நாடாளுமன்ற உறுப்பினராக ஓராண்டு

Views : 182

பதிவு செய்த நாள் 24-May-2020

நாடாளுமன்ற உறுப்பினராக ஓராண்டு

2019 ஆம் ஆண்டு இதே தேதியில் பின்னிரவில்தான் (23.05.2020) நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. சிதம்பரம் தொகுதியின் தேர்தல் முடிவு தெளிவாக அறிவிக்கப்படாத நிலையில் எனது வெற்றியைக் கூட பொருட்படுத்தும் மனநிலையில் அப்போது நான் இல்லை.அதன்பிறகு சில மணி நேரம் கழித்து முடிவு அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் மனம் நிம்மதி கண்டது.

இந்த ஓராண்டில் நான் நாடாளுமன்றத்தில் 28 விவாதங்களில் பங்கேற்றதாகவும், 47 வினாக்களை எழுப்பியதாகவும், 1 தனிநபர் மசோதாவை தாக்கல் செய்ததாகவும் பிஆர்எஸ் இணையதளம் கூறுகிறது. ( எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கலாம் என நினைக்கிறேன். சோதிக்கவேண்டும்) 

நான் தாக்கல் செய்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.  அமைச்சர்களை சந்தித்து அளித்த கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கையும் கூட இதில் சேர்க்கப்படவில்லை. அவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது எனக்கே மலைப்பாக இருக்கிறது. 

நாடாளுமன்ற உறுப்பினர் கிராமத் தத்தெடுப்புத் திட்டத்தின்கீழ் தத்தெடுக்கப்பட்ட காந்தலவாடி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு சுமார் 500 பேர் சிகிச்சை பெற்றனர். அங்கு நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் 300 க்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புகளைப் பெற்றனர்.இப்படி தொகுதியிலும் கடந்த ஓராண்டில் மனநிறைவளிக்கும்படி பணிகளைச் செய்திருக்கிறேன். 

வழிகாட்ட யாருமில்லை, உதவிசெய்ய ஒருத்தருமில்லை. நானே கற்றுக்கொண்டு செய்தவை இந்தப் பணிகள். 

விழுப்புரம் தொகுதியில் எம்.பி ஆக இருந்த திரு ஆனந்தன் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 22 விவாதங்களில் பேசியிருந்தார்; அவருக்குப் பின் எம்.பி ஆக இருந்த திரு ராஜேந்திரன் ஐந்து ஆண்டுகளிலுமாகச் சேர்த்து 17 முறை பேசியிருந்தார். அவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நான் ஒரே ஆண்டில் 28 விவாதங்களில் பங்கேற்றதன் அருமை புரியும். அந்த விவாதங்களிலும் நான் எழுப்பிய விஷயங்கள் பெரும்பாலும் மற்றவர்கள் எவரும் எழுப்பாதவை. தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் தொடர்பானவை. 

ஆனால் இதற்கு நான் தனிப்பட்ட முறையில் கொடுத்திருக்கும் விலை அதிகம். இரவு பகல் பாராமல் வேலை செய்வதால் உடல்நிலை சீர்கெட்டிருக்கிறது. டெல்லியின் மாசும், குளிரும்  கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. பத்து வயது கூடிவிட்டதுபோல் உணர்கிறேன். 

வெற்றி பெற்று ஓராண்டு முடிந்த இந்த நேரத்தில் என் மனதில் எந்தவொரு குதூகலமும் இல்லை. இன்னும் அதிகமாக உழைக்கவேண்டும் என்ற உறுதி மட்டுமே இருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு என்பது நான் ஆசைப்பட்டு அடைந்த ஒன்றல்ல, என்னைத் ‘தோழர்’ என எப்போதும் அன்புடன் விளிக்கும் தலைவர் எழுச்சித் தமிழரால் அளிக்கப்பட்ட கடமை. பிடிக்கிறதோ இல்லையோ அந்தக் கடமையைக் குறையின்றிச் செய்யவேண்டும்.அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றவேண்டும்.  

எனது வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கும் , இந்த ஓராண்டில் எனது பணிகளில் உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.