படைப்பும், விமர்சனமும் சுதந்திரத்தின் பிரிக்கமுடியாத அங்கங்கள்

Views : 251

பதிவு செய்த நாள் 24-Jan-2020

இந்த விருதை உருவாக்கியவருக்கும், இந்த விருதுக்கு என்னைப் பரிந்துரை செய்தவருக்கும், எனக்கு இந்த விருதை வழங்கலாம் என தேர்வுசெய்தவர்களுக்கும் முதலில் எனது நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அவையைப் பார்க்கும்போது இதைப்போல நம்முடைய சட்டமன்றம் இருந்தால் எப்படி இருக்கும், நம்முடைய பாராளுமன்றம் இருந்தால் எப்படி இருக்கும் என நான் எண்ணிப் பார்க்கிறேன். நீங்களெல்லாம் அமைதியாக அமர்ந்து இருக்கிறீர்கள் என்பதை வைத்து நான் அப்படி கற்பனை செய்யவில்லை. இந்த அவையில் ஆண்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள், பெண்கள் பெரும்பான்மையினராக இருக்கிறீர்கள். நமது சட்டமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் பெண்கள் பெரும்பான்மை பெறும் நேரத்தில் இந்த நாட்டில் காவல்துறை தேவைப்படாது. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸ் ஒருமுறை கூறினார்: "இந்த உலகம் பெண்களால் நிர்வகிக்கப்படும் போது அங்கு யுத்தங்கள் இல்லாமல் போய்விடும் " என்று அவர் கூறினார். அதுபோல , பெண்கள் சட்டமன்றங்களில்,பாராளுமன்றங்களில், நீதிமன்றங்களில் பெரும்பான்மையினராக இடம்பெறும்போதுதான் இந்த நாடு வன்முறையற்ற நாடாக மாறும். இந்த அவையிலும் கூட வன்முறையின் சுவடில்லாமல் சாந்தம் தவழ்கிறது என்றால் பெரும்பான்மையினராக பெண்கள் இருப்பதே அதற்குக் காரணம்.

நண்பர்களே! இந்த விருது ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுவது நண்பர் அ.ராமசாமி குறிப்பிட்டதை போல வியப்பான ஒன்று, நடைமுறையில் இருந்து விலகிய ஒன்று. பல்கலைக்கழகங்கள் பேச்சை, விமர்சனத்தை மறுப்பவையாகவே பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கின்றன. அதைப்பற்றி, ’அனிமல் ஃபார்ம்’ என்ற நாவலை எழுதிய உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்: ”இங்கிலாந்து நாட்டில் எதிர்ப்பு, கலகம் ஆகியவை எழாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டலாம்: ஒன்று, அந்த நாட்டின் ஊடகங்கள் . அவை பெரும்பாலும் பெரிய முதலாளிகளால் நடத்தப்படுகின்றன . அவை மக்களிடையே எந்தவிதக் கேள்விகளும், விமர்சன நோக்கும் உருவாகி விடாமல் பார்த்துக் கொள்கின்றன. அடுத்த காரணம், இங்கிலாந்தில் இருக்கின்ற உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சென்று படிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கிறது. ஆனால் ஜார்ஜ் ஆர்வெல் சொல்கிறார், ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற பல்கலைக்கழகங்களில் விமர்சன மனோபாவம் இல்லாமல் ஆக்கப்படுகிறது. அங்கிருந்து கல்வி பெற்று வருகிற ஒருவர் எல்லாவற்றோடும் இயைந்து செல்கிற பண்பு கொண்டவராக மாறிவிடுகிறார்.அதனால் தான் பிற நாடுகளில் இருப்பதைப் போல எதிர்ப்பு என்பது, கலகம் என்பது அங்கே இல்லாமல் போய்விடுகிறது என்று ஜார்ஜ் ஆர்வெல் சொல்கிறார்.

பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஒழுக்கம் என்பதை கேள்வி கேட்கும் மனோபாவத்துக்கு எதிரானதாகப் பார்ப்பதால் அதை மறுத்து ஒழுக்கத்தைப் போதிப்பவையாக , மாணவர்களிடையே கட்டுப்பாட்டை வலியுறுத்துபவையாக அவை இருக்கின்றன. அதற்கு நேர்மாறாக விமர்சன செயல்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஒரு விருதை ஒரு பல்கலைக்கழகம் கொடுக்கிறது என்றால் எனக்குத் தெரிந்து இந்தியாவிலேயே அப்படி விருதளிக்கும் பல்கலைக்கழகம் இந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தான். அதற்காக இந்தப் பல்கலைக் கழகத்தைப் பாராட்டுகிறேன். இப்படியொரு விருதை உருவாக்கிய பேராசிரியர் தி.சு.நடாராசனின் கற்பனைத் திறனை வாழ்த்துகிறேன்.

