தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு 2013 : திலிப்குமாரின் தொகுப்பை முன்வைத்து ஒரு குறிப்பு

Views : 43

பதிவு செய்த நாள் 27-Jan-2020

வ.வே.சு.அய்யர் 1917ல் எழுதிய குளத்தங்கரை அரசமரம் கதையைத் துவக்கமாக வைத்து

2016 தான் தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு என ஆங்காங்கே விழா

கொண்டாடப்படுகிறது. ஆனால் திலிப்குமார் தொகுத்து சுபஶ்ரீ கிருஷ்ணசாமி

மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் Tamil Story - Through the times through the

tides என்ற நூலில் தமிழில் வெளியான முதல் சிறுகதையை அம்மணி அம்மாள் என்பவர்

1913 ஆம் ஆண்டு விவேக போதினி இதழில் எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தத்

தொகுப்பின் முதல் கதையாக அதை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்கள். அதன்படி

பார்த்தால் தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டை 2013 ல் கொண்டாடியிருக்கவேண்டும்.

அம்மணி அம்மாளின் கதை மரம் ஒன்று பேசுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த மரம்

வெட்டப்பட்டு காகிதமாக மாற்றப்பட்டு நாளேடு அச்சிடுவதற்காகப் போகிறது. அதில்

பரபரப்புச் செய்திகளை அச்சிடுகிறார்கள். அந்த நாளேட்டை படித்துவிட்டு தூக்கிப்

போட்டுவிடுகிறார்கள். மீன் வாங்கி அந்த பேப்பரில் சுருட்டி எடுத்துப் போகிறார் ஒருவர்.

அப்புறம் அது அடுப்பில்போட்டு எரியூட்டப்படுகிறது. இத்துடன் கதை முடியவில்லை.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன? என்று ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து

கேட்கிறார். இந்தமாதிரி பத்திரிகைகளை தடைசெய்ய வேண்டும் என்கிறான் ஒரு

சிறுவன்.

1913 ல் இப்படியொரு டெக்னிக்கைப் பயன்படுத்தி இந்தமாதிரி ஒரு சிறுகதையைப்

பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியிருப்பது மிகவும் முக்கியமானது.

அம்மணி அம்மாளின் கதை மட்டுமின்றி விசாலாக்‌ஷி அம்மாள் (1884-1926) என்பவர்

எழுதிய கதை ஒன்றும் மொழிபெயர்த்துத் தரப்பட்டிருக்கிறது. அது ஆங்கில

மருத்துவத்தைக் கேலிசெய்வதாக அமைந்திருக்கிறது. குழந்தைக்கு கையில் சிராய்ப்பு

ஏற்பட்டு காய்ச்சல் வருகிறது. கையும் வீங்கிவிடுகிறது. அயல்நாட்டில் மருத்துவம்

படித்துத் திரும்பியிருக்கும் டாக்டரை அழைத்துவந்து காட்டுகிறார்கள். அவர்

குழந்தையின் கையை வெட்டிவிடவேண்டும் என்கிறார். ஒரு பரதேசி கொடுத்த

விபூதியையும் பச்சிலையையும் கையில் தடவுகிறாள் தாய். மறுநாள் வீக்கம்

வடிந்துவிடுகிறது. தாயின் கண்ணீர் அந்தக் குழந்தையின் கையை நனைத்தது. அது கிருமி

நாசினியாக செயல்பட்டு குணமாக்கிவிட்டது என்று சொல்கிறான் அந்தத் தாய்க்குப்

பிறந்த சிறுவன் . அதற்கு ஆதாரமாக ஏதோ ஒரு புத்தகத்தில் போட்டிருப்பதை டாக்டரிடம்

வாசித்துக் காட்டுகிறான். அவர் நம்பமுடியாமல் திகைத்து நிற்கிறார். இந்தக் கதையைப்

படித்தபோது புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்தது. ஆங்கில

மருத்துவ அறிவின்மீது ஐயத்தைக் கிளப்பும் அந்தக் கதையைப்பற்றி முன்பே நான்

எழுதியிருக்கிறேன்.

இந்த ஆங்கிலத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் செல்வ கேசவராயர் (1864-1921)

என்பவர் எழுதிய சிறுகதை மிகவும் நுட்பமாக பிராமண எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது.

அவசர வேலையாக வெளியூர் செல்ல நேரிட்ட ஒருவர் அந்தச் செய்தியைத் தனது நண்பர்

மூலமாகத் தனது வீட்டில் கூறுமாறு சொல்லிவிட்டுப்போகிறார். அந்த நண்பரோ தீ

விபத்தில் இறந்துபோகிறார். வெளியூர் போனவரும் விபத்தில் இறந்துவிட்டாரெனக்

கருதி அவரது வீட்டில் காரியமெல்லாம் செய்துவிடுகிறார்கள். இருபது நாட்கள் கழித்து

அவர் ஒரு இரவில் திரும்ப வீட்டுக்கு வருகிறார். அவரைப் பேய் என நினைத்து அவரது

மனைவியும் பெற்றோரும் நடுங்கும் காட்சியைக் கதாசிரியர் சுவாரஸ்யமாக

விவரித்திருக்கிறார். அந்த காலத்து சென்னை குறித்து இந்தக் கதையில் வரும் வர்ணனை

வியப்பளிக்கிறது.

எந்தவொரு தொகுப்பையும்போலவே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள

சிறுகதைகளின் தேர்வும் தொகுப்பாசிரியரின் அகவிருப்பத்தைப் பொருத்ததாகவே

அமைந்திருக்கிறது. ஆனாலும் திலிப்குமார் தன்னால் முடிந்த வரைக்கும் நடுநிலையை

கடைபிடித்திருக்கிறார்.

தமிழில் பரிசோதனை முயற்சியாக எழுதிப்பார்க்கப்பட்ட பின் நவீனத்துவ வகைப்பட்ட

கதைகளை திலிப்குமார் இந்தத் தொகுப்பில் சேர்க்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின்

கடைசியில் தமிழில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய தலித் இலக்கியத்தில் வெளிப்பட்ட

வாழ்க்கை அனுபவம் இத்தகைய பின் நவீனத்துவ பரிசோதனைகளை

அர்த்தமற்றவையாக்கிவிட்டது என திலிப்குமார் தனது முன்னுரையில்

குறிப்பிட்டிருக்கிறார். இது விவாதத்துக்குரியது.

நான் படித்தவரை சுபஶ்ரீயின் மொழிபெயர்ப்பு சரளமாக இருக்கிறது. அடர்த்தியான

மொழியில் சொல்லப்பட்ட கதையை எப்படி மொழிபெயர்த்திருக்கிறார் என்பதை அப்படி

எழுதப்பட்ட மூலக் கதை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டுதான் பார்க்கவேண்டும்.

குஜராத்தியைத் தாய்மொழியாகக்கொண்ட திலிப்குமார் தனது கூர்மையான

படைப்புகள்மூலம் தமிழ் மொழிக்குப் பங்களிப்புச் செய்துவருகிறார். இது அவர் தமிழுக்கு

செய்திருக்கும் மற்றுமொரு பங்களிப்பு.