புதிய கல்விக்கொள்கையும் வகுப்பறை பாகுபாடுகளும்

Views : 69

பதிவு செய்த நாள் 24-Jan-2020

புதியகல்விக்கொள்கை ஒன்றை நடைமுறைபடுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதற்கான கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. அந்தக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைத் தொகுத்து அறிக்கையாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கை மட்டுமின்றி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் சில முன்மொழிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்கள் அது சமஸ்கிருதத்தைப் புகுத்தப்பார்க்கிறது, மீண்டும் குலக்கல்வி முறையைக் கொண்டுவர முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள். புதிய கல்விகொள்கை தொடர்பாக டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்திருக்கும் 230 பக்க அறிக்கையில் சமஸ்கிருதத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். சிபிஎஸ்இ பல்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டாயம் சமஸ்கிருதத்தைப் படித்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலையை மத்திய அரசு உருவாக்கத் திட்டமிடுகிறது. மொழிப்பாடமாக மட்டுமின்றி சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். எப்படியாவது சமஸ்கிருதத்தை வாழும் மொழியாக உயிர்ப்பித்துவிடவேண்டும் என்பதே அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

புதிய கல்விக்கொள்கை தொடர்பான அறிக்கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் புல்ளிவிவரங்களைப் பார்த்தால் மத்திய அரசு கல்விமீது அக்கறை கொண்டிருப்பதுபோலத்தான் தோன்றும். உயர்கல்வியில் ஜீஇஆர் (Gross Enrollment Ratio) இப்போது 24 % கூட இல்லை; உலகிலேயே கல்விகற்காத மக்கள்தொகை அதிகமாக இருக்கும் நாடு இந்தியாதான், கல்விகற்காத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடும் இந்தியாதான் – என்பதுபோன்ற புள்ளிவிவரங்களை இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த நிலையை சரிசெய்வது எப்படி என்பதைத்தான் தெளிவாக சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

பாஜக அரசால் இப்போது முன்வைக்கப்படும் புதிய கல்விக்கொள்கை மென்மேலும் கல்வியை சாதாரண மக்களுக்கு எட்டாததாக்கி அதை விலை அதிகமுள்ள ஒரு பண்டமாக மாற்றுவதில்தான் அக்கறைகாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி கல்வி தொடர்பான அதிகாரங்களை மத்திய அரசிடம் குவிப்பதற்கும் அது வழிகோலுவதாக இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை என்று இப்போது பேசும்போது ராஜிவ்காந்தி ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கையை நாம் நினைவுபடுத்திப் பார்க்கவேண்டும். அப்போதுதான் கல்வி வணிகமயமாவதற்கான பாதை போடப்பட்டது. மத்திய அரசின் கல்வித்துறை என்ற பெயர் மாற்றப்பட்டு ‘மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்’ என புதிய பெயர் சூட்டப்பட்டது. இப்போது நடைமுறையிலிருக்கும் பத்து + இரண்டு+ மூன்று என்கிற கல்விமுறை அப்போதுதான் அறிமுகமானது. அந்தக் கல்விக்கொள்கையை எதிர்த்து நாங்களெல்லாம் போராடினோம். மறைந்த பேராசிரியர் கோ.கேசவன் அந்தக் கல்விக்கொள்கையை விமர்சித்து நூல் ஒன்றை எழுதினார். இந்தியா முழுவதும் கல்வியாளர்கள் அந்தப் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தார்கள். ஆனாலும் அது நடைமுறைக்கு வந்துவிட்டது.

கல்விக் கொள்கை என்பது ஒவ்வொரு மாநில மக்களின் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப அந்தந்த மாநிலங்களின் பிரத்யேக தனமைகளைக் கவனத்தில்கொண்டு வடிவமைக்கப்படவேண்டும் என்பதால்தான் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அதை மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் வைத்தார். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட நேரத்தில்தான் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றி இந்திராகாந்தி அம்மையார் சட்டத் திருத்தத்தைச் செய்தார். அதன் பிறகு சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை எவரும் வலுவாக எழுப்பவில்லை. திமுக மட்டும் அவ்வப்போது அந்தக் கோரிக்கையை எழுப்புகிறது. வேறு எந்த மாநிலக் கட்சியும்/அரசும் அதை வலியுறுத்துவதில்லை. ஏனென்றால் பொதுப்பட்டியலில் இருப்பதால் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் கணிசமான அளவை மத்திய அரசுதான் செய்கிறது.

கவர்ச்சித் திட்டங்களுக்கு செலவழிப்பதில் ஆர்வம் காட்டும் மாநிலக் கட்சிகள் கல்விக்கு செலவிடுவதைச் சுமையாக என்ணுகின்றன. அதனால்தான் அதை அந்தக் கட்சிகள் கண்டுகொள்வதில்லை. பொதுப்பட்டியலில் இருக்கும் அதிகாரம் எல்லாமே மறைமுகமாக மத்திய அரசின் அதிகாரங்கள்தாம். எனவே, மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினாலன்றி மத்திய அரசின் அதிகாரத் தலையீட்டை நாம் எதிர்க்கமுடியாது. புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்கள் அத்துடன் ‘கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும்’ என்ற கோரிக்கையையும் சேர்த்து முன்வைக்கவேண்டும்.

