண்டியன் இங்கே சுட்டிக்காட்டினார். அப்போதெல்லாம் அவர் பேருக்கு என்ன பொருள்? அவர் என்ன மொழி பேசுவார்? என்ன மதத்தைச் சேர்ந்தவர்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? என்று யாரும் கேட்கவில்லை. அவர் வெற்றிப்பட நாயகியாக இருந்தார் என்று சொன்னால் இந்தப் பாகுபாட்டை எல்லாம் யாரும் பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம். அப்படி உங்களை வணங்குகின்ற ஒரு நிலைக்கு இந்த சமூகம் உயர்த்துகிறது என்று சொன்னால் அதை சந்தோசமாக பார்த்துக் கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னால் நீங்கள் அதை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருளாகும்.
ஒழுக்கம் என்கிற பெயரில்தான் தங்கர்பச்சான் மீது நீங்கள் பாய்ந்தீர்கள், அவர் என்ன பேசினார் என்பது தெரியாது. அவர் மன்னிப்பு கேட்பது ஒரு காட்சிப் பொருளாக்கப்பட்டது, டி.வி. காமிராவுக்கு முன்பாக நிறுத்தப்பட்டு கைகூப்பி மன்னிப்பு கேட்கிற ஒரு காட்சி தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் பூராவும் ஒளிபரப்பப்பட்டது, அதுமாதிரி பொது இடத்திலே நிறுத்தி அவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அதை காட்சிப் படுத்தி குதூகலித்தார்கள். மனோரமா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்கமாட்டோம் என்று குஷ்பு சொல்லும்போது அவர் எதை அடிப்படையாக கொண்டிருந்தார் என்றால் இந்த ஒழுக்கம் என்பதைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தார். அதைச் சொல்லி ஒரு பத்து நாட்களில் அப்படியெல்லாம் ஒன்று தேவை இல்லை நாம எல்லோரும் ஃப்ரீயாக இருக்கலாம் என்று அவரே சொல்லுகிறபோதுதான் பிரச்சனை வருகிறது. அதே இதழிலே சுகிர்தராணி என்கிற கவிஞர் இதைவிடக் கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ஒரு பெண்ணிய கவிஞர் சிறுபத்திரிகைகளை படிக்கிற நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படியான விவாதங்களிலே கடுமையான ஒரு நிலைப்பாட்டை பெண்ணிய பார்வை கொண்டு மிக வெளிப்படையாகக் கருத்து சொல்பவர். நல்ல கவிதைகளை எழுதுபவர் சுகிர்தராணி. அவருடைய கருத்துக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஏனென்றால் தினமும் பேசிக்கொண்டு இருக்கிறார். எழுதிக் கொண்டிருக்கிறார். அந்தக் கருத்திலே உறுதியாக இருக்கிறார். ஒரு பக்கத்திலே ஒழுக்கத்தைப் பேசிவிட்டு ஒரு பத்து நாளிலே அதை மீறுவதுபோல் பேசினால் அதுதான் பிரச்சனை. அதனால்தான் உங்களுக்கு எதிர்ப்பு வருகின்றது. உங்களை தெய்வமாக சித்தரித்தபோது அதை ரசித்து ஏற்றுக் கொண்டதும் நீங்களே. ஒழுக்கம் என்ற பெயரிலே தங்கர்பச்சான் மீது தாக்குதல் தொடுத்ததும் நீங்களே. அதனால்தான் இன்றைக்கு நீங்கள் தாக்கப்படுவதற்கான இலக்காக மாறியிருக்கிறீர்கள். இதை குஷ்பு புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்ததாக இன்றைக்கு இந்து நாளிதழிலே `மாறல் பொலிசிங்’ என்ற தலைப்பிலே தலையங்கம் எழுதி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சனையைப் பற்றி இந்துவிலே ஒரு செய்தியையும் இதுவரை நீங்கள் பார்த்திருக்க முடியாது. இன்றைக்கு ஒரு தலையங்கமாக வந்திருக்கிறது. ஏன் என்றால் பார்க் ஓட்டல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு அந்த ஓட்டல் உரிமம் 90 நாட்கள் முடக்கப்பட்டதற்கு பின்னாலே அது ஒரு ஸ்டார் ஓட்டல் என்பதினாலே இந்து தலையங்கம் எழுதுவதற்கான ஒரு நிலையை எடுத்து இருக்கிறது. ஒரு பொறுப்புணர்வோடு எழுதப்பட்டிருக்கிற நல்ல தலையங்கம் அது.
