செப்டம்பர் 27* : வால்டர் பெஞ்சமின் நினைவு நாள்.

Views : 91

பதிவு செய்த நாள் 27-Sep-2021

மார்க்சிய சிந்தனையாளர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் வால்டர் பெஞ்சமினின் மறைவு மிகவும் துயரம் மிக்கது. ஜெர்மனியில் நாஜிக்களின் வெற்றிக்குப் பிறகு ஃப்ரான்ஸில் குடியேறி வாழ்ந்துவந்த அவர் ஃப்ரான்ஸும் ஜெர்மனியிடம் வீழ்ச்சியுற்றதும் ஸ்பெயின் வழியாக அமெரிக்காவுக்குத் தப்பிச்செல்வதற்காகப் போனார். ஃப்ரான்ஸுக்கும் ஸ்பெயினுக்குமான எல்லைப்பகுதியில் அமைந்திருக்கு போர்ட் போ என்னும் நகரின் காவல்துறை தலைமை அதிகாரி, ‘ எல்லைப்பகுதிக்குச் செல்லும்போது அவரைப்பிடித்து நாஜி கொலைப்படையான கெஸ்டபோவிடம் ஒப்படைக்கப்போகிறார்கள்’ என அவரிடம் தெரிவித்ததால், உறுதிப்படுத்தப்படாத அந்தத் தகவலை நம்பி பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். 

1892 இல் பிறந்த வால்டர் பெஞ்சமின் 1940 இல் இறந்தார். 48 வயது மட்டுமே வாழ்ந்த அவர் ஏராளமாக எழுதியிருக்கிறார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய The work of art in the age of mechanical reproduction என்ற கட்டுரை டிஜிட்டல் தொழில்நுட்பம் எல்லா தளங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய சூழலில் கலை என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவக்கூடியதாகும். 

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான ‘ஒன்வே ஸ்ட்ரீட் அண்ட் அதர் ரைட்டிங்ஸ்’ என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய சூசன் சொண்டாக் வெவ்வேறு வயதுகளில் வால்டர் பெஞ்சமின் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து அவருடைய குணநலன்களை மதிப்பிட முயற்சி செய்திருப்பார். காஃப்காவைப்போலவே செறிவான மொழியில் எழுதியவர்.

தன்னுடைய நூல் ஒவ்வொன்றும் ஒரு செயல் தந்திரம் (tactic ) என்று வர்ணித்த வால்டர் பெஞ்சமின் தனது எழுத்துக்களுக்கு 49 விதமான அர்த்தங்கள் இருக்கின்றன என்று நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். பிற சிந்தனையாளர்கள் பார்க்காத விதத்தில் விஷயங்களைக் கூர்ந்து ஆராய்ந்த தனித்தன்மை கொண்ட பார்வை அவருடையது. “நல்ல உரைநடை மூன்று கட்டங்களைக் கொண்டது: முதலில் இசையைப்போல கம்போஸ் செய்வது, இரண்டாவது - கட்டடத்தைப்போல கட்டியெழுப்புவது; மூன்றாவது- துணியைப்போல நெய்வது” எனக் குறிப்பிட்டவர் அவர். அது அவரது உரைநடைக்கும் பொருந்தும். 

* அவரது நினைவு தினம் செப்டம்பர் 26 எனவும் சொல்லப்படுகிறது.