2021 தேர்தலும் தலித் வாக்குகளும்

Views : 311

பதிவு செய்த நாள் 05-Feb-2020

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முதன்மையான பங்கு தலித் வாக்குகளுக்கு

உள்ளது தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 21% ஆக உள்ள தலித் வாக்காளர்கள் தேர்தலில் மிக

அதிகமாக வாக்களிக்கக் கூடியவர்களாக உள்ளனர். மாநிலத்தின் சராசரி வாக்குப்பதிவு 70%

இருக்கிறது என்று சொன்னால் தலித் வாக்காளர்களின் வாக்குப் பதிவு 90% க்கு மேல் இருக்கும்.

எனவே ஒரு தொகுதியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில்மற்ற வாக்குகளைக்காட்டிலும்

தலித் வாக்குகளுக்கு அதிக பங்கு இருக்கிறது.

தலித் வாக்குகளின் அடர்த்தி

தலித் வாக்குகள் தமிழ்நாடு முழுவதுமுள்ள சட்டமன்றத் தொகுதிகள் எல்லாவற்றிலும் பரவலாக

இருக்கின்ற அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் செறிவாகவும் உள்ளன. இத்தகைய

பண்பு தமிழ்நாட்டில் வேறு எந்த சமூக வாக்குகளுக்கும் கிடையாது.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியை எடுத்துக்கொண்டு பார்த்தால் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத்

தொகுதியில் தலித் வாக்குகள் 28.5 1%, பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் 34.40 %

,திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் 29.4 8% , பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில் 33.8 7%

ஆகும்.

சென்னை மாநகருக்கு உட்பட்ட திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் தலித் வாக்குகள் 24.8 6%,

எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 23.8%, துறைமுகம் தொகுதியில் 19% பெரம்பூர் தொகுதியில்

20% ஆக இருக்கின்றன.

தலித் வாக்குகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் கூட அது 16.3 ஆக

உள்ளது. அங்கு தனித்தொகுதியாக இருக்கும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தலித்

வாக்குகள் 21.7 3% என்றால் பொதுத் தொகுதியாக உள்ள மொடக்குறிச்சியில் 17.3 7%

அந்தியூரில் 17.03%, காங்கேயத்தில் 17.2 0% ஆக உள்ளது.

கோவை மாவட்டத்திலும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 21.94% ஆகவும்,

பல்லடத்தில்19.41% ஆகவும் உள்ள தலித் வாக்குகள் அந்தத் தொகுதிகளின் முடிவுகளைத்

தீர்மானிக்க கூடியவையாக உள்ளன.

அதிமுகவும் தலித் வாக்குகளும்

தமிழ்நாட்டில் பரவலாக விடுதலை சிறுத்தைகள் கட்சியாலும், தென்மாவட்டங்களில் சில

இயக்கங்களால் தலித் வாக்குகள் திரட்டப்பட்டிருந்தாலும் அவற்றின் செல்வாக்கையும் தாண்டி

இரண்டு விதங்களில் தலித் வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்து வந்தனர். ஈர்ப்பு மிக்க

ஆளுமைகளை நம்பி வாக்களித்தல், சாதிய முரண்பாடுகளின் அடிப்படையில் சில கட்சிகளுக்கு

எதிராக வாக்களித்தல் என்ற முறைகளில் அவர்களது வாக்குகள் அளிக்கப்பட்டு வந்தன.  

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய ஈர்ப்பு மிக்க ஆளுமைகளின் வசீகரத்தால் கணிசமான தலித்

வாக்குகள் அதிமுகவுக்கு அளிக்கப்பட்டு வந்தன. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தலித்

வாக்குகளை அதிமுகவை நோக்கி ஈர்க்கும் ஆளுமையாக செல்வி ஜெயலலிதா விளங்கினார்.

இப்போது செல்வி ஜெயலலிதாவும் மறைந்துவிட்ட நிலையில் அதிமுகவை நோக்கி தலித்

வாக்குகளை ஈர்க்கும் ஆளுமை என யாரும் அக்கட்சியில் இல்லை.

தேமுதிகவும் தலித் வாக்குகளும்

விஜயகாந்த் அரசியலில் இறங்கியபோது அதிமுக வாக்கு வங்கியைக் குறிவைத்தே தனது

வியூகங்களை வகுத்தார். அதிமுகவின் பாரம்பரியமான தலித் வாக்கு வங்கியை தன் வசம்

ஈர்க்கவேண்டும் என்பதற்காகத் தனது சினிமா செல்வாக்கைப் பயன்படுத்தியதோடு கறுப்பு

எம்ஜிஆர் எனத் தன்னைக் கூறிக்கொண்டார். அத்துடன் நின்றுவிடாமல் வட மாவட்டங்களில்

தலித்துகளுக்கும் பாமகவுக்கும் இடையே இருக்கும் முரண்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ளும்

நோக்கில் பாமகவுக்கு எதிரான அரசியலைக் கையிலெடுத்தார்.