மாறல் பொலிசிங் என்பதை யார் செய்கிறார்கள். அதைப் பற்றி கருத்துக் கேட்ட பல பத்திரிகை நண்பர்களிடத்திலே நான் கேட்டேன். இந்த பார்க் ஓட்டல் பிரச்சினை தினமலர், தமிழ்முரசு பத்திரிகைகளுக்கு இடையேயான போட்டி. அந்த இரவு நடனத்தை இவர்கள் போய் படம் பிடித்து அதை பிரசுரித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கமிஷனர் நட்ராஜிடம் கேள்வி கேட்கிறார்கள். இந்த மாறல் பொலிசிங்கை செய்வது விடுதலைச் சிறுத்தைகளோ பா.ம.க.வோ, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கமோ கிடையாது. இந்த மாறல் பொலிசிங்கை செய்வது தமிழ்முரசும், தினமலரும்தான். தமிழ் முரசுவின் சென்னை பதிப்பு ஆரம்பிக்கப்பட்டதுமே அதன் விற்பனையைப் பெருக்குவதற்காக இதுமாதிரி அதிரடி வேலைகளில் அவர்கள் இறங்கிவிட்டார்கள். ரெண்டு ரூபாய் பத்திரிகைக்கு அஞ்சு ரூபாய் கோதுமை மாவு அது இது என்று கொடுக்கிறார்கள் என்பது வேறு. அதுமட்டுமல்லாமல் இப்படி மலிவான செய்திகளை பரப்பரப்பான செய்தியாக மாற்றுகிற ஒரு வேலை, அவர்களுக்கு விஷ§வல் மீடியம் இருக்கிறது. ஏறத்தாழ தென்மாநிலங்களில் முழுவதும் பரவியிருக்கிற அவர்கள் சாம்ராஜ்யத்தில் அது பெரிய அளவிலே செய்தியாக்கப்படுகிறது. இன்றைக்கு இந்தப் பிரச்சினை ஊதி பெரிதாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது என்று சொன்னால் முக்கியமாக அது சன் தொலைக்காட்சி, தமிழ்முரசு போன்ற ஊடகங்களின் வேலை. முழுக்க முழுக்க திட்டமிட்டு நடத்தப்படுகிற நாடகம் அது. இதைப்பற்றி பேசுங்கள் என்றால் அய்யோ அதைப் பற்றிப் பேசமுடியாதுங்க. தயாநிதி மாறனைப் பற்றி எழுதினால் சன் டி.வி.யைப் பற்றி எழுதினால் அதைப் போடமாட்டாங்க என்று அந்த பத்திரிகையாள நண்பர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால், திருமாவளவனைப் பற்றி எழுதலாம், ராமதாசைப் பற்றி எழுதலாம் ஆனால் தயாநிதி மாறனையோ, சன் டி.வி.யையோ பற்றி எழுதமுடியாது, இதை எழுதமுடியவில்லை என்றால் உங்களுக்கு என்ன நேர்மை இருக்கிறது என்று கேட்கிறேன்.
