இந்து மதமும் தமிழரும் : அறிஞர் அண்ணா அளித்த விளக்கம் - ரவிக்குமார்

Views : 796

பதிவு செய்த நாள் 06-Oct-2021

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1942 ஆம் ஆண்டில் திராவிடநாடு இதழில் அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரைகள் இன்று தமிழ்த் தேசியம் என்ற பெயரில் சிலர் முன்வைக்கும் சனாதன ஆதரவுக் கருத்துகளுக்கான பதில்களாக அமைந்துள்ளன.

‘ஹிந்து ஹிட்லரிசம்’ என்ற தலைப்பில் 28.03.1942 இல் அண்ணா கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். பரதனுக்கும் நக்கீரனுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. புராண பாத்திரங்கள் பேசிக் கொள்வது போல் எழுதப்பட்டிருந்தாலும் அது அன்றைய உலக அரசியல் சூழலைப் பற்றித்தான் அலசி ஆராய்கிறது.

“ ஐரோப்பாவில் அதிவேகமாகப் பரவிவிட்ட ஹிட்லரிசத்தை, ஜனநாயகக் கோட்பாடுடைய நாட்டுப் படைகள், ஜெர்மனியிலிருந்தே விரட்டிவிடமுடியும்.” என்று குறிப்பிடும் அண்ணா, “ஹிந்து ஹிட்லரிசத்தை, பார்ப்பனிய பாசிசத்தை, ஆரிய ஏகாதிபத்தியத்தை, சர்.கிரிப்சாலும், இந்நாட்டிலிருந்து தொலைக்க முடியாது, ரூஸ்வெல்ட்டாலும் இயலாது.” என்கிறார். அதற்குக் காரணம், “ஹிந்து ஹிட்லரிசத்துக்கு வீட்டுக்கு வீடு, ஐந்தாம் படை இருக்கும். தகப்பனாரோ, தயாயாரோ, தாய் மாமனோ, ஹிந்து ஹிட்லரிசத்தின் ஏஜண்டாக இருந்துகொண்டு, அந்த ஹிட்லரிசத்தை எதிர்க்கும் தோழர்களைத் தொலைத்துவிடவும் தயாராக இருப்பர். நட்டுக்கு உண்மையான விடுதலை வேண்டுமென்றால், இந்த ஹிந்து ஹிட்லரிசத்திலிருந்து நாம் தப்பவேண்டும்.

ஹிட்லரிசம் சாந்தம் சமாதானம் சுபீட்சம் என்று பேசிக்கொண்டே சமரிலும், சதியிலும் சித்திரவதையிலும் இரண்டறக்கலப்பதுபோம், ஹிந்து ஹிட்லரிசம், பக்தி, பரமன், அருள் என்றுரைக்கும் ஆனால், உள்நோக்கம், அடிமைத்தனத்தைப் பெரும்பாலான மக்கள் மீது சுமத்தவேண்டும் என்பதுதான்” என எச்சரிக்கும் அண்ணா,

“ஹிந்து ஹிட்லரிசத்தால், உள்நாட்டில் குழப்பம், பிளவு, பேதம், அன்று தொட்டு இன்றுவரை இருக்கிறது. ஒரு குலம், ம்ற்ற குலத்தை, மங்கி மடியச் செய்கிறது.

உழைப்பிலே செக்கு மாடுகள், உணர்ச்சியிலே செம்மறியாடுகள், என்று கூறத்தக்க விதத்தில் தமிழர் உருமாறிப்போனது, ஹிந்து ஹிட்லரிசத்துக்கு அடிபணிந்த காரணத்தாலேதான்.” என்று விளக்குகிறார்.

“ பிரிட்டிஷார், இந்நாட்டு மக்கள், ஹிந்து ஹிட்லரிசத்திடம் சிக்கிகொண்டதைக் கண்டே, இங்கு ஆளமுடியும் எனத்துணிந்தனர். இல்லையேல் 40 கோடிமக்கள், உலகில் வேறு எங்காகிலும் அடிமைப் பட்டிருக்கின்றனரா? புது அரசியல் திட்டம் வகுக்குங் காலங்களில், முஸ்லிம்கள், இந்துக்கள் என்று பெரும்பிரிவுகளாக மட்டும பிரித்துப்பேசும், பேதமை பிரிட்டிஷாரை விட்டபாடில்லை. நாம் இந்துக்களல்ல! நாம் தமிழர்! நமக்குத்தனிப் பண்புகள் உண்டு! நம்மை இந்துக்கள் என்று கூற அனுமதிப்பதால் நாம் நமக்கு எத்தகைய விடுதலையும் கிடைக்க ஒட்டாதபடி செய்துகொள்கிறோம்.”என்று உள்ளம் கொதிக்கிறார்.

