புலப்படா மக்கள் : பழங்குடி இருளர்கள்

Views : 127

பதிவு செய்த நாள் 05-Feb-2020

எண்ணிக்கைக்குதான் மதிப்பு என்ற நமது பாராளுமன்ற அரசியல் முறையில் மக்கள் தொகையில்

குறைவான எண்ணிக்கை கொண்ட சமூகக் குழுக்கள் தேர்தல் காலத்திலும்கூட அரசியல்

கட்சிகளின் பார்வையில் தென்படுவதில்லை. அப்படித்தான் தமிழ்நாட்டில் வாழும் பழங்குடியினர்

புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 36 பழங்குடியின சாதிகள் உள்ளன. அவர்களது மக்கள் தொகை 7.95 லட்சம்

எனவும், அது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 1.10 சதவீதம் எனவும் 2011 மக்கள்

தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில்

பழங்குடியினரின் முன்னேற்றத்துக்கென கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுவதாக

அறிவிக்கப்பட்டாலும் அந்தத் தொகை இந்த மக்களுடைய நலன்களுக்காக முழுமையாகப்

பயன்படுத்தப்படுவதில்லை. 2018 – 19 ஆம் நிதி ஆண்டில் பழங்குடியினர் துணைத் திட்டத்தின்

கீழ் 794.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அந்தத் தொகை 17 துறைகளின் மூலம்

செலவிடப்படுவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள பழங்குடிகளில் தோடா, கோடா, குரும்பாஸ், இருளர், பணியன்,

காட்டுநாயக்கன் ஆகிய ஆறு சாதிகளை அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி சாதிகளாக

(Particularly Vulnerable Tribal Groups -PVTG ) அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு

நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது. அந்த ஆறு சாதிகளில் ஒன்றாக

இருக்கும் இருளர் சமூகத்தவர் நீலகிரி பகுதியில் மலைப் பிரதேசத்திலும் விழுப்புரம், கடலூர்,

காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சமவெளிகளிலும் வாழ்கின்றனர். கோடிக் கணக்கில் நிதி

ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அரசு கூறினாலும் பெரும்பாலான இருளர்

பழங்குடி மக்களுக்கு குடியிருக்க வீடுகளோ, அவர்களது குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளோ

இல்லை. அவர்கள் இப்போதும் நீர்நிலைகளின் கரைகளில் புறம்போக்கில்தான் குடிசை

போட்டுக்கொண்டு வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் பழங்குடியின மாணவர்களுக்கென அரசு 308 உண்டி உறைவிடப்

பள்ளிகளையும் 7 ஏகலைவா மாதிரிப் பள்ளிகளையும் நடத்துகிறது. அதில் 27941 மாணவர்கள்

பயில்கின்றனர். அவற்றைத் தவிர சில தொண்டு நிறுவனங்களும் பள்ளிகளை நடத்துகின்றன.

எனினும் தமிழ்நாட்டின் படிப்பறிவு பெற்றோரின் சராசரி 80% க்கு மேல் இருக்கும் நிலையில், அது

பழங்குடியினரிடையே 41.53% ஆக மட்டுமே இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள

இருளர்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் வெறும் 38% மட்டும்தான் என பழங்குடி இருளர்

பாதுகாப்பு சங்கம் 2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது. அரசாங்கத்தின்

புள்ளி விவரங்களையும் யதார்த்த நிலையையும் ஒப்பு நோக்கும்போது பழங்குடியின

மக்களுக்கென ஒதுக்கப்படும் நிதி ஏட்டளவில்தான் உள்ளதே தவிர அவர்களைச் சென்று

சேர்வதில்லை என்பதைத்தான் நாம் புரிந்துகொள்கிறோம்.

பழங்குடியினரின் பொருளாதார, கல்வி வளர்ச்சி தடைபடுவதற்கு ஆட்சியாளர்களின் அலட்சியம்

மட்டுமே காரணமல்ல, அவர்களுக்கு எதிரான சாதிய காழ்ப்புணர்வும், அதனடிப்படையில்

ஏவப்படும் வன்கொடுமைகளும் அதில் முக்கிய பங்காற்றுகின்றன. தீண்டாமை என்னும் இழிவு

பழங்குடியினருக்கு இல்லை எனக் கூறப்பட்டாலும் பட்டியல் சாதி மக்களைப் போலவே பழங்குடி

மக்களும் சாதிய பாகுபாடுகளாலும் , வன்கொடுமைகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.

தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரப்படி பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள்

தொடர்பாக தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டில் 18 வழக்குகளும், 2015ஆம் ஆண்டில் 25

வழக்குகளும், 2016ஆம் ஆண்டில் 19 வழக்குகளும் பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது. 2016 ஆம்

ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 16 வழக்குகளில் கற்பழிப்பு வழக்கு ஒன்றே ஒன்று

மட்டும்தான். இதர வழக்குகள் யாவும் சாதாரண குற்றங்களுக்கானவை எனத்

தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது பழங்குடியினருக்கு எதிரான

வழக்குகளைக் காவல்துறை சரியாகப் பதிவு செய்வதில்லை, அப்படியே செய்தாலும் தேசிய குற்ற

ஆவண மையத்துக்கு முறையாக அதைத் தெரிவிப்பதில்லை என்பது புரிகிறது. ஏனெனில் 1993

க்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச்

சங்கத்தின் மூலமாக மட்டும் 401 புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டுள்ளன.