இங்கே போட்டி ஜர்னலிசம் நடத்திக்கிட்டு பீச்சுல உட்கார்ந்து இருப்பவர்களை போட்டோ எடுத்து போட்டுக்கிட்டு நீங்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூகத்திலே ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தினமலர் இன்னும் கூடுதலாகப் போகிறது. குஷ்புவுக்கு ஆதரவாக முஸ்லீம்கள் என்று முதல் பக்கத்திலே பெரிய செய்தியாகப் போடுகிறார்கள். அதனாலேதான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறது. கூடுதலாக இதில் குஷ்புவை இசுலாமியர் என்று அடையாளம் காட்டுவதன்மூலம் இசுலாமியர்களைத் தாக்குதல் நடத்துவதற்கான இலக்காக காட்டுவதன்மூலம் இந்துத்துவ கேடுகேட்ட அரசியலை அவர்கள் கையாளுகிறார்கள். மாறல் பொலிசிங்கை செய்பவர்கள் யார்? விடுதலை சிறுத்தைகளா? பா.ம.க.வா? அல்லது தமிழ்ப்பாதுகாப்பு இயக்கமா? இந்த மாறல் பொலிசிங்கை செய்வது இந்த பத்திரிகைகள்தான். இன்றைக்கு சன் தொலைக்காட்சியும், தமிழ்முரசு பத்திரிகையும், தினமலர் பத்திரிகையும்தான் இதை செய்கிறார்கள். இவர்கள் இதைச் செய்வதனால் வார ஏடுகளான நக்கீரன், ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், போன்ற ஏடுகள் ஊதிப் பெரிசு பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு இவர்களால்தான் இந்த பதற்றம் ஏற்படுகின்றது. இதிலே இவர்களுடைய சனநாயகத்தன்மை என்ன என்பதை நீங்கள் உற்றுப்பார்க்க வேண்டும்.
பத்திரிகைகள் நடத்துவதைப்பற்றி சொன்னார்கள். தமிழ்நாட்டில் அச்சு ஊடகங்கள் நடத்துவதற்கு ஏறத்தாழ 300, 400 வருட வரலாறு இருக்கிறது. இந்து பத்திரிகை 125 வருட விழாவை கொண்டாடி இருக்காங்க. இந்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட பத்திரிகைத்துறை என்பது முழுக்க முழுக்க சனநாயகமற்றதாக இருந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக சன் தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டால் 13 தொலைக்காட்சி சேனல் இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் விசாரித்த அளவில் தமிழ்நாட்டிலே ஒரு மாவட்ட நிருபர்கூட அதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அதிலே நிருபராகக் கூட இல்லை. செய்தியாளராக இல்லை எந்த ஒரு வேலையும் செய்கிறவர்களாக தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை. இவர்கள் என்ன சமூகநீதியைப் பற்றிப் பேசுகிறார்கள். தனியார் துறையில் இடஒதுக்கீட்டைப் பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இதைப் பற்றி பேசுவதற்கு கருணாநிதிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இதைப்பற்றி நாங்கள் இன்றைக்கு புள்ளி விவரங்கள் சேகரித்து இருக்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு சேகரிக்கப்பட்ட புள்ளி விவரம் இது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலே 2003 ஆம் ஆண்டு மொத்தமாக 930 தலையங்கங்கள் எழுதியிருக்கிறார்கள். அதில் 7 தலையங்கங்கள்தான் தலித் பிரச்சினை பற்றியது. 2004ஆம் ஆண்டு அதே இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலே 939 தலையங்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதிலே ஒரே ஒரு தலையங்கம் தான் தலித் பிரச்சினை பற்றியது. அடுத்ததாக இந்து பத்திரிகையிலே 2004லே 718 கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதில் இரண்டே இரண்டு கட்டுரைகள்தான் தாழ்த்தப்பட்ட மக்களுடைய பிரச்சினை பற்றியது. அதிலே 719 தலையங்கம் எழுதப்பட்டிருக்கின்றன. அதிலே ஒன்றுகூட தாழ்த்தப்பட்ட மக்களுடைய பிரச்சினையைப் பற்றி கிடையவே கிடையாது. இதுதான் இந்து பத்திரிகையினுடைய இந்தியன் எக்ஸ்பிரசினுடைய சனநாயகம். இன்னொரு செய்தி, தீக்கதிர் பத்திரிகை 2004லே 365 தலையங்கங்களை எழுதியிருக்கிறது. ஒன்றுகூட தாழ்த்தப்பட்ட மக்களுடைய பிரச்சினையைப் பற்றி எழுதவில்லை. 714 கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் 4 கட்டுரைகள் மட்டும்தான் தாழ்த்தப்பட்ட மக்களுடைய பிரச்சினை பற்றியது. இவர்கள் செய்தி வெளியிடுகிற நிலையிலும் சரி அங்கே பணியாளர்களை அமர்த்துவதிலும் சரி எந்த சனநாயகத் தன்மையையும் எந்த சமூக நீதியையும் கடைப்பிடிக்காதவர்கள். இன்றைக்கு எப்படி தமிழத்திரை உலகம் மக்கள் விரோதமாக இருக்கிறதோ அதற்குக் கொஞ்சமும் குறையாமல் மக்கள் விரோத சனநாயக விரோதமாக இருப்பது பத்திரிகைத்துறை இவற்றை சனநயாகப்படுத்துவதற்கு நாம் போராட முன்வரவேண்டும். அதைவிட்டுவிட்டு நாம் பிரச்சினை அல்லாத பிரச்சினைகளை விரட்டிக்கொண்டு போகக்கூடாது.