இங்கே இருக்கிற எல்லோருமே படைப்பாளிகள்தான், விமர்சகர்கள் தான். இங்கே சிலரை அழைத்து கவுரவிக்கிறோம் அவர்கள் மட்டும்தான் படைப்பாளிகள் என்பதல்ல, நீங்கள் எல்லோருமே படைப்பாளிகள்தான். நாம் எல்லோருமே படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடுகிறோம் , விமர்சன நோக்கைக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதை கோட்பாடாக மாற்றும், செயல்பாடாக மாற்றும் வினையை ஒருசிலர்தான் ஆற்றுகிறார்கள், அவர்களை நாம் படைப்பாளிகள் என்கிறோம், விமர்சகர்கள் என்கிறோம். நீங்கள் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறீர்கள் அங்கு ஒரு ஆசிரியர் பாடம் எடுக்கிறார் அதை நீங்கள் கவனிக்காமல் வேறு வேலை செய்கிறீர்கள் என்றால் அது ஒரு விமர்சனம் தான். அவர் உங்களது கவனத்தை ஈர்க்கும் விதமாகப் பாடம் நடத்தக் கூடிய ஆற்றல் பெற்றவராக இல்லை என உங்கள் செயல்பாட்டின் மூலமாக நீங்கள் விமர்சிக்கிறீர்கள் என்றுதான் பொருள். எனவே நாம் ஒவ்வொருவரும் எப்போதும் படைப்பு செயல்பாட்டிலும், விமர்சன செயல்பாட்டிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

விமர்சனமும் படைப்பும் ஒருவருடைய சுதந்திரத்தோடு பிணைக்கப்பட்டதாக இருக்கிறது. சுதந்திரம் என்றால் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலைப் பெற்றது மட்டுமல்ல. ஒவ்வொருவருடைய இருப்பையும் தீர்மானிக்கிற விஷயமாக சுதந்திரம் என்பது இருக்கிறது. அந்த சுதந்திரத்தின் பிரிக்கமுடியாத அங்கங்களாக படைப்பு, விமர்சனம் என்பவை இருக்கின்றன. ஒரு நாட்டில் நிலநடுக்கம் வருகிறது என்றால் அதை முதலிலேயே பறவைகள் உணர்ந்து கொள்ளும் எனச் சொல்வார்கள், அதுபோல ஒரு நாட்டில் அதிகாரத்துவம் வருகிறதென்றால், சர்வாதிகாரம் தலைதூக்குகிறது என்றால் அதை எதிர்க்கிற முக்கியமான பண்பு கொண்டவர்கள் தான் படைப்பாளிகள். எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் சரி அங்கே அதிகாரத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் படைப்பாளிகள்தான். இங்கே கூட கடந்த ஆண்டிலே அதற்கு முந்தைய ஆண்டிலே எழுத்தாளர்கள் பலர் தமக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பித் தந்தார்கள். இந்த ஆண்டு கூட ஒரு எழுத்தாளர் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். இது எழுத்தாளர்களுடைய நுண்ணுணர்வுக்கு சாட்சியமாக இருக்கிறது. சுதந்திரம் என்பதை அவர்கள் எப்படி கருதுகிறார்கள், எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு சாட்சியமாக இருக்கிறது.

படைப்பை போலத்தான் விமர்சனம் என்பதும். விமர்சனம் இல்லாமல் சுதந்திரம் என்பது இருக்க முடியுமா என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள். நாம் ஒரு விமர்சன கருத்தைத் தெரிவிக்க முடியவில்லையென்றால் நமக்கு இருப்பது சுதந்திரம் தானா என்ற கேள்வியை நாம் எழுப்பிக் கொள்ள வேண்டும். பேச்சு சுதந்திரத்தை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. பேச்சு சுதந்திரம் என்பது ஒரு கருத்தைப் பேசுவதற்கான சுதந்திரம் மட்டுமல்ல, பேசுவதற்குப் பிறகான சுதந்திரத்தையும் உள்ளடக்கியதுதான். ’ஒரு கருத்தைப் பேசியதற்குப் பிறகு ஒருவருக்கு சுதந்திரம் இல்லை என்றால் அதை பேச்சு சுதந்திரம் என்று சொல்ல முடியாது’ என சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த எஸ். கே. கவுல் தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு எழுத்தாளர் ஒரு கருத்தைத் தனது படைப்பில் வெளிப்படுத்துகிறார், அதற்குப் பிறகு அதன் காரணமாக அவரது சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்றால் அவர் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது என்றால் நாம் ஒரு சுதந்திர நாட்டில் வாழவில்லை என்றுதான் பொருள். எனவே எழுத்தாளர்களை, விமர்சகர்களை ஒரு சமூகம் எப்படி நடத்துகிறது, அவர்களுக்கு எந்த அளவுக்கு இடமளிக்கிறது என்பதை வைத்துதான் அந்த நாடு சுதந்திர நாடாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