கல்வி பெறுவதற்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகப்பெரும் தடையாக இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அதுபோலவே தரமான கல்வி பெறுவதில் கிராமப்புற மாணவர்களுக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளையும் நாம் அறிவோம். ஆனால் கல்வி கற்குமிடத்தில் காட்டப்படும் பாகுபாடுகளைப் பற்றி நாம் அவ்வலவாக அறிந்திருக்கமாட்டோம். வகுப்பறையில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், பாலினத்தின் பெயரால் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. மாணவர்கள் இடைநிற்றலுக்கு இது மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது.

இந்தியாவில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதென அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாடநூல்களிலும் அதை அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கிடையே சாதி அடிப்படையில் பேதம் பாராட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை! சமூக நீதிக்குப் பேர்போன தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத வடிவங்களில் தீண்டாமை நிலவிக்கொண்டிருக்கிறது.

அம்பேத்கர், தான் படிக்கும்போது மற்ற பிள்ளைகளோடு சமமாக உட்கார அனுமதிக்கப்படவில்லையென்பதையும் தான் உட்காருவதற்காக வீட்டிலிருந்து சாக்குத் துண்டு ஒன்ற எடுத்துவரும்படித் தமது ஆசிரியர் சொன்னதையும் எழுதியிருக்கிறார். மறைந்த கங்கிரஸ் தலைவர் எல்.இளையபெருமாள், தான் படிக்கும்போது பள்ளியில் ‘ பறையன் பானை’ என எழுதப்பட்ட பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது எனவும் அதில்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் தண்ணீர் குடிக்கவேண்டுமென்று விதி இருந்தது எனவும் சொல்லியது நினைவுக்கு வருகிறது. இளையபெருமாள் குறிப்பிட்டது 75 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம். ஆனால் அதே கேவல நிலை இன்றும் தொடர்கிறது. பானை இல்லை, அதில் அப்படி எழுதப்படவில்லை என்றாலும் எல்லா பிள்ளைகளும் ஒரே பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்க முடியாத பள்ளிகள் இப்போதும் தமிழ்நாட்டில் இருக்கவே செய்கின்றன.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சத்துணவு சமைத்தால் அதை தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் சாப்பிடுவதில்லை என்ற நிலை பல ஊர்களில் இருக்கிறது. அதன்காரணமாக சத்துணவுப் பணியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதையும் செய்திகள் தெரிவிக்கின்றன. பள்ளிகளில் ஆண்டு முடிவில் எடுக்கப்படும் புகைப்படத்தில் தலித் பிள்ளைகள் இடம்பெறக்கூடாது என்பதற்காக அவர்களை அனுப்பிவிட்டு மற்ற பிள்ளைகளைமட்டும் புகைப்படம் எடுக்கும் வழக்கம் பல இடங்களில் இருக்கிறது.

இத்தகைய பாகுபாடுகள் களையப்படவேண்டும் என்பதற்காக திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் செயல்படும் தேசிய ஆலோசனைக் குழு ( National Advisory Council - NAC ) ஒரு துணைக்குழுவை அமைத்து சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியிருக்கிறது. அந்தப் பரிந்துரைகள் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை. ’கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று சொல்லப்படும் இந்த மாநிலத்தில் கல்விமீது அக்கறை உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவர்களும்கூட தலித் மாணவர்களின் பிரச்சனை குறித்து அவ்வளவாகப் பேசுவதில்லை. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஊடகங்களிலும் போதிய இடம் கொடுக்கப்படுவதில்லை.

மத்தியில் ஆணட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் திருமதி சோனியா காந்தி அவர்களைத் தலைவராகக்கொண்டு தேசிய ஆலோசனை கவுன்சில் ( National Advisory Council - NAC ) என ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதில் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அந்த தேசிய ஆலோசனை கவுன்சில் ஒரு துணைக்குழுவை அமைத்து பள்ளிகளில் நிலவும் பாகுபாடுகளைப் பற்றியும் அவற்றைக் களையும் வழிகளைப் பற்றியும் ஒரு அறிக்கையை தயாரித்தது.அந்த அறிக்கை அன்ரைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் அளிக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத்தை வல்லரசுகளுக்குத் திறந்துவிடுவதில் அக்கறை காட்டிய மன்மோகன் சிங் அரசு அந்த அறிக்கையை குப்பைக்கூடையில் போட்டுவிட்டது.

அந்த அறிக்கையில் ஒவ்வொரு மாநில அரசும் வெளியிடவேண்டிய சமத்துவத்துக்கான மாதிரி பிரகடனம் ஒன்றையும் பின்னிணைப்பாகத் தந்திருந்தார்கள்.

* பாகுபாடு இல்லாத இலவசப் பள்ளிப்படிப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளித்துள்ள ஓர் உரிமை.

* எல்லாப்பிள்ளைகளும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படவேண்டும்.