இன்றைக்கு பத்திரிகையிலே அவர்களே ஒரு செய்தியைப் போட்டு இந்தப் பிரச்சினைக்காக என்ன போராட்டம் அறிவிக்கப்போகிறீர்கள் என்று கேட்டு, அரசியல் கட்சிகளைத் தொடர்ந்து மீடியாதான் இயக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அரசியல் கட்சியின் செயல்பாட்டை தீர்மானிப்பதே மீடியாவாக இருக்கிறது. இதனால் நம்முடைய போராட்ட யுக்திகளே மாறிப்போயுள்ளது. டி.வி.கேமிரா வந்தவுடன்தான் ஆர்ப்பாட்டம் தொடங்குகிறது. அதற்காகவே பெரிய பேனர்களை எழுதுகிறோம். இப்படி நம்முடைய போராட்ட யுக்திகளிலே பல மாற்றங்களை இன்றைக்கு மீடியா செய்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நினைத்தபடி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை நாம் தொடர்ந்து அனுமதிக்கக்கூடாது.
அடுத்ததாக மிக முக்கியமான ஒரு வேண்டுகோளை நான் உங்கள்முன் வைக்க விரும்புகிறேன். குறிப்பாக, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தோழர்களுக்கு, இன்றைக்கு சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலே கர்நாடக மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ் மாநிலம் விளங்கிக் கொண்டிருக்கிறது, அதிலே மிக நுட்பமான மோசடி நடக்கிறது. அதிலே மொழிச் சிறுபான்மை என்ற கேட்டகிரியிலே இன்றைக்கு பல சுயநிதி கல்லூரிகளை திறந்து இருக்கிறார்கள். உச்சநீதி மன்றத்திலே இப்போது தீர்ப்பு கொடுத்தார்களே அந்த பெஞ்ச்சுக்கு முன்னாலே 11 பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் 6 அம்சங்கள் மொழிச்சிறுபான்மை பற்றியது. அந்த 6 அம்சத்திற்கும் உச்சநீதிமன்றம் பதில் சொல்லாமல் இதை நீ வேறு கோர்ட்டில் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு கொள்ளையடிப்பதற்கும் சமூக நீதியை குழிதோண்டிப் புதைப்பதற்கும் மட்டும் உத்தரவு போட்டிருக்கிறது. சுயநிதிக் கல்லூரிகளை மொழிச் சிறுபான்மையினர் நடத்துகின்றோம் என்ற பெயராலே ஒரு பெரிய கொள்ளை இங்கே நடந்து கொண்டிருக்கிறது. இப்படித் தமிழர்கள் அண்டை மாநிலங்களில் ஆந்திராவிலே. கேரளாவிலே, கர்நாடகாவிலே யாராவது மொழிச் சிறுபான்மையினராக இருந்து இப்படி சுயநிதிக் கல்லூரிகளை நடத்துகிறார்களா? என்று நீங்கள் புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும். இங்கே எத்தனை பேர் இப்படி சுயநிதி கல்லூரிகளை நடத்துகிறார்கள் என்பதை நீங்கள் கண்டறிந்து இப்படி நடக்கிற மிகப்பெரிய மோசடியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டு வாய்ப்புக்கு நன்றி கூறுகிறேன், வணக்கம்.
(8-10-2005 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் `தமிழ்த் திரையுலகம் எங்கே போகிறது?’ என்ற தலைப்பில் தாய்மண் பத்திரிகை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் ஆற்றிய உரை,) தொகுப்பு : பெரிய ஊர்சேரி அ, தமிழ்முரசு |
|
Leave a Comment