செப்டம்பர் 24: பூனா ஒப்பந்த நாள் சென்சஸ் கணக்கெடுப்பும் எஸ்சி மக்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் - ரவிக்குமார்

Views : 58

பதிவு செய்த நாள் 24-Sep-2022

பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் எஸ்சி மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எப்படி அமையவேண்டும் என்பதைத் தீர்மானித்துப் போடப்பட்டதுதான் பூனா ஒப்பந்தம். 1919 இல் முதன்முதலாக மாகாண சட்டமன்றங்களுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் 1930-31 இல் நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டில் இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனித்தொகுதிகள் எஸ்சி மக்களுக்கு ஒதுக்கப்பட்டன. எஸ்சி மக்களின் மக்கள் தொகைக்கு இணையாக இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் எனப் புரட்சியாளர் அம்பேத்கர் அங்கே வலியுறுத்தியபோதிலும் பிரிட்டிஷ் காலனிய அரசு மொத்தமிருந்த 1580 இடங்களில் 72 இடங்களை மட்டுமே எஸ்சி மக்களுக்கு ஒதுக்கியது. இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டதை எதிர்த்துக் காந்தியடிகள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம், அதைப் பறிப்பதற்கான பூனா ஒப்பந்தத்தில் முடிந்தது.

பூனா ஒப்பந்தத்தின் அடிப்படையில் எஸ்சி மக்களுக்கான இடங்கள் 72 என்பதிலிருந்து 151 ஆக உயர்த்தப்பட்டன. ஆனால் அதுவும் அவர்களது மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் மிக மிகக் குறைவுதான்.

தமது மக்கள் தொகைக்கு இணையாக தமது பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று எஸ்சி மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு சென்சஸ் கணக்கெடுப்பின் கொடை என்றே சொல்லலாம். சென்சஸ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாமல் போயிருந்தால் தமது எண்ணிக்கை பலத்தை எஸ்சி மக்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள்.

தேர்தலில் எஸ்சி மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அரசியல் நிர்ணய சபையில் விவாதம் நடந்தபோது அதில் பங்கேற்றுப் பேசிய எச்.ஜே.காண்டேகர் என்ற உறுப்பினர் ‘சுதந்திர இந்தியாவில் எஸ்சி மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார். அதற்குச் சரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசும்போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்:

“ ஐயா, 1941 இல் பதிவு செய்யப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுவதற்கு வருந்துகிறேன், ஏனெனில் அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் காட்டப்பட்டுள்ள ஹரிஜனங்களின் மக்கள் தொகை மிகவும் தவறானது. எனவே, ஐயா, புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, ஹரிஜனங்களின் மக்கள்தொகையைக் கண்டறியும் வரை, எங்களுக்கு உரிய எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கப்படும் என்று நான் நம்பவில்லை. எங்கள் மக்கள்தொகையின்படி இந்த அரசியல் நிர்ணய சபையில் எங்கள் சமூகத்தில் இருந்து அறுபது உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் நாட்டுப் பிரிவினைக்கு முன் எங்கள் மக்கள் தொகை அறுபது மில்லியன். ஆனால் ஹரிஜனங்களின் பிரதிநிதிகள் இருபத்தி ஏழு பேர் மட்டுமே இந்த அவையில் உள்ளனர்” எனக் குறிப்பிட்ட அவர், சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு முன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் செய்து அதன் அடிப்படையில் எஸ்சி மக்களுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார். “ புதிதாக சென்சஸ் கணக்கெடுப்பு செய்யப்படாவிட்டால் எஸ்சி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது” என்றார். அரசியல் நிர்ணய சபையில் காண்டேகர் கூறிய கருத்து இப்போதும் பொருந்தக்கூடியதுதான்.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செய்வது அதனடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்வதென்பது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இன்றியமையாத அடிப்படையாகும். அப்படிச் செய்வதன்மூலமே சரியான பிரதிநிதித்துவம் இருக்கும். 1952, 1962, 1972 என மூன்றுமுறையும் அது சரியாகவே நடந்தது. அதன்மூலம் 1952 இல் 494 ஆக இருந்த மக்களவை தொகுதிகள் 1963 இல் 522 ஆகவும் 1972 இல் 543 ஆகவும் உயர்ந்தன. ஆனால் 1976 இல் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறு சீரமைப்பை முடக்கி சட்டம் இயற்றியது. அதனால் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 இலேயே உறைந்துபோய்விட்டது. 2002 இல் மீண்டும் அமைக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு கமிஷன் தனது பரிந்துரையை 2007 இல் அளித்தது. அதையும்கூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பிறகுதான் அப்போதிருந்த மன்மோகன்சிங் அரசு நடைமுறைப்படுத்தியது. மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் ஆட்சி செய்பவர்களுக்கு இருக்கும் தயக்கத்தையே இது காட்டுகிறது.

இப்போதுள்ள சட்டத்தின்படி இந்தியாவில் 2026 க்குப் பின் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்படவேண்டும். அதற்கு 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் அடிப்படையாக அமையவேண்டும். 2021 சென்சஸ் கணக்கெடுப்பு இல்லையென்றால் 2011 சென்சஸ் விவரங்களின் அடிப்படையில்தான் தொகுதி மறு சீரமைப்பைச் செய்யவேண்டும். 2011 சென்சஸ் அடிப்படையில் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்சி மக்களுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகுதிகள் பலவற்றை அவர்கள் இழக்க நேரிடும். அதுதான் பாஜகவின் திட்டமா?

பாஜக அரசு சென்சஸ் கணக்கெடுப்பை ரத்து செய்திருப்பதற்குப் பின்னால் எஸ்சி மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு எதிரான மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.

இதுகுறித்து அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டுக்கான சென்சஸ் கணக்கெடுப்பை நடத்தும்படி ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

(படம்: 1952 சென்சஸின்போது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்ட காட்சி )