* அடையாளத்தின் அடிப்படையில் பிள்ளைகளிடையே வேறுபடுத்திப் பார்ப்பது. இந்தப் பள்ளியில் பொறுத்துக் கொள்ளப்படாது.

* வகுப்பறையில், விளையாட்டுத் திடலில், அல்லது எந்தவொரு பள்ளிச் செயல்பாட்டில் எந்தவடிவில் வேறுபடுத்தி நடத்துவதையும் ஏற்க முடியாது.

* எல்லாருக்கும் பாகுபாடு அற்ற பள்ளிப்படிப்பு கிடைப்பதை நாம் பாதுகாத்து மேம்படுத்துவதை உறுதி செய்வது, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், உள்ளாட்சி, சமுதாயம் ஆகியவர்களின் கடமையாகும்.

என அந்தப் பிரகடனத்தில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அந்த சமத்துவ பிரகடனத்தை மத்திய அரசும் வெளியிடவில்லை, மாநில அரசுகளும் வெளியிடவில்லை.

மத்திய அரசே மறந்துபோய்விட்ட அந்த அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து மணற்கேணி பதிப்பகத்தின் சார்பில் நாங்கள் நூலாக வெளியிட்டிருக்கிறோம்.

’காங்கிரஸ் அரசு செய்யத் தவறியதை நாங்கள் செய்யப்போகிறோம்’ என சவடால் அடித்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசு காங்கிரஸைவிட மோசமான பொருளாதார கொள்கையை இப்போது செயல்படுத்திவருகிறது. உலக வர்த்தக அமைப்பின் கட்டளைப்படி உள்நாட்டு சட்டங்களையெல்லாம் மாற்றி அமைக்கிறது. இப்போது கல்வியை முழுமையாக வணிகமயமாக்குவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது புதிய கல்விக்கொள்கையை பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கிறது.

இந்தக் கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்கள் ‘குலக்கல்வித் திட்டம்’ ‘ சமஸ்கிருத திணிப்பு’ என இரண்டே அம்சங்களில் அந்தக் கல்விக்கொள்கையை சுருக்குகிறார்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களைத் திரட்டுவதற்கு வேண்டுமானால் இந்த அணுகுமுறை பயன்படலாம். இதை ஒரு அரசியல் கட்சி செய்தால் புரிந்துகொள்ளலாம். ஆனால் கல்வியாளர்களாகத் தம்மை அழைத்துக்கொள்பவர்களே இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவது கவலையளிக்கிறது. இப்படிச் செய்வதால் இந்தக் கல்விக்கொள்கையின் பிற அம்சங்களை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம்.

பாகுபாடு என்ற பிரச்சனையை இந்தக் கல்விக்கொள்கை எப்படி அணுகுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் 43 பக்க முன்மொழிவுகளில் Inclusive Education and Student Support என்ற பகுதியில்தான் பாகுபாடு தொடர்பான பிரச்சனை குறித்து கொஞ்சம் பேசப்பட்டிருக்கிறது. அங்கும்கூட கல்வியை எட்டுவதில் இருக்கும் தடைகளையே விவாதித்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் முன்வைக்கப்பட்டிருக்கும் பதினைந்து அம்சங்களில் ’ சமூக,பாலின,பண்பாட்டு, பிராந்திய வேறுபாடுகள் சரியானவிதத்தில் கவனத்தில்கொள்ளப்படும். பாடத்திட்டத்திலும் பாடங்களைப் போதிப்பதிலும் அதுகுறித்து கவனம் செலுத்தப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆதிவாசி மாணவர்கள் பிராந்திய மொழிகளில் பயில்வதில் சிரமப்படுகிறார்கள்.எனவே அவர்களுக்குப் புரியும் விதத்தில் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிடும் அந்த அறிக்கை , பாலின பாகுபாட்டை சகித்துக்கொள்ள முடியாது. உயர்கல்வியில் பெண்கள் அதிக அளவில் இடம்பெறுவதற்குக் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள்ப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சக அறிக்கையிலோ, சுப்ரமணியன் குழு அறிக்கையிலோ மறந்தும்கூட வகுப்பறையில் இருக்கும் பாகுபாடுகள் குறித்து பேசப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்திலாவது வகுப்பறை பாகுபாடு குறித்தும் பாகுபாடில்லாத பள்ளியை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் ஒருசில பிரிவுகளாவது சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் புதிய கல்விக்கொள்கையிலோ அதைப்பற்றி எந்தவொரு அக்கறையும் காட்டப்படவில்லை. பாகுபாடுகளைக் களைவதற்கு பாஜக அரசு அக்கறை காட்டாதது வியப்பளிக்கும் ஒன்றல்ல; ஆனால் பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்களும் அதுபற்றி அக்கறை காட்டாமல் இருப்பதுதான் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இனிமேலாவது இந்தக் குறையைக் களைவதற்கு கல்வியில் அக்கறைகொண்டோர் முன்வரவேண்டும். அதற்கானதொரு துவக்கமாக இந்த விருதளிப்பு விழா அமையுமென நம்புகிறேன். நன்றி , வணக்கம்.

( நிகரி விருதளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம் )