கார்ப்பரேட் இந்துத்துவாதான் பாஜகவின் கொள்கை

Views : 23

பதிவு செய்த நாள் 08-Jan-2020

தோழர்களே வணக்கம்!

ஹைட் ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.சிதம்பரம் பகுதியில் ஓஎன்ஜிசிக்கும்,நாகை மாவட்டத்தில் வேதாந்தா என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கும் இந்த லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.கடந்த மாதம் இறுதியில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.அந்த செய்தி வெளியானதும் திமுக சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அதற்கு அடுத்ததாக இங்கே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.

இந்த வேதாந்தா கம்பெனி என்பது யார்?தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான புற்று நோயாளிகளை உருவாக்கிய நிறுவனம்; சுற்றுச்சூழலை பாழாக்கிய நிறுவனம்; 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட தூண்டுதலாக இருந்த நிறுவனம்.அந்த நிறுவனத்துக்குத்தான் இப்போது லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.மோடி அரசு வேதாந்தாவுக்குக் கடன்பட்டிருக்கிறது.2014 ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜகவுக்கு மிக அதிக அளவில் நன்கொடை கொடுத்த கார்ப்பரேட் கம்பெனி வேதாந்தாதான்.அந்த நன்றிக்கடனைத் தீர்க்கவே இப்போது ஹைட்ரோ கார்பன் லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் மட்டுமல்ல வேதாந்தா கால் வைத்த இடமெல்லாம் கலவரம் தான், வன்முறைதான்.ஒடிஸாவில், சத்தீஸ்கரில், கோவாவில், ராஜஸ்தானில் அலுமினியம், இரும்பு, பாக்ஸைட் சுரங்கங்களை வேதாந்தா வைத்திருக்கிறது.அங்கு மக்கள்மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.போலீஸையும், ராணுவத்தையும் வைத்து மக்களை அடக்கி ஒடுக்கித்தான் அங்கு சுரங்கத் தொழிலை வேதாந்தா நடத்துகிறது.ஆதிவாசி மக்களை நசுக்கி அவர்களது நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறது.அதனால் ஒடிசாவின் ஆதிவாசி மக்கள் வேதாந்தாவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்தியாவில் மட்டுமல்ல வேதாந்தாவின் சுரங்கங்கள் இருக்கும் ஆப்ரிக்க நாடுகளிலும் அதுதான் நிலைமை.ஜாம்பியாவில் அதன் சுரங்கத்தை எதிர்த்து மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்திவருகின்றனர்.தூத்துக்குடியைப்போல டெல்டா மாவட்டங்களையும் பாழாக்குவதற்குத்தான் வேதாந்தாவுக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வேதாந்தா நிறுவனம் மட்டுமல்ல எல்லாவிதமான கார்ப்பரேட்டுகளுக்கும் சேவை செய்வதே மோடி அரசின் முன்னுரிமை.இப்போது பெட்ரோல் நூறு ரூபாயை எட்டப்போகிறது.பெட்ரோல், டீசல் மீது வரியைப் போட்டு ஏழை எளிய மக்களிடம் வழிப்பறி செய்து கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு சம்பாதித்துள்ளது.அந்தப் பணத்தை ஏதாவது நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறதா என்றால் இல்லை.அந்தப் பணத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்குக் கொண்டுபோய் கொடுக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடன்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மூன்று லட்சத்து பதினாறாயிரம் கோடி ரூபாய்  தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.நமது பாக்கெட்டுகளிலிருந்து எடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்குக் கொடுக்கிறது.இங்கே இருக்கும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் ஐந்தாயிரம் பத்தாயிரம் கடன் வாங்கினால்கூட கறாராக வசூலிப்பவர்கள்.விவசாயிகள் கடன் வாங்கினால், வாகனக் கடன் வாங்கினால் இரண்டு தவணை கட்டாவிட்டால் ஜப்தி செய்பவர்கள்.கல்விக் கடன் வாங்கி கட்டத் தவறினால் அவமானப்படுத்தி தற்கொலைசெய்ய வைக்கும் வங்கிகள், கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்கிறார்கள்.இதுதான் மோடி அரசின் புதுவிதமான இந்துத்துவா.

இந்துத்துவா என்றால் சாதாரண மக்களிடம் மத உணர்வைத் தூண்டி அதை வைத்து அரசியல் லாபம் அடைந்தது பழைய அணுகுமுறை.இப்போதைய இந்துத்துவா கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யவே பயன்படுத்தப்படுகிறது.இது ‘கார்ப்பரேட்இந்துத்துவா’.கார்ப்பரேட்டுகளுக்கு அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்தி லாபம் சம்பாதித்துக் கொடுப்பது, அந்த லாபத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்துத்துவா பயனடைகிறது.பிரதமர் மோடி வெளி நாடுகளிலேயே இருக்கிறார், தேர்தல் கூட்டங்களில் பேசுவதற்காகத்தான் இந்தியாவுக்கு வருகிறார்.அவர் இங்கிலாந்துக்குப் போனபோது அவரை வரவேற்று பிரம்மாண்டமான விளம்பரங்களைச் செய்தது வேதாந்தா. வேதாந்தா நிறுவனம் பிரதமர் மோடிக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் நெருக்கமானது.அதனால்தான் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் காரரான நீதிபதி ஏ.கே.கோயல் இப்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்துகொண்டு எப்படியாவது வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். 