இப்படி பரதன் என்னும் பாத்திரத்தின் வழியாக ஹிந்து ஹிட்லரிசம் பற்றி விளக்கமளித்த அண்ணா, “நக்கீரரே! இந்துமதம் தமிழருக்கு ஆகாது என்பதை விளக்கி தமிழருக்குக் கூற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்”. “அடுத்த வாரத்திலிருந்து அந்தப் பணியை நான் செய்கிறேன்” என்று நக்கீரன் ஒப்புக்கொள்கிறார்.

அதன் பின்னர் 1942 மார்ச் 5ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை 7 வாரங்கள் நக்கீரன் என்ற புனைபெயரில் ‘இந்துமதமும் தமிழரும்’ என்ற தலைப்பில் அண்ணா எழுதிய தொடர் கட்டுரை திராவிட நாடு இதழில் வெளியாகியுள்ளது.

பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் ஆரிய மதத்தினரால் எப்படியெல்லாம் அவமதிக்கப்பட்டார் என்பதை விரிவாக ஆராய்ந்து எழுதி இருக்கும் அந்த கட்டுரையின் துவக்கத்தில் இந்து மதம் என்றால் என்ன என்பதற்கு ஒரு விளக்கத்தை அண்ணா கொடுக்கிறார்:

“ இவ் இந்துமதம் தமிழ்நாட்டில் பரவிய காலம் ஆரியர்கள் நம் நாட்டில் வந்து குடியேறித் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய காலத்தைக் குறிப்பதாகும். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வரும் முன் இந்து மதம் என்ற ஒரு மதமோ அன்றி வேறு மதங்கள் இருந்தன என்பதற்கு துளி சான்று கூட கிடையாது. ஆகையால் ஆரிய மதமாகிய இந்து மதத்தைத் தமிழ் மக்களுடைய மதம் என்றுரைக்க ஆராய்ச்சித்துறை கண்ட அறிவுடைய எவரும் முன்வர மாட்டார்கள்” என்று அண்ணா குறிப்பிடுகிறார்.

“ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டு செம்மையின் நெறியில் ஒழுகி வந்த தமிழ் மக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட இந்துமதம் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்பதை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்” என்று அந்த தொடர் கட்டுரையின் நோக்கத்தை அண்ணா தெளிவுபடுத்துகிறார்.

இந்து மதத்துக்கு கூறப்படும் பல்வேறு விளக்கங்களை அண்ணா அதில் எடுத்துக்காட்டியிருக்கிறார். “இப்போது இந்து மதம் என்று வைத்து வழங்கப்பட்டு வரும் மதத்திற்கு பலர் பலவாறு பொருள் கூறுகின்றனர். அவற்றுள் சில வருமாறு: ‘இந்தியாவில் உள்ளவர்களின் மதம் ஆதலால் இந்துமதம் என்றும் (இது மேல்நாட்டு அறிஞரான மாக்ஸ்முல்லர் என்பவரின் கருத்து) சிந்து நதிக்கரையில் ஆரியர்கள் தங்கியிருந்ததால் அவர்கள் இந்துக்கள் என்றும் இந்து மதத்தினர் என்றும் அழைக்கப் பெற்றனர் என்றும் பொருள் கூறுகின்றனர். ஆனால் மேற்சொன்ன இரண்டு காரணங்களும் பொய் என்பதை வலியுறுத்தி ஒரு உபநிடதம் அதன் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டுகின்றது எப்படியெனில்:

