பேட்ட- வணிக உத்தியாக மாறியிருக்கும் வகுப்புவாத எதிர்ப்பு

Views : 48

பதிவு செய்த நாள் 08-Jan-2020

பேட்ட-   வணிக உத்தியாக மாறியிருக்கும் வகுப்புவாத எதிர்ப்பு 

 

ஹீரோவிடமிருந்து தப்பித்துப் போன வில்லன் ஒருவன் மீண்டும் வந்து அட்டூழியம் செய்வதும் அவனை ஹீரோ தேடிச்சென்று வீழ்த்துவதும்தான் கதை.அந்தக் கதையை தமிழ்நாடு உத்தரப் பிரதேசம், இந்து முஸ்லிம் என்ற பின்புலத்தில் சுவாரசியமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

 

ஆணவக் கொலை, மதத்தின் பெயரால்திட்டமிட்டு உருவாக்கப்படும் கலவரங்கள், மாட்டிறைச்சி அரசியல், காதலர் தின வன்முறைகள் என சமகால அரசியல் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் வழக்கமான ஒரு கதைதான் ’பேட்ட’

 

ரம்மியமான மலை வாசஸ்தலத்தில் அமைந்திருக்கும் (பேய் பங்களா போன்ற ) ஒரு கல்லூரி, அதன் விடுதி,  மாணவர்கள் என சொல்லப்படும் ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாத ஒரு இளைஞர்கள் கூட்டம் ஆகியவற்றில் படத்தின் முதல் பாதி நகர்கிறது. ரேக்கிங் அட்டகாசங்களாலும், கல்லைப் போன்ற இட்லிகளாலும் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த மாணவர் விடுதிக்கு தற்காலிக வார்டனாக யாரோ ஒரு பெரிய புள்ளியின் சிபாரிசில் வந்து சேர்கிறார் ரஜினி . டான்ஸிலும் சண்டையிலும் மாணவ ரௌடிகளைத் தோற்கடித்து 'டிஸிப்ளினை'  நிலை நாட்டுகிறார் ( இந்த படத்திலும் அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டு) 

 

மாணவன் ஒருத்தனின் காதல் சிக்கலைத் தீர்ப்பதற்காக அவனது காதலியின் அம்மாவான 'க்ரானிக் ஹீலர்' சிம்ரனிடம் தூது சென்று அவரிடம் காதல் வயப்படுகிறார்.கம்பளி சித்தர் வைத்தியம் போன்ற சில்லறைத்தனமான நகைச்சுவைக்கே கவிழ்ந்து போகும் பலவீனமான கேரக்டர் சிம்ரனுக்கு. (டைரக்டர் அனுமதித்திருந்தால் சின்னி ஜெயந்தே அதைவிட பிரமாதமான ஜோக்குகளை சொல்லியிருப்பார்) 

 

இரண்டுபேரும் ரொமான்ஸ் லுக் விட்டுக்கொண்டு கெக்கெபிக்கேவென சிரித்துக்கொண்டு மார்க்கெட்டில், கடையில், மழைபெய்யும் நேரத்தில் சந்தித்துக்கொண்டு, கலர் கலராக உடுத்திக்கொண்டு (படத்தில் பாராட்டத்தக்க ஒரே அம்சம் உடை அலங்காரம்) அப்படி இப்படி வந்துபோகிறார்கள்.இந்தப் படத்தில் தங்களைப் பார்க்கும்போது ரஜினிக்கும், சிம்ரனுக்கும் புத்துணர்ச்சி பிறக்கும் என்பது உறுதி. 

 

கல்லூரி பின்புலம் இந்தப் படத்துக்குத் தேவையே இல்லை.கல்லூரி வார்டன் என்றால் என்ன என்பதை டைரக்டர்ரஜினியிடம் விளக்கியிருக்க வேண்டும்.அவர் அதை ஏதோ ஜெயில் சூப்பிரண்டு போல நினைத்து நடித்திருக்கிறார். 

 

மதுரையிலிருந்து தப்பித்து உத்தரப்பிரதேசம் செல்லும் சிங்காரம் ஒரு சில நாட்களிலேயே மிகப்பெரிய கொலைக் கும்பலின் தலைவனாகத் திரும்பி வருகிறான்.லாரி நிறைய கூலிப்படை, அவர்கள் கையில் பொருள் ( எல்லாம் நான் ஸ்டாப்பாக சுடும் மெஷின் கன்கள்)  மதுரைக்கு வந்து மச்சான் மாலிக்கையும் தங்கச்சியின் வளைகாப்புக்கு வந்தவர்களையும் மொத்தமாக முடிக்கிறான் சிங்காரம். பேட்ட ரஜினி சிங்காரத்தை தப்பிக்கவிட்டதுபோலவே சிங்காரம் பேட்ட ரஜினியைத் தப்பிக்கவிடுகிறான்( படம் இடைவேளைக்குப் பிறகும் நகரவேண்டுமில்லையா? 

 

இருபது முப்பது பிணங்கள் இறைந்து கிடக்க எந்த சேதமும் இல்லாமல் உத்தரபிரதேசத்துக்கு திரும்பிச் சென்று அங்கே ஏதோ ஒரு ’சேனா’வுக்கு தலைமை தாங்கி ஒரு ராஜ்யத்தையே நடத்துகிறான்.ஆதித்யநாத் முதலமைச்சராக இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் சிங்காரம் ’சேனா அதிபதியாக’ இருக்க முடியாதா என்ன? அதுவும் அவனது மகனான ( இன்னொரு நார்த் இண்டியன் மகனும் உண்டு) விஜய்சேதுபதி தலையில் கர்சீப்பைக் கட்டிக்கொண்டு , இந்துத்துவா பொட்டு வைத்துக்கொண்டு,  எதிரிகளை ' ஆண்ட்டி நேஷனல்' என கலாய்த்துக்கொண்டு தமாஷ் வில்லனாக இருக்கும்போது, எல்லாமே சாத்தியம்தான். 