இந்தியாவின் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்துத் தருவதற்காக இப்போது மோடி அரசு புதிய கொள்கை ஒன்றை உருவாக்கியிருக்கிறது.‘ஓப்பன் ஏக்கரேஜ் லைசென்ஸிங் பாலிசி’ என்பதுதான் அந்தக் கொள்கை.இதற்கு முன் எண்ணெய் எரிவாயு வளம் எங்கெங்கே இருக்கிறது என்பதை ஓஎன்ஜிசி கண்டறிந்து அரசுக்கு சொல்லும்.பிறகு அதை ஏலம் விடுவார்கள்.மோடி அரசு உருவாக்கியுள்ள கொள்கையோ எண்ணெய் எரிவாயு வளம் எங்கெங்கே இருக்கிறது என்பதை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளே சொல்லலாம் என மாற்றிவிட்டது.அது மட்டுமல்ல அவர்களுக்கு ஒதுக்கப்படும் பரப்பளவைவிட அதிகமாகவும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அனுமதிக்கிறது.இப்போது 55 ப்ளாக்குகளை ஏலம் விட்டிருக்கிறார்கள்.அது சுமார் அறுபதாயிரம் சதுர கிலோமீட்டரை உள்ளடக்கியது.இந்த 55 லைசென்ஸில் 41 லைசென்ஸ் வேதாந்தாவுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.அது யதேச்சையாக நடந்திருக்காது.இந்தத் துறையில் பெரிய முன் அனுபவம் இல்லாத வேதாந்தாவுக்கு எப்படி இத்தனை லைசென்ஸுகள் கிடைத்தன?இதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மோடி அரசின் ‘கார்ப்பரேட் இந்துத்துவாவுக்கு’ இங்கே இருக்கும் அதிமுக அரசு உடந்தையாக இருக்கிறது.தமிழ்நாட்டின்மீது மோடி அரசால் திணிக்கப்படும் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்ப்பதற்கு மாறாக அதற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.கடந்த வாரம் தமிழக அரசு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியானது.‘பெரிய திட்டங்களை செயல்படுத்தும்போது பொதுமக்களின் கருத்தறியும் ‘பப்ளிக் ஹியரிங்’ நடத்தப்பட வேண்டும் என்பது விதி.அந்த விதி இருப்பதால் பல்வேறு திட்டங்கள் தாமதிக்கின்றன, தனியார் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படுகிறது, எனவே அந்த விதியிலிருந்து விலக்களிக்கவேண்டும்’ எனத் தமிழக அரசு கேட்டுள்ளது.வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே அதிமுக அரசு இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.

நாம் இந்தத் திட்டத்தை சுயநலத்தின் அடிப்படையில் எதிர்க்கவில்லை.இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வொருவருக்கும் பத்து ஏக்கர், இருபது ஏக்கர் நிலம் இருக்கிறது.அந்த நிலம் பாழாகிவிடும் என நாம் எதிர்க்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் எவரும்  மீன்பிடித் தொழிலில் இல்லை, நமது லாப நட்டத்தை நினைத்து மீன் வளம் பாதிக்கும் என்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை.தன்னலம் இல்லாமல் தமிழக நலனை மட்டுமே கருத்தில்கொண்டு இந்தப் போராட்ட களத்தில் நாம் இருக்கிறோம்.மாநில நலனைக் காப்பாற்றுவதற்கான களத்தில் எப்போதுமே முதலில் நிற்கும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

 

இங்கே பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவாசகம் ஒரு நல்ல ஆலோசனையைக் கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தோடு நிறுத்திவிடக்கூடாது, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு ஒன்றை சிதம்பரத்தில் அமைக்கவேண்டும், ஒவ்வொரு கிராமத்திலும் அதன் கிளையை அமைத்து கிராமப்புற மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று கூறினார்.அதை நான் வழிமொழிகிறேன்.அப்படிச் செய்தால்தான் மக்களை விழிப்படைய வைக்க முடியும்.மக்கள் விழிப்படைந்துவிட்டால் அவர்களே ஹைட்ரோ கார்பன் திட்டங்களை விரட்டியடிப்பார்கள்.அதற்கான பணிகளைச் செய்வோம்.நன்றி.வணக்கம்.

(11.10.2018 அன்று சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்)