ஹிம்ஸாயாம் தூய தேயஸ

ஸ: ஹிந்துரி த்யபீதயதே

இதன் பொருள், எவன் ஒருவன் துன்பம் என்பதில் நின்று அல்லற்படுகின்றானோ அவன் இந்து என அழைக்கப்படுகிறான் என்பதாகும். எனவே ஆரியர்கள் தங்களுக்கு இருக்க இடமும், உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி ஊர் ஊராய் சுற்றித் திரிந்து துன்புற்றது உண்மை. பண்டைய வரலாறுகள் வலியுறுத்துவதால் அவர்களை இந்துக்கள் என்று கூறும் உபநிடதக் கருத்தையே நாமும் உண்மை எனக் கொள்ளல் வேண்டும்” என்றும், “அற்றன்று ஆரியரல்லாத தமிழ் மக்களை இந்துக்கள் என்று அழைப்பது பொருந்தாதோவெனக் கடாவுவோர்க்கும் பொருந்தாது என்றே கூறுவோம். ஏனெனில் தமிழ் மக்கள் வாழ்க்கையை நடத்த வகையறியாது ஊர் ஊராய்ச் சுற்றித் திரிந்து துன்புற்ற செய்தி எந்த வரலாற்று நூலிலும் காண்பதற்கில்லை. மற்றும் ஆரியர் அல்லற்பட்டு அலைந்து திரிந்து துன்புற்றமைக்குச் சான்று பல உள” எனக் கூறும் அண்ணா, ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டாகத் தந்திருக்கிறார், ஆரியர்களின் முதல் நூலாகிய இருக்குவேத முதல் மண்டலத்தில் உள்ள 42ஆம் பதிகத்தில் ஆரியர்கள் தங்கள் தலைவனான இந்திரனை நோக்கி வேண்டிக்கொள்வதை எடுத்துக் காட்டுகிறார்.

“யாங்கள் செல்வத்தை எளிதில் அடையுமாறு செய்!

புற்கள் அடர்ந்திருக்கின்ற மேய்ச்சல் நிலங்களுக்கு எம்மை வழிகாட்டி செலுத்து!

எங்களுக்கு வயிறு நிறைய உணவு கொடு!

சுவித்ராவின் இளங்கன்றே! ஓ பகவானே! துக்கிரனுடைய வீடுகளிடையே எங்களுக்கு நிலம் கிடைத்தல் வேண்டி நடந்த போரில் எங்களுக்கு உதவி செய்கின்றனை.”

என்கின்ற இவ் இருக்கு வேத உண்மைகள் ஆரியர்களின் மிடிப்பட்ட வாழ்க்கையை தெளிவாகக் காட்டுகின்றதாகையால் இந்துக்கள் என்று அழைப்பதற்கு ஆரிய மக்களே உரித்தானவர்கள் என்பது தெற்றெனப் புலனாகின்றது.”

என்று குறிப்பிடும் அறிஞர் அண்ணா, அதே இருக்கு வேத காலத்தில் தமிழர்கள் எவ்வாறு செழிப்போடு வாழ்ந்திருந்தனர் என்பதையும் அந்த இருக்குவேதத்தைக் கொண்டே விளக்குகிறார்:

“ இருக்குவேத முதல் மண்டிலம் 104 ஆம் பதிகங்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது

1. பொன் அணிகளால் மணிகளாலும் தம்மை ஒப்பனை செய்து கொண்ட அவர்கள் (தமிழர்கள்) இந்நிலத்தை மறைத்து ஓர் ஆடை விரித்தார்கள்

2. இந்நிலத்தில் கடைக்கோடி வரை ஊடுருவிப் பரவி நிற்கும் அவர்கள் (தமிழர்கள்) தம் மந்திர ஆற்றலால் இந்திரனை வெல்ல மாட்டாராயினர்

3. இந்திரன் தனது குலிசப் படையால் அவர் (தமிழர்) களுடைய கோட்டைகளைப் பிளந்து துகளாக்கினான்.

4. குயவனுடைய மனைவியர் இருவரும் பாலிலே தலை முழுகுகின்றனர். அவர்கள் சிபாயாற்றின் ஆழத்தில் அமிழ்த்தப் படுவாராக

என்ற இவ்விருக்கு வேத உண்மைகள் தமிழ் மக்களின் சிறந்த செல்வ வாழ்க்கையை நன்கு தெளிவுபட காட்டுவதோடு தமிழ் மக்கள் எல்லோரும் செய்தொழில் வேற்றுமை யான் உயர்வு தாழ்வு இல்லாமல் ஒரே தன்மையாக தங்கள் செல்வத்தினால் பெறக்கூடிய இன்பங்களை நுகர்ந்து வந்தனர் என்பது குயவனுடைய மனைவியர் பாலிலே தலைமுழுகினார்கள் என்பதால் தெரியக்கிடக்கின்றது” என அண்ணா விளக்கமாக எடுத்துக்கூறியபின், “தமிழ் மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இந்துக்கள் என்றும் இந்து மதத்தினர் என்று அழைக்கப்பட மாட்டார்கள் என்பது யாதொரு குறைவும் இன்றி துணியப்படும்” என ஆணித்தரமாக உரைக்கிறார்.

