மகளிரைக் காவுகொள்ளும் கருவாய்ப் புற்றுநோய் - ரவிக்குமார்

Views : 119

பதிவு செய்த நாள் 08-Mar-2020

மகளிரைக் காவுகொள்ளும் கருவாய்ப் புற்றுநோய்

ரவிக்குமார்  

உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் பெண்கள் கருவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பாதிக்கப்படுகிறவர்களில் இரண்டரை லட்சம் பேர் வரை உயிரிழக்கிறார்கள் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2050ஆம் ஆண்டில் அப்படி இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு பத்து லட்சமாக உயர்ந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் கருவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிற பெண்கள் இந்தியாவில்தான் அதிகம். 2002ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1,32,000 புதிய நோயாளிகள் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள் எனவும், 2030ல் அது ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சமாக இருக்கும் எனவும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. 

எய்ட்ஸ் நோயைப் போலவே உடலுறவின் மூலமாகத்தான் எச்.பி.வி. என்ற இந்த வைரஸும் பரவுகிறது என மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் எய்ட்ஸைவிட இது ஆபத்தானதாகும். ஆணுறை அணிவதன் மூலம் எய்ட்ஸ் கிருமிகள் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த வைரஸோ ஆணுறை அணிந்தாலும் பரவக்கூடிய தன்மை கொண்டது. பெரும்பாலான பெண்கள் இந்த வைரஸின் தாக்குதலுக்கு ஆளானாலும் அனைவருமே புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. பலரிடம் அந்த வைரஸ் கிருமிகள் தானாகவே இறந்து போய் விடுகின்றன. சிலரிடம் மட்டும்தான் அது வளர்ச்சிப் பெற்று புற்றுநோயாக மாறுகிறது. இந்த கிருமி ஒருவர் உடலில் புகுந்து அது புற்றுநோயாக வளர்வதற்கு பத்து, இருபது ஆண்டுகள் வரை காலம் எடுத்துக்கொள்கிறது. இதனால் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களே பெருமளவில் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். 

சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் இந்த நோய் பரவுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கல்வியறிவு இல்லாத கிராமப்புறத்து ஏழைப் பெண்கள் தமது உடல் நலத்திலும், சுகாதாரத்திலும் போதுமான அக்கறை செலுத்தாத காரணத்தால் இந்த நோய்க்கு அதிகம் ஆளாகிறார்கள் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமான வழிமுறைகளைப் பின்பற்றாதது இதற்கொரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இப்போதும்கூட நமது கிராமப்புற பெண்கள் மாதவிடாய் காலத்தில் பெரும்பாலும் பழைய துணிகளையே பயன்படுத்துகிறார்கள். சானிட்டரி நாப்கின்கள் விலை அதிகமாக இருப்பது இதற்கொரு காரணமாகும். நாப்கின் வாங்குகிற காசைக்கொண்டு குடும்பத்தின் ஒருநாள் உணவுத் தேவையை சமாளித்துவிடலாம் என்ற நிலையில் ஏழைப் பெண்களிடம் சுகாதாரத்தைப் பற்றி போதிப்பதில் பயனில்லைதான். 

அண்மைக் காலம் வரை இந்தக் கருவாய்ப் புற்றுநோயைக் கண்டறிவது சற்று செலவுமிகுந்த காரியமாக இருந்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டு புதிய பரிசோதனை முறை ஒன்று வெற்றிகரமாக கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதற்கான முன்னோடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வினிகர் எனப்படும் அசிட்டிக் அமிலத்தை கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் தடவி அங்கு ஏற்படும் நிற மாற்றத்தை கண்டறிவதன் மூலம் அந்தப் பெண்ணுக்கு எச்.பி.வி. வைரஸ் தொற்றி உளளதா? என்பதைக் கண்டறியும் இந்த சோதனை வெற்றி அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் இந்த அமிலத்தைத் தடவி ஒரு நிமிடம் கழித்துப் பார்க்கும்போது அந்த இடம் வெள்ளை நிறமாக மாறினால் அவருக்கு எச்.பி.வி. வைரஸ் தொற்றி இருக்கிறது என்று அர்த்தம். அதன்பிறகு அந்தப் பெண்ணை அடுத்த கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த சோதனை முறைக்கு அதிகம் செலவு பிடிப்பதில்லை. முப்பது ரூபாய் முதல் நூறு ரூபாய்க்குள் இதை செய்துவிட முடியும். அனுபவமும், பயிற்சியும் கொண்ட செவிலியர்களேகூட இந்த சோதனையைச் செய்து விடமுடியும். இதற்கு மருத்துவர்கள் இருக்க வேண்டுமென்பதுகூட அவசியமில்லை. 

 இந்த முன்னோடி ஆய்வுக்கு தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் பெண்களில் அறுபத்தேழு பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகமாக இருக்கும் மூன்றாவது பகுதி தமிழகம் என்றும் தெரியவந்தது.  

கருவாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கு இப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை இலவசமாக பெண்களுக்கு போடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 2019 ஆம் ஆண்டுவரை அந்தத் தடுப்பூசி போடும் திட்டத்தைத் தமிழக சுகாதாரத் துறை துவக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டிலாவது அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டுப் பெண்களை கருவாய்ப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.