 

ஏதோ,நாட்டை காப்பாற்றப் போவதற்கான 'மிஷன் ' போல படத்தில் ரஜினியின் என்ட்ரி இருக்கிறது ( சூரியன் படத்தில் சரத்குமாரின் என்ட்ரி இதைவிட சிறப்பாக இருக்கும்) ஆனால் அது ஒரு ரவுடிக்கும்பலோடு சண்டை போடுவதற்காகத்தான் என்று தெரியும் போது இயக்குனர் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.  

 

விஜய் சேதுபதியைத் தனது மகன் எனக் கூறுவதும்,  வில்லனைக் கொன்ற பிறகு தான் கூறியது பொய் எனச் சொல்லி ராமாயணத்திலிருந்து அதற்கு நியாயத்தைத் தேடுவதும் ரொம்ப ஓவர்.வில்லன் செத்ததுமே ஆடியன்ஸ் இருக்கையிலிருந்து எழுந்துவிடுகிறார்கள்.அப்புறமும் கிளைமாக்ஸ், ஆன்ட்டி கிளைமாக்ஸ் என்று படம் நீண்டு கொண்டே போகிறது.அந்த நேரத்திலும் கம்பளி சித்தர் ஜோக் சொல்லி கடுப்பேத்துகிறார் ரஜினி.ஆடியன்ஸ் அதை வெளியேறிக்கொண்டே பார்க்கிறார்கள். 

 

சசிகுமார், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி என பல நடிகர்களை இதில் எதற்காகப் போட்டார்கள் என்பது புரியவில்லை.அவர்களது பாத்திரங்களை சாதாரணமாக எவரும் செய்திருக்க முடியும்.தமக்கென்று தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் அந்த நடிகர்களை இந்தப் படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் அந்த ரசிகர்களையும் படம் பார்க்க வைத்து வசூலுக்கு வழி செய்திருக்கிறார்கள். 

 

96 படத்தில் பார்த்து வியந்த த்ரிஷாவின் நடிப்பை இப்படியும் வீணாக்க முடியுமா?சிம்ரனின் வசீகரம் எங்கே இருக்கிறது என்பதை சரியாகவே  புரிந்து வைத்துள்ள இயக்குனர் த்ரிஷாவுக்கு அநீதி இழைத்திருக்கிறார் என்று சில ரசிகர்கள் தியேட்டரில் பொறுமியதைக் கேட்க முடிந்தது. 

 

காலா படத்திலிருந்து இந்தப் படம் வேறு பட்டது என்று சொல்கிறார்கள்.இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது : இரண்டு படங்களின் இயக்குனர்களுமே  ரஜினி அரசியல் களத்தில் செய்த தவறுகளை சினிமா மூலம் சரிகட்டப்  பார்த்திருக்கிறார்கள் என்பதுதான் அது. 

 

காலாவைப் போல அல்லாமல் இந்தப் படத்தில் இந்துத்துவ அரசியல் எதிர்ப்பு வெளிப்படையாக உள்ளது.உத்தரப் பிரதேசம், 'வாலண்டைன் டே' அன்று தாலி கட்ட வைப்பது, பீஃப் வைத்திருப்பதாகச் சொல்லி மாட்டுப் பண்ணையில் தாக்கிக் கொலைசெய்ய முயற்சிப்பது என ஒரு பட்டியலே போடலாம். 

 

ரஜினியின் பேட்ட மீண்டும் பழைய ரஜினியை மீட்டெடுத்திருக்கிறது 

என்று சிலர் கொண்டாடுகின்றனர், ரஜினியின் பழைய படங்களில் வெற்றிகரமான அம்சங்களைக் கோர்த்து எடுத்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள் என்று சிலர் பாராட்டுகின்றனர். ரஜினி ஒரு திறமையான நடிகர்.அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படங்கள் சில உண்டு.அத்தகைய படங்களிலிருந்து நல்ல காட்சிகளைத் தொகுத்து எடுத்துத் தந்திருந்தால் உண்மையிலேயே நல்லதொரு படம் கிடைத்திருக்கும்.

 

மாற்று சினிமா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில்தான் சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்கள் வந்து தமிழ் சினிமாவை நாசம் செய்தன.அதுபோலவே, பரியேறும் பெருமாள் போன்ற நல்ல படங்கள் வந்து தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையைக் கூர் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தப் படம் வந்திருக்கிறது. 

 

இதில் பாராட்டத்தக்க அம்சம் எதுவுமே இல்லையா ? கெட்டதிலும் ஒரு நல்லது என்பதுபோல இதுவரை தீவிரவாதி என்றால்அது முஸ்லீம்தான் என்று தமிழ் கமர்ஷியல் சினிமாவில் ஒரு ’டெம்ப்லேட்’ போட்டு வைத்திருந்தார்கள், அது இந்தப் படத்தில் மாற்றப்பட்டு  இந்துத்துவ பயங்கரவாதத்தின் சில முகங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. 

 

இந்தப் படத்தின் வெற்றி, தமிழ்நாட்டில் 'வகுப்புவாத அரசியல் எதிர்ப்பு' என்பதும் வணிகரீதியில் வெற்றிபெறுவதற்கான ஒரு ஃபார்முலா ஆகியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.அதைக் காட்டியதற்காக டைரக்டர் கார்த்திக் சுப்புராஜுக்குப் பாராட்டுகள்.

 

15.01.2019