புதிய அரசியலமைப்புச் சட்டம்- திசைமாறிய ஏவுகணை- ரவிக்குமார்

Views : 282

பதிவு செய்த நாள் 08-Mar-2020

புதிய அரசியலமைப்புச் சட்டம்:

 திசை மாறிய ஏவுகணை


- ரவிக்குமார்

~~~~~~~~~~

( 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்தைப் புதிதாக எழுதவேண்டும் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டபோது அதை எதிர்த்து நான் சட்டப்பேரவையில் பேசினேன். இந்தக் கட்டுரையை 21-1-2007 அன்று ஜூனியர் விகடனில் எழுதினேன்) 

~~~~~~~~~~~~~~~~


 மாநில அரசு நிறைவேற்றப்போகும் நலத்திட்டங்களின் முன்னறிவிப்பாகவே பெரும்பாலும் ஆளுநர் உரை அமைந்திருக்கும். ஆளுநர் அதை வாசித்தாலும் அது மாநில அரசால் தயாரிக்கப்படுவது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஆண்டு ஆளுநர் உரை முழுவதும் இலவசத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளால் நிரம்பியிருந்தது. இந்த ஆண்டும் அப்படித்தான் இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக இந்த ஆளுநர் உரை ஒரு ஏவுகணையை எடுத்து வீசியிருக்கிறது. ''அரசியல் சட்டத்தைப் புதிதாக இயற்ற வேண்டும்'' என்பது தான் அந்த ஏவுகணை.


 பல நாடுகளில் அரசியலமைப்பு சட்டங்கள் புதிதாக எழுதப்பட்டிருப்பதாகவும், இந்திய அரசியல் சட்டத்தை திருத்தி எழுத வேண்டுமென அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள் பலர் கோரி வருவதாகவும், ஆளுநர் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோரிக்கையை அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் எழுப்பினார் எனவும், இதுவரை அரசியலமைப்பு சட்டத்தில் ஏறத்தாழ 100 திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன என்றும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார பரிமாணங்களும், உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளும் முற்றிலுமாக மாறிவிட்டன என்றும் பல்வேறு காரணங்களை ஆளுநர் தமது உரையில் குறிப்பிட்டிருந்த போதிலும் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாகவே இப்படியரு தீவிரமான நிலையை தமிழக அரசு எடுத்துள்ளது எனத் தோன்றுகிறது.


 ''பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தாம் போராடிப் பெற்றிடும் சமூக நீதியைப் பேணிக் காப்பதற்கும், மேலும் சிறுபான்மையினர் உரிமை மற்றும் பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக நீதியை உறுதி செய்வதற்கும் கம்பி மீது நடப்பதைப் போன்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்'' என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் புதிய அரசியலமைப்புச் சட்டம் வேண்டும் என்கிற தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு உண்மையான காரணம்.


 தற்போது இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் நமது அரசியலமைப்பு சட்டமா? என்ற கேள்வி இங்கே எழுகிறது. உலக நாடுகளிலுள்ள அரசியலமைப்பு சட்டங்களிலேயே மிகவும் விரிவான சட்டம் நம்முடையது தான். பல நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, நமது நாட்டுக்கு ஏற்ற ஜனநாயக அமைப்பை நிறுவும் விதமாக அதை அம்பேத்கர் இயற்றினார். நம் நாட்டின் குடிமக்களுக்கு நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நமது அரசியலமைப்பு சட்டம் உறுதியளித்துள்ளது. அதன் முகவுரையிலேயே (Preamble) இவை கூறப்பட்டுள்ளன. அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று இதற்கு முன்பும் பலபேர் பேசியுள்ளனர். பிஜேபி போன்ற அரசியல் கட்சிகளும் கோரி வந்துள்ளன. ஆனால் இந்த அரசியல் அமைப்பு சட்டமே வேண்டாம், புதிதாக எழுத வேண்டும் என்று மாநில அரசே சட்டமன்றத்தில் அதுவும் ஆளுநர் மூலமாக கோரிக்கை விடுப்பது இதுதான் முதல் முறை எனத்தோன்றுகிறது.