நமது நாடு விடுதலை அடைந்து நமக்கென்று அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, விரும்பிய இடத்தில் வாழும் உரிமை, விரும்பிய தொழிலைச் செய்யும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அதில் வரையறுக்கப்பட்டன. அப்போது அரசியலமைப்புச் சட்டத்தை யாத்துத் தந்த அம்பேத்கர் ஒரு கருத்தைச் சொன்னார், குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை ஒரு அரசாங்கம் மறுக்கிறது என்றால், எக்ஸிக்யூட்டிவ் என சொல்லப்படும் நிர்வாகம் அதை பறிக்கிறது என்றால் அதை காப்பாற்றக்கூடிய பாதுகாவலராக நீதித்துறை செயல்படும் என அவர் தெரிவித்தார். அரசாங்கம் இயற்றுகின்ற ஒரு சட்டம், நிர்வாகம் பிறப்பிக்கிற ஒரு உத்தரவு அடிப்படை உரிமைகளை மறுப்பதாக இருந்தால் அதை சீராய்வு செய்து ரத்து செய்யும் அதிகாரத்தை, அடிப்படை உரிமைகளைப்பாதுகாக்கும் பொறுப்பை அம்பேத்கர் நீதித்துறையிடம் ஒப்படைத்தார். இந்த நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களில் ஒன்றாக நீதித்துறை இருந்தாலும் இந்த நாட்டின் உச்சபட்ச அதிகாரம் நீதித்துறையிடம்தான்

வழங்கப்பட்டிருக்கிறது. நீதித்துறையின் சுதந்திரமே நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் இந்த நேரத்தில் இலக்கிய விமர்சனங்கள், படைப்புகள் ஆகியவற்றுக்கான இடம் என்ன என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பாட நூல்களிலே சொல்லப்பட்டிருக்கிற திறனாய்வுக் கோட்பாடுகள் திறனாய்வு முறைகள் என்பவற்றை தாண்டி, உங்களது துறைக்கு வெளியிலே , பல்கலைக்கழகத்துக்கு வெளியிலே ’விமர்சனம்’, ’சுதந்திரம்’ என்பவற்றுக்கான பொருளை நீங்கள் தேடிப் புரிந்துகொள்ளவேண்டிய தேவை இருக்கிறது.

விமர்சன அணுகுமுறையாக நான் வைத்திருப்பது ஒரு எழுத்தாளரின் படைப்பைப் பற்றி - சோ தர்மனின் எழுத்துக்களைப் பற்றி, இமையத்தின் படைப்புகளைப் பற்றி, எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துகளைப் பற்றி - ஆராய்ந்து திறனாய்வுக் கட்டுரைகளை எழுதுவது மட்டுமல்ல, எனது மொழிபெயர்ப்புகளையும் விமர்சனத்தின் அங்கமாகவே நான் முன்வைக்கிறேன். நான் சில கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிடுகிறேனெனில் அது நான் வாசித்த கவிதைகள் மீதான விமர்சனம்தான், நான் சில சிறுகதைகளை மொழிபெயர்த்துத் தருகிறேன் என்றால் அது இங்கே எழுதப்படுகிற சிறுகதைகளின் மீதான எனது விமர்சனம் தான். அந்த நோக்கில்தான் இலக்கியக் கோட்பாடுகளையும் நான் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறேன். மொழிபெயர்ப்பையும் விமர்சனத்தையும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டதாகவே நான் பார்க்கிறேன்.

விமர்சனம் என்பது படைப்புக்கு அப்பாற்பட்டது, படைப்பைப் பற்றி சொல்லக் கூடியது என்பதாகத்தான் பெரும்பாலும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் விமர்சனமும் ஒரு படைப்புச் செயல்பாடுதான். அதுவும் ஒரு படைப்புதான் . படைப்புக்கும் விமர்சனத்துக்குமான பிரிவினை மேலைநாடுகளில் எப்போதோ தகர்க்கப்பட்டாயிற்று. படைப்பு என்ற நிலைக்கு விமர்சனத்தை அங்கே பலர் கொண்டு சென்றிருக்கிறார்கள், அவர்களில் நான் பின்பற்ற நினைப்பது, நான் முன்மாதிரியாகக் கருதுவது மாரிஸ் ப்ளான்ஷோ என்ற சிந்தனையாளரைத்தான். அவரது எழுத்துக்களை வாசித்தால் அவற்றை தத்துவம் என்று வகைப்படுத்துவதா? படைப்பு என்பதில் வைப்பதா? விமர்சனமாகக் கருதுவதா? என்ற கேள்வி நமக்கு எழும். அத்தகைய தன்மை கொண்ட எழுத்துகளை உருவாக்கவே நான் விரும்புகிறேன்.

இங்கே பாராட்டப்படும் எழுத்தாளர்களுக்கும், பாராட்டுகிற பல்கலைக்கழகத்துக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், வணக்கம்.

( 11.02.2019 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்ட ‘ திறனாய்வுச் செம்மல்’ என்ற விருதைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய ஏற்புரை )