பத்தாம் கவிதை

Views : 196

பதிவு செய்த நாள் 24-Jan-2020

சொற்கள்

சித்திரவதையில் ரத்தமாய்க் கசியும்போது

சொற்கள்

தோல்வியில் கண்ணீராய் உதிரும்போது

சொற்கள்

இயலாமையில் பெருமூச்சாய்க் கரையும்போது

சொற்கள்

அச்சத்தில் சிறுநீராய் ஒழுகும்போது

எதைக்கொண்டு எழுதுவது ஒரு கவிதையை ?

நீரின் பிரிவைச் சொல்லி

மணல் புலம்பும்

நதியல்லா நதியில்

நுரைத்துப் பாய்கிறது

வெறுப்பு

மழை காணா நிலத்து

முளையெனக் கருகுகிறது

நம்பிக்கை

யாருமற்றத் தனிமையில்

சொற்கள் இல்லாத குரலில்

பாடுகிறேன்

இந்தக்

கடைசிப் பாடலை

ஒரு புரட்சியாளனின் கையில்

ஆயுதமாக இருக்கவேண்டாம்

போராடும்

பெண்ணின் விரல் நகமாகவாவது

இது இருக்கட்டும்