ஹிட்லரிசத்தைவிடக் கொடுமையானது சனாதனம் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்த காரணத்தால் இந்து என்பதை விலக்கித்தான் தமிழ் அடையாளத்தை அண்ணா உருவாக்கினார். அதை முன்வைத்துதான் அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் வாதாடினார். அந்தக் கருத்துகளின் நியாயத்தைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் தமிழர்கள் சனாதனிகளிடம் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

“ ‘ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்’ என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது நாவுக்கரசர் கூறியுள்ளார். ஆரியன் வேறு, தமிழன் வேறு என்ற கொள்கை தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் இன்றும் அதன் உண்மையை நம்மவர் உணர முடியவில்லையென்றால் அதற்கு காரணம் நம்மையும் ஆரியரையும் ஒன்றாய்ப் பிணைத்துக் கொண்டிருக்கும் இவ்விந்து மதமே என்பதை எவர் தான் மறுக்க முடியும்? இந்து மதத்தின் பேரால் எழுதப்பட்ட புராண இதிகாசங்களன்றோ ஆரியர்களைப் பூசுரராக்கித் தமிழ் மக்களை அவர்களுக்கு அடிமைகளாக்கி விட்டன?” என்று கேள்வி எழுப்பும் அறிஞர் அண்ணா, “இன்றும்கூட அறிவாற்றலில் சிறந்து விளங்கும் தமிழ் மக்களில் பலர் ஆரியர்களின் அடிமைகளாக இருப்பதோடு, தாங்கள் சற்சூத்திரர் என்ற ஆரியக் கூற்றையும் ஒப்புக் கொண்டிருப்பது கண்கூடு” என வேதனைப்படுகிறார். அந்த நிலை இன்றும் மாறவில்லை என்பதையே தமிழ்தேசியம் என்ற பெயரால் முன்வைக்கப்படும் சனாதன ஆதரவுக் கருத்துகள் காட்டுகின்றன.

பிறர் மீதான அச்சத்திலும் வெறுப்பிலும் வேர்கொண்டதாக, இனவெறியோடு தொடர்புகொண்டதாக இருப்பதுதான் இந்து சனாதனவாதிகளின் தேசியம். அதற்கு மாறாக தன்னையே தியாகம் செய்யக்கூடிய அன்பின் ஆதர்சமாக இருப்பதே தமிழ்த் தேசியம். ‘பிறந்ததில் துவங்கி மரணம்வரை தொடரும் தாய் மொழியில்தான் கடந்தகாலங்கள் சேமிக்கப்பட்டிருக்கின்றன, சமூகக் கூட்டுறவுகள் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன, எதிர்காலங்கள் கனவுகாணப்பட்டிருக்கின்றன’ என்று பெனடிக்ட் ஆண்டர்ஸன் என்ற அறிஞர் குறிப்பிட்டார். அதை நன்கு உணர்ந்த ஒன்றுதான் தமிழ்த்தேசியம். ஆனால் சனாதன ஆதரவு வலதுசாரி ‘தமிழ்த் தேசியர்கள்’ சனாதனிகளைப்போலவே வெறுப்பில் ஊறித் திளைக்கின்றனர்.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது சனாதனத்துக்கு ஆதரவாகப் பரப்பப்பட்ட பொய்யுரைகளை இப்போது மீண்டும் தமிழ்நாட்டில் பரப்புவதற்கு வலதுசாரி தமிழ்த் தேசியர்கள் முனைந்திருக்கும் சூழலில், அதை எதிர்கொள்வதற்கான கருத்தியல் ஆயுதத்தை அண்ணாவிடமிருந்து நாம் பெற முடியும். திராவிட நாடு இதழில் அவர் வெளிப்படுத்திய இக்கருத்துகள் அதைத்தான் கூறுகின்றன.