அரசியல் போக்கிரித்தனமும் அடிப்படைவாதமும் - ரவிக்குமார்

Views : 143

பதிவு செய்த நாள் 14-Nov-2022

பாட்டாளி வர்க்கமயமாக்கலின் மாறிவரும் வரையறைகள் ( the changing contours of proletarianisation ) என்ற தலைப்பில் கே.எஸ்.சலம் என்பவர் எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் பின்வரும் முக்கியமானதொரு அவதானிப்பை அவர் முன்வைத்துள்ளார்:

“ கிராமங்களிலோ அல்லது ஊரகப் பகுதிகளிலோ ஏற்கனவே லும்பன்மயமான சக்திகள் பரவியிருக்கும் பகுதிகளில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் எந்தவொரு பொறுப்பாளரையும் நாம் இன்று சந்திக்க முடிவதில்லை. கிராமங்களில் விவசாய சட்டங்களைப் பற்றி அறிந்த சில தனிநபர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஊடகங்களில் பங்கேற்பவர்களில் , ஒருசில செயல்பாட்டாளர்களைத்தவிர மற்றவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் இருப்பதில்லை. மைய நீரோட்ட ஊடகங்களும் சரி, சமூக ஊடகங்களும் சரி செயல்பாட்டாளர்கள் குழுவிலே இருந்து சுய விளம்பரம் தேடும் சில தனி நபர்களைப் பிரித்தெடுத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன” என சலம் குறிப்பிடுகிறார்.

‘ரேட்டிங்கை’ அடிப்படையாக வைத்து செயல்படும் தொலைக்காட்சிகள், யுடியூப் சேனல்கள் விவாத நிகழ்ச்சியை ‘ சண்டைக்கான ஒத்திகையாக’ மாற்றிவிட்டதைப் பார்க்கிறோம். அங்கு யார் உரக்கக் கத்துகிறார்களோ அவர்களே ‘ஸ்டார்’ அந்தஸ்தைப் பெறுகின்றனர். இது வெறுப்புப் பிரச்சாரத்துக்கு உகந்த ஒன்றாக விவாத நிகழ்ச்சியை மாற்றிவிட்டது. அடிப்படைவாத வெறுப்பைக் கக்குகிற ஒருவரது முன்னால் அமைதி காப்பது அதற்கு இடம் கொடுப்பதாகிவிடும் என்பது உண்மைதான், ஆனால் அடிப்படைவாத வெறுப்புக்கு எதிராக ‘ புரட்சிகர வெறுப்பு ‘ என எதுவும் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெறுப்பு என்னும் மொழியை நாம் கையிலெடுத்தால் அது அடிப்படைவாதிகளுக்கே அனுகூலமாக அமையும்.

சலம் சொல்லும் இன்னொரு கருத்து மக்கள் நலன் சார்ந்த அரசியல் இயக்கங்கள் கவனிக்க வேண்டியதாகும் : “ நகரப் பகுதிகளில் லும்பன் ( அரசியல் போக்கிரி ) செயல்பாடுகள் வருமானம் அளிப்பதாகவும் அதுவே தொழிலாகவும் சிலருக்கு மாறிவிட்டது, அவர்களே அப்பகுதியில் தலைவர்களாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஒரு கட்சி அல்லது சமூகத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் அந்த இடத்தை/ பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அந்த நபர்கள் எந்த காரியத்தையும் செய்யக் கூடியவர்களாக மாறுகிறார்கள், மக்கள் பிரச்சனைகளில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அந்தக் கட்சிக்குள் வந்து விடாமல் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அடித்தட்டு வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் லும்பன்மயமாவதற்கு, பொறுக்கித்தனத்தை நோக்கி ஈர்க்கப்படுவதற்கு இத்தகைய நபர்களே காரணமாகிறார்கள். மேற்கு வங்கத்திலும் பிற இடங்களிலும் இடதுசாரி இயக்கம் தோல்வி அடைந்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம். இந்தச் சூழலில் மக்கள் பிரச்சனைகளில் அக்கறையும் கடப்பாடும் கொண்டவர்கள் அரசியலில் இருந்து விலகி ஒதுங்கிக் கொள்வது நடக்கிறது.” என சலம் குறிப்பிடுகிறார்.

இடதுசாரிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு என்பதைப்பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், தினசரி மக்களை பாதிக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அக்கறை செலுத்தவேண்டும் என்கிறார் சலம் .

சலம் சுட்டிக்காட்டியிருக்கும் ‘அரசியல் போக்கிரித்தனத்துக்கும், அடிப்படைவாத அரசியலுக்கும் இடையிலான தொடர்பை’ நாம் புரிந்துகொள்ளவேண்டும். லும்பன்மயமாக்கம் என்னும் அரசியல் போக்கிரித்தனம் அடித்தட்டு வர்க்கத்தினர் புரட்சிகர சக்தியாக வளர்வதைத் தடுக்கிறது, அடிப்படைவாதத்துக்கு உதவுகிறது. எனவே, அரசியல் போக்கிரிகள் மேலாதிக்கம் பெறாமல் தடுப்பதற்கான பொறியமைவுகளை ஒரு கட்சி தனது கட்டமைப்புக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி ‘ அரசியலை ஆணையில் வைப்பதுதான்’.