கல்வியைப் பறிக்கும் மோடி அரசு - ரவிக்குமார்

Views : 203

பதிவு செய்த நாள் 09-Dec-2020


2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்தே பாஜக அரசு தலித் மக்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாகக் கல்விக்கான ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

தலித் மாணவர்கள் படிப்பைத் தொடராமல் நிறுத்துவது பத்தாம் வகுப்பில்தான் அதிகம். அதற்கு அவர்களது ஏழ்மை நிலையே முதன்மையான காரணம். வறுமையின் காரணமாக அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகச் செல்வது அந்த வயதில்தான் அதிகம் என்பதால் ஒன்பதாவது, பத்தாவது வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வகுத்தது. விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர் ஒருவருக்கு ஆண்டொன்றுக்கு 350 ரூபாய் உதவித் தொகையும் புத்தகம் மற்றும் இதர விடுதிக் கட்டணத்துக்காக 1,000 ரூபாயும் வழங்கப்படும். வீட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவருக்கு 150 ரூபாயும் புத்தகம் முதலான செலவுகளுக்கு 750 ரூபாயும் வழங்கப்படும்.

‘ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ என அழைக்கப்படும் இந்தத் திட்டத்துக்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு 2013-14இல் ஒதுக்கிய தொகை 882 கோடி ரூபாய். பாஜக ஆட்சிக்கு வந்ததும் 2014-15 பட்ஜெட்டில் அதை உயர்த்துவதற்குப் பதிலாக 834 கோடியாகக் குறைத்தது. ஆனால், அந்தத் தொகையில் 499 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. 2015-16 பட்ஜெட்டில் அது 663 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அந்தத் தொகையில் வெறும் 370.45 கோடி ரூபாயை மட்டுமே பாஜக அரசு செலவு செய்தது. 2017-18 பட்ஜெட்டில் அது வெறும் 50 கோடி ரூபாய் மட்டும்தான் இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையைக்கொண்டு 