 மத்தியில் பிஜேபி தலைமையிலான ஆட்சி நடந்த போது அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த ஆட்சியில் திமுக உள்ளிட்ட 24 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் எதையும் பெறாமலேயே, அரசியல் அமைப்பு சட்டத்தைத் திருத்துவது பற்றிய அறிவிப்பை குடியரசுத் தலைவரின் உரை மூலமாக அன்றைய பிஜேபி அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிப்ரவரி 2000த்தில் அதற்கென ஒரு தேசிய கமிஷனும் அமைக்கப்பட்டது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கடாசலையா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, பராசரன், முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா உள்ளிட்ட பத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.


 அந்த கமிஷனின் நோக்கம் அரசியலமைப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்வது தானே தவிர புதிதாக எழுதுவதல்ல என்று அப்போது பிஜேபி அரசு அறிவித்தது. ஆனால் அதைக்கூட காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. குடியரசு தினப் பொன்விழாவில் உரையாற்றியபோது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் பிஜேபி அரசின் முயற்சியை கடுமையாக விமர்சித்தார்.


 அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ஆம் நாளை ''அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு நாளாக'' கடைபிடிக்குமாறு அறிவித்த காங்கிரஸ் கட்சி அதற்காக நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தியது. இந்தியாவெங்கும் தலித் இயக்கங்களும் களமிறங்கின. இந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்தக் கமிஷனின் பரிந்துரைகள் கைவிடப்பட்டன.


 அன்று தமிழக சட்டப்பேரவையிலும் அதுபற்றிய விவாதங்கள் எழுந்தன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் அப்போது கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கலைஞர் அவர்கள் ''சிறுபான்மையினர் உரிமைகளுக்கோ, மதச்சார்பின்மைக்கோ, மாநிலங்களின் உரிமைகளுக்கோ அரசியலமைப்பு சட்ட மறுஆய்வு கமிஷனால் ஆபத்து வந்தால் அதை திமுக எதிர்க்கும்'' என்று தெரிவித்தார்.


 அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்துவதை திமுக அப்போது ஏற்றுக் கொண்டிருந்தாலும் அதைப் புதிதாக எழுத வேண்டும் என்று அன்றைக்கு கோரவில்லை. இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் அதன் நிலைப்பாடு இப்படி மாறுவதற்கு இடஒதுக்கீடு விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்து வரும் தீர்ப்புகளும், ஜனநாயகத்தின் பிற அமைப்புகளை விட நீதித்துறையே அதிக அதிகாரம் கொண்டது என்பது போல ஒரு நிலை உருவாகி வருவதும் தான் காரணம் என்று கூறலாம்.


 நீதித்துறையே அதிக அதிகாரம் கொண்டது என அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. பல்வேறு தீர்ப்புகளின் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்குப் புதிது புதிதாக விளக்கங்களைக் கூறி மெல்ல, மெல்ல தனது மேலாண்மையை இன்று நீதித்துறை நிலை நாட்டிக்கொண்டுள்ளது. சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தைத் தனக்குக் கீழே இருத்தி வைக்கும் நீதித்துறையின் முயற்சியே இன்று ஆட்சியாளர்களை இன்னொரு துருவத்தை நோக்கி விரட்டியுள்ளது.


 ஆனால் இவை எதுவும் அரசியலமைப்புச் சட்டத்தைப் புதிதாக எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி விடாது. நமது அரசியலமைப்புச் சட்டமானது மிகவும் நெகிழ்ச்சித் தன்மை (flexibility) கொண்டது. அதனால் தான் இத்தனை திருத்தங்களையும் அது ஏற்றுக் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை நமது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் போது ''நெகிழ்ந்து கொடுப்பதாக இருப்பது தான் இதன் சிறப்பு'' என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். ''இது செயல்படக்கூடியது, இது நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது, அமைதி காலத்திலும் சரி, யுத்த காலத்திலும் சரி இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்திக் கட்டிக்காப்பாற்றும் ஆற்றல் கொண்டது'' என அரசியலமைப்புச் சட்டத்தை அவர் வர்ணித்தார்.


 இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ள கிரான்வில் ஆஸ்டின் என்பவர், (The Indian Constitution: Corner stone of a Natrion) கூறியிருப்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருந்தும்: 

 ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களையும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் அதற்கான அமைப்புகளையும் அதில் ஏற்படுத்தியுள்ளனர். ஒருமைப்பாடு, சமூகப்புரட்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் அதன் பிரிக்க முடியாத அங்கங்களாகும். இந்த மூன்றையும் தனித்தனியே அடைந்து விட முடியாது... கடந்த ஐம்பது ஆண்டுகளின் அனுபவத்தில் பார்க்கும் போது இந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களை, அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். இந்த அரசியலமைப்பு சட்டம் மிகச்சிறப்பாக இந்த நாட்டுக்கு சேவை புரிந்துள்ளது'' என்று கிரான்வில் ஆஸ்டின் கூறியுள்ளார்.


 ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் இன்று ஓரளவு காப்பாற்றப்படுவதற்கும், இந்த நாடு இன்றும் மதச்சார்பின்மையைத் தனது கொள்கையாகக் கொண்டிருப்பதற்கும் நமது அரசியலமைப்புச் சட்டம் தான் காரணம். அதனால் தான் இந்துத்துவவாதிகள் அதை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள். இன்று தமிழக அரசு எடுத்துள்ள நிலை அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக மாறிவிடக்கூடாது.


 மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றார்கள். மீண்டும் அதை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் வலியுறுத்தி வருகிறார். அதுபோலவே காவிரி பிரச்சனையிலும், முல்லைப்பெரியாறு சிக்கலிலும் தமிழகத்தின் உரிமைகள் இன்று கேள்விக்குறியாகி உள்ளன. ஆனால் இவற்றை இப்போதுள்ள அரசியலமைப்புச் சட்ட எல்லைக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள முடியும். மத்தியில் கூட்டணி அரசு என்பது யதார்த்தமாகி விட்ட சூழலில், மத்திய அரசின் மீது மாநில கட்சிகளின் செல்வாக்கு முன்பு எப்போதையும் விட கூடுதலாக இருக்கும் இன்றைய நிலையில் முன்பு திமுக வலியுறுத்திய மாநில சுயாட்சியின் கீழ் சொல்லப்பட்ட உரிமைகளைக் கூட அதனால் இப்போது பெற்று விட முடியும். அதற்காக இன்றுள்ள அரசியலமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விட வேண்டும் என்பது அவசியமில்லை.


 அரசியலமைப்பு சட்டம் என்பது மாற்றவே கூடாத 'புனித நூல்' அல்ல. ஆனால் எதற்காக அதை மாற்றப்போகிறோம் என்பது தான் முக்கியம். தற்போது தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியே தீரவேண்டும் என்பதற்கான நியாயத்தை வழங்கவில்லை. 


 'அரசியலமைப்பு சட்டத்தை எரிப்பேன்' என அம்பேத்கரே கூறியிருக்கிறாரே எனச் சிலர் சொல்லக்கூடும். ''இந்த அரசியலமைப்பு சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுமேயானால் அதை எரிக்கிற முதல் ஆளாக நானே இருப்பேன்'' என்றுதான் அவர் கூறியிருக்கிறார். அரசியல் அமைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய போது அவர் கூறிய இறுதி வார்த்தைகளை இத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். ''புதிய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டால் அதற்குக் காரணம் இந்த அரசியலமைப்பு சட்டம் மோசமானது என்பதல்ல, அதை நடைமுறைப்படுத்துபவர்கள் மோசமானவர்கள் என்பதே அதற்குக் காரணமாக இருக்கும்'' என்று அம்பேத்கர் கூறினார். அந்த வார்த்தைகள் இப்போதும் பொருத்தமாகத்தான் இருக்கின்றன.