அப்படியென்றால் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வன்கொடுமைகள்

நடைபெற்றிருக்கும், எத்தனை புகார்கள் அளிக்கப்பட்டிருக்கும் என்பதை நாம்

யூகித்துக்கொள்ளலாம். ​

தமிழ்நாட்டில் பழங்குடியினருக்காக ஆங்காங்கே சில சங்கங்கள் உருவாக்கப்பட்டு

செயல்படுகின்றன. அவை பெரும்பாலும் அவர்களது நலத் திட்டங்கள் தொடர்பாகவே கவனம்

செலுத்துகின்றன.அந்த சங்கங்களிலிருந்து ‘ பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்’ அடிப்படையில்

வேறுபட்டது. இருளர் மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதை முதன்மையான

நோக்கமாகக் கொண்டு ஒரு மனித உரிமை இயக்கமாக உருவானது அது.

1993ஆம் ஆண்டு அத்தியூர் விஜயா வழக்கைக் கையிலெடுத்துப் போராடியதில் துவங்கிய இந்த

இயக்கத்தின் பணி 1996ஆம் ஆண்டு ஒரு சங்கமாக அமைப்பு வடிவம் பெற்றது. சுமார் கால்

நூற்றாண்டு காலமாக இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. இக்காலகட்டத்தில் விழுப்புரம்

மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான வன்கொடுமை வழக்குகள் இயக்கத்தின் மூலம் பதிவு

செய்யப்பட்டன, குற்றவாளிகள் சில வழக்குகளில் தண்டிக்கவும்பட்டுள்ளனர். இந்த இயக்கம்

வன்கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக சமரசமில்லாமல் மேற்கொண்டு வரும்

அரசியல்ரீதியான, சட்டரீதியான நடவடிக்கைகளின் காரணமாகவே விழுப்புரம் மாவட்டத்தில்

இருளர் மக்கள் மீதான வன்கொடுமைகள் கொஞ்சமேனும் குறைந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினர், மொத்த மக்கள் தொகையில் 2.16% ஆக உள்ளனர்.

அவர்களுள் பெரும்பான்மையினர் இருளர்கள் ஆவார்கள். அவர்களில் பெரும்பாலோர்

நிலமற்றவர்களாக, தினக்கூலி வேலை செய்பவர்களாக உள்ளனர். செங்கல் சூளைகளில் வேலை

செய்வதற்காகவும், கரும்பு வெட்டும் வேலைக்காகவும், அரிசி ஆலைகளில் வேலை

செய்வதற்காகவும் இருளர்கள் பலர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொத்தடிமைகளாக

வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டின் பூர்வகுடிகளாகக் கருதப்படும் பழங்குடியினருக்கு வீட்டு மனைகூட இப்போது

சொந்தமாக இல்லை. அதைப்பற்ரி அதிகாரிகள் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. விழுப்புரம்

மாவட்டத்தில் இருளர்களில் மனைப்பட்டா இல்லாதவர்கள் 43%. விழுப்புரம் மாவட்டம் வானூர்

வட்டம், புளிச்சப்பள்ளம் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் உள்ளன.

அவர்களுக்கு மனைப் பட்டா வழங்குவதற்காக 1993 ஆம் ஆண்டு 1. 85 ஏக்கர் நிலம் அரசால்

கையகப்படுத்தப்பட்டது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இருளர்களுக்கு

ஆதரவாக 2009ல் தீர்ப்பு வெளியானது. ஐந்தாண்டுகள் ஆகியும், ஆதிதிராவிடர் நலத்துறையினர்

மேற்படி இடத்தை இருளர்களுக்கு பட்டா வழங்கி அளந்து கொடுக்கவில்லை. அது தொடர்பாகப்

பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. அதைப்போலவே திண்டிவனத்துக்கு

அருகிலுள்ள சஞ்சீவீராயன்பேட்டை, பெரப்பேரி, புலியனூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும்

இருளர்களுக்கும் இதுவரை மனைப்பட்டா வழங்கப்படவில்லை.

சமூகத்தில் அனைத்து பிரிவினருக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வருவாய்த்துறையைச்

சேர்ந்த வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளிலேயே சாதிச் சான்றிதழ்

வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பழங்குடியினருக்கு சாதிச்

சான்றிதழ் வழங்கும் அதிகாரமோ கோட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிலர் போலிச்

சான்றிதழ்கள் பெற்றுவிடுகிறார்கள் என்பதாலேயே பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ்

வழங்குவதில் அத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

போலிச் சான்றிதழ் பெறுபவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக பழங்குடியினரைத் தண்டிப்பதாக

இந்த அணுகுமுறை உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சாதிச் சான்றிதழ் கேட்டு பழங்குடியின

மக்கள் எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டனர். தம் மீதான சாதிய

வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடிவந்த பழங்குடி மக்கள் இப்போது சாதிச் சான்றிதழ்

பெறுவதற்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எல்லோரும் ஆட்சி அதிகாரத்தைக்

கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டும்போது பழங்குடி இருளர் மக்களோ தமது பிள்ளைகள்

படிப்பதற்காக சாதிச் சான்றிதழ் கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆரவாரத்தைத்

தாண்டி அவர்களது குரல் ஆட்சியாளர்களின் செவிகளை எட்டுமா ?