விஜயகாந்தின் இந்த உத்திகள் ஓரளவு கைகொடுக்கவே செய்தன. அதனால் தேமுதிக கட்சிக்கு

தலித்துகளின் ஆதரவு குறிப்பிடும்படியாக இருந்தது. அதனால்தான் வடமாவட்டங்களில்

கணிசமான வாக்குகளை அக்கட்சியால் பெறமுடிந்தது. இப்போது விஜயகாந்த் உடல் நலம் குன்றி

இருக்கின்ற காரணத்தால் அவரது சினிமா கவர்ச்சி மங்கிவிட்டது. அதுமட்டுமின்றி 2014,2019

தேர்தல்களில் பாமக இருந்த அணியில் இடம்பெற்றதால் தலித் வாக்காளர்களிடையே

நம்பகத்தன்மையையும் அவர் இழந்துவிட்டார். எனவே தலித் வாக்குகளை ஈர்க்கும் எந்தக்

காரணமும் இப்போது அந்தக் கட்சிக்கு இல்லாமல் போய்விட்டது.

2009, 2019 பொதுத் தேர்தலின் படிப்பினைகள்

பாமகவுக்கு எதிராக மட்டுமல்ல அக்கட்சி இடம்பெறும் கூட்டணிக்கு எதிராகவும் தலித் மக்களும்

பிற சாதிகளைச் சேர்ந்த வாக்காளர்களும் இருக்கிறார்கள் என்பதை 2009, 2019 பொதுத்

தேர்தலுக்குப் பிறகான ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன.

2009 பொதுத் தேர்தலின்போது ஈழப் பிரச்சனை உச்சத்தில் இருந்தது. அது காங்கிரஸ்

கூட்டணிக்குப் பெரும் பின்னடைவைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் காரணமாகத்

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலன கட்சிகள் அதிமுக தலைமையில் அணிவகுத்தன. அரசியல் சூழல்

சாதகமாக இருந்தும், மிகப்பெரிய கூட்டணியை அமைத்தும் அதிமுகவால் 2009 தேர்தலில்

எதிர்பார்த்த வெற்ரியைப் பெற முடியவில்லை. மாறாக காங்கிரஸ் திமுக விசிக கூட்டணி 28

இடங்களைக் கைப்பற்றியது. பாமகவோ தான் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும்

மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிமுக கூட்டணி வெற்றி பெற முடியாததற்கு அந்தக் கூட்டணியில் பாமக இடம் பெற்றதே

காரணம் என்பதை செல்வி ஜெயலலிதா உடனடியாகவே புரிந்துகொண்டுவிட்டார். பாமக

இடம்பெற்றதால் அதிமுகவின் பாரம்பரியமான வாக்கு வங்கியாக இருந்த தலித் வாக்குகள் அக்

கூட்டணிக்கு எதிராகச் சென்றது மட்டுமின்றி பாமகவின் சாதிய அரசியல் பிற சமூகத்தவரையும்

அன்னியப்படுத்திவிட்டது. அதனால்தான் அதற்குப் பிறகு வந்த எந்தத் தேர்தலிலும் பாமகவை

செல்வி ஜெயலலிதா கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி பாமகவுக்கு தான்

ஆதரவானவர் அல்ல என்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்தினார். அதிமுகவின் பாரம்பரியமான

வாக்கு வங்கியாக இருந்த தலித் வாக்குகளை மீண்டும் தம் பக்கம் ஈர்த்தார். 2014, 2016

  தேர்தல்களில் தனித்து நின்று அதிமுகவால் வெற்றி பெற முடிந்ததற்கு தலித் வாக்குகளை  

ஈர்ப்பதற்கான அந்த உத்தியே முதன்மையான காரணமாகும்.

அதிமுக - தேமுதிக - தலித் வாக்குகள்

செல்வி ஜெயலலிதா மறைந்ததற்குப் பிறகு தலித் வாக்குகளை அதிமுக பக்கம் தொடர்ந்து

தக்கவைத்துக் கொள்ளக்கூடிய ஈர்ப்புமிக்க ஆளுமை என அக்கட்சியில் எவரும் இல்லாமல்

போய்விட்டனர். அதுமட்டுமின்றி 2019 இல் பாமகவுக்கு அதிக எண்ணிக்கையில் இடங்களை

ஒதுக்கி அதிமுக ஏற்படுத்திய கூட்டணி தலித் வாக்காளர்களை முற்றிலுமாக அங்கிருந்து

அந்நியப்படுத்தி விட்டது.

விஜயகாந்தின் உடல் நலிவு ஈர்ப்பு மிக்க ஆளுமை என்ற அவரது பிம்பத்தை உடைத்து விட்டது.

அவரது இடத்தை நிரப்பத் துடிக்கும் அவரது மனைவி பிரேமலதாவோ திமுக எதிர்ப்பு என்ற

அரசியலை மட்டுமே நம்பியிருக்கிறார். தலித் வாக்காளர்களை ஈர்ப்பது குறித்த எந்தவொரு

உத்தியும் அவரிடம் இல்லை. பாமக இடம்பெற்றிருக்கும் பாஜக அதிமுக கூட்டணியில்

இடம்பிடிப்பதில் அவர் காட்டும் ஆர்வம் தலித் வாக்காளர்களுக்கு உவப்பானதில்லை.

வடமாவட்டங்களில் அதிமுக பாமக கூட்டணியால் கோபமடைந்துள்ள தலித் வாக்காளர்களும்,

விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக அவரது ஈர்ப்பு வளையத்திலிருந்து விடுபட்டுள்ள தலித்

வாக்காளர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர் என்பதை

2019 பொதுத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத்

தேர்தலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய உண்மை இது.