சனாதனத்தின் எழுச்சியும் பொருளாதார வீழ்ச்சியும்

Views : 127

பதிவு செய்த நாள் 08-Jan-2020

தோழர்களுக்கு வணக்கம்

இந்த மேடையில் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக நான் நிற்கிறேன்.நான் வெற்றி பெற்றவுடன் தோழர் சி எச் வி அவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த போது நான் அவரிடத்தில் சொன்னேன்,’ நான் ஒரு கட்சியின் பிரதிநிதியாக மட்டுமல்ல வங்கி ஊழியர்களின் பிரதிநிதியாகவும் நாடாளுமன்றத்திற்குச் செல்கிறேன்.என்னை உங்கள் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தேன்.

இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இந்த நிதிநிலை அறிக்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் அறிவிப்புகள் இடம்பெறும் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தோம்.ஆனால் நமக்கெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.பொதுத்துறை வங்கிகளுக்காக 70,000 கோடி recapitalisation க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்றுவதற்கு இந்தத் தொகை போதுமானதல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.இந்தத் தொகை புதிதாகக் கடன் வழங்குவதற்கு பயன்படப்போவதில்லை.வாராக் கடன்கள் ஒன்பதரை லட்சம் கோடியை எட்டி விட்ட நிலையில் இந்தத் தொகையைக் கொண்டு புதிய கடன்களை வழங்குவது சாத்தியமல்ல.

இங்கே இருக்கிற வங்கி ஊழியர்கள் மற்றவர்களைவிட பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் தெளிவு கொண்டவர்களாக இருப்பீர்கள் . அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கத்தை ஏற்படுத்திய போது இந்தியப் பொருளாதாரம் அதனால் பாதிக்கப்படவில்லை, அதற்குக் காரணம் பொதுத்துறை வங்கிகள் தாம் என்று கவிஞர் கனிமொழி அவர்கள் குறிப்பிட்டார்கள்.ஆனால் இப்போது பொருளாதார மந்தநிலை இந்தியாவில் தலைகாட்டத் தொடங்கி விட்டது.பாஜகவின் கடந்த ஆட்சியின்போது அது ரியல் எஸ்டேட் செக்டாரில் வெளிப்பட்டது.பல்லாயிரக்கணக்கான வீடுகள், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை செய்ய முடியாமல் அப்படியே கிடக்கின்றன.வங்கி ஊழியர்கள் கூட வீட்டு கடன்களைப் பெற்று வீடுகளை வாங்க முடியாத நிலை.இந்த பொருளாதார மந்த நிலையின் அடுத்த கட்டமாக அது இப்போது automobile industry இல் வெளிப்பட ஆரம்பித்துள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தமது உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.ஏறத்தாழ 10 லட்சம் கார்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன.60 லட்சத்துக்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் கிடக்கின்றன.இதனுடைய தாக்கம் வங்கிகளின் மீது இருக்கும்.ஒரு automobile industry உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தினால் அதைச் சார்ந்து இருக்கிற நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்படும்.இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை மோடி அரசு பதவியேற்றதும் நமது உள்நாட்டு மொத்த உற்பத்தியை- ஜிடிபி -கணக்கீடு செய்வதற்கான அடிப்படைகளை மாற்றியமைத்தது.அதன்மூலம் நமது பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டு இருப்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது .இந்தியாவின் ஜிடிபி எப்படி தவறாகக் கணக்கிடப்படுகிறது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்ரகுராம் ராஜன் அம்பலப்படுத்தியிருக்கிறார்.பல்வேறு நிறுவனங்களும் இதை சுட்டிக்காட்டி இருக்கின்றன.

நமது பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதைக் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கும் செலவு செய்யப்பட்டதற்கும்  இடையிலான வித்தியாசத்தை வைத்து கணித்து விடலாம்.கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட சுமார் 29 சதவீதம் குறைவாகவே செலவு செய்யப்பட்டிருக்கிறது.பல துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் வெட்டி குறைக்கப்பட்டிருக்கிறது.சமூக பாதுகாப்பு திட்டங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த முறை நமது நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் உரையை வாசிக்கும்போது எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்ற புள்ளி விவரங்களைத் தெரிவிக்கவில்லை.அப்படி தெரிவித்தால் நம்முடைய பொருளாதார நிலை எளிதில் வெளிப்பட்டு விடும்.அதனால் தான் அதை மூடி மறைத்து இருக்கிறார். அனேகமாக இந்தியா சுதந்திரம் அடைந்து சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்களிலேயே  இப்படி தொகையை வெளிப்படையாகச் சொல்லாமல் வாசிக்கப்பட்ட பட்ஜெட் இது தான் முதலாவதாக இருக்கும்.

வழக்கமாக கடந்த ஆண்டு பட்ஜெட்டைவிட அதற்கு அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்படும்.ஆனால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. ஏழை எளிய மக்கள் தமது வாழ்வாதாரத்துக்கு நம்பி இருக்கிற 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது.அதுபோலவே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது.இப்படி குறைத்திருப்பது வெளியே தெரிந்துவிடும் என்ற காரணத்தினாலே தான் நிதியமைச்சர் அவர்கள் தனது உரையில் இந்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.பட்ஜெட்டில் செய்யப்படும் இத்தகைய மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு எளிதில் புரிவதில்லை.உங்களைப் போன்ற வங்கி ஊழியர்கள்தான் அதை வெளிப்படுத்த வேண்டும். பட்ஜெட் வெளியிடும் போது அதைப் பற்றி முதலிலே கருத்து சொல்கிறவர்களாக

நீங்கள் இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு நீங்கள் இதை நெருக்கமாகக் கவனிக்க வேண்டும்.பட்ஜெட்டுக்கு முன்பாகவே இந்த பட்ஜெட்டில் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பதை முன் மொழிபவர்களாக வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும்.தோழர் சி ஹெச் வி அவர்களிடத்திலே கேட்டேன், வங்கி ஊழியர் ஊதிய பேச்சுவார்த்தை ஏன் இன்னும் நிறைவு பெறாமல் இருக்கிறது என விசாரித்தேன்.தேர்தலுக்கு முன்பு அது நிறைவு பெற்றிருந்தால் கொஞ்சம் கூடுதலாக நாம் பெற்றிருக்க முடியும்.இப்போது நம்முடைய பேர சக்தி குறைந்து விட்டது. அதிகாரிகள் சங்கத்தினர் ஒத்துழைக்காத காரணத்தினால் ஊழியர் சங்கம் தனியாக பேசி முடிவு செய்வது என தீர்மானித்து இருக்கிறோம்’ என்று தோழர் சி எச் வி குறிப்பிட்டார் அதிகாரிகள் சங்கத்தினரை ஒத்துழைக்க விடாமல் தடுத்தது பாஜகதான்.அவர்கள் தான் அதற்குப் பின்னணியில் இருக்கிறார்கள்.இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக வங்கிகளில் ஊழியர்கள் அதிகமாக இருப்பார்கள் அதிகாரிகள் குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள்.ஆனால் இப்போதோ ஊழியர்களை விட அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது ஒட்டுமொத்தமாக வங்கித்துறையில் 11 லட்சத்து 75 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள்.அதில் 5 லட்சத்து 2 ஆயிரம் பேர் அதிகாரிகள், 4 லட்சத்து 81 ஆயிரம் பேர் தான் ஊழியர்கள். பொதுத்துறை வங்கிகளில் கொஞ்சம் ஊழியர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது, ஆனால் தனியார் துறை வங்கிகளில் ஊழியர்களை விட இரண்டு மடங்கு எண்ணிக்கையில் அதிகாரிகள் இருக்கிறார்கள்.இது நமது பேர வலிமையைக் குறைக்கிறது என்பது மட்டுமல்ல வங்கிகளுடைய செயல்பாட்டின் தன்மையையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது.

 

இப்போது ஜன்தன் கணக்குகள் அனைத்திலும் 5 ஆயிரம் ரூபாய் ஓவர் டிராப்ட் அனுமதிக்கப்படுவதாக நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்.அதுபோலவே மகளிர் சுய உதவி குழுக்கள் ஒவ்வொன்றிலும் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் முத்ரா கடன் வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.இவற்றையெல்லாம் செய்யப்போவது பொதுத்துறை வங்கிகள் தாம்.  அரசாங்கத்தினுடைய இப்படியான அறிவிப்புகளைச் செயல்படுத்துகிறவர்கள் பொதுத்துறை வங்கிகள்தாம் தனியார் துறை வங்கிகள் அல்ல.ஆனால் அரசாங்கமோ பொதுத்துறை வங்கிகளை அழித்துவிட்டு தனியார் மயத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.பொதுத்துறை வங்கிகள் இருந்தால்தான் நமது பணி பாதுகாக்கப்படும். அதுமட்டுமல்லாமல் பெருமளவு கிராமப்புறங்களைக் கொண்டிருக்கிற இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் இல்லாவிட்டால் வளர்ச்சியும் முன்னேற்றமும் சாத்தியமே இல்லை.எனவே பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாக்க வேண்டியது என்பது பணியில் இருக்கிற நம்முடைய வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல, அது இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதோடு தொடர்பு கொண்டது.அதனால்தான் இங்கே பேசிய பலரும் வங்கிகள் அரசுடமையாக்கப்பட்ட வரலாற்றை எடுத்துச் சொன்னார்கள்.  கியூபாவில்  புரட்சியைத் தலைமையேற்று வழி நடத்தி வெற்றி பெறச் செய்த ஃபிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் ஒரு முறை,’ வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்று சொன்னார்.வரலாறு விடுதலை செய்வது மட்டுமல்ல போராடவும் தூண்டும்.அதனால்தான் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.நம்முடைய போர்க்குணத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தேவை இப்போது அதிகரித்திருக்கிறது. இது வங்கி ஊழியர் சங்கங்களின் பொறுப்பு மட்டுமல்ல,  ஒவ்வொரு தோழரும் தனிப்பட்ட முறையில் இந்த உணர்வைப் பாதுகாக்க வேண்டும்.இல்லாவிட்டால் நாம் எளிதாக வலதுசாரி மனோபாவத்துக்கு ஆட்பட்டு விடுவோம். வங்கித்துறையில் 23 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தில் வங்கி ஊழியர்கள் பலர் இப்படி வலதுசாரி மனோபாவத்துக்கு ஆட்பட்டிருப்பதை நான் அறிந்தவன் என்ற முறையில் இதைச் சொல்லுகிறேன்.இடதுசாரித் தொழிற்சங்கங்களில் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட வலதுசாரி மனோபாவத்துக்கு ஆட்பட்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.அதெல்லாம் சேர்ந்து தான் இன்று பாஜக மிருக பலத்தோடு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வழி கோலியிருக்கிறது.எனவே வர்க்க ஒர்மையைப் பெறுவது மிக மிக அவசியம்.அதற்கானப் பணிகளை நிச்சயமாக நாம் செய்ய வேண்டும்.இந்தப் பொன்விழா ஆண்டிலாவது வங்கி ஊழியர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை நாம் உருவாக்க வேண்டும்.இதை நமது முதன்மையான கடமைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன்.  இன்றைக்கு தொழிற்சங்கங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது முன்பெல்லாம் தொழிற்சங்கப் பொறுப்புகளுக்கு தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன் வருவார்கள்.இப்போது ஆட்களைத் தேட வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.இதை மாற்ற வேண்டுமென்றால் இத்தகைய பயிற்சி அவசியம்.தொழிற்சங்க நடைமுறைகள் பற்றியும் பொதுவான அரசியல் சூழல் குறித்தும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவேண்டும்.விழுப்புரம் பகுதியில் அத்தகைய பயிற்சி மையம் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பொன் விழா கருத்தரங்கம் சென்னையோடு நின்றுவிடக்கூடாது.தமிழகத்தின் பெரு நகரங்கள் அனைத்திலும் இது நடத்தப்படவேண்டும்.விழுப்புரத்தில் அத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படுமானால்  அதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய நான் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துக் கொண்டு இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்து அமைகிறேன் வணக்கம்!

(13.07.2019 அன்று காலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் பொன்விழா கருத்தரங்கில் ஆற்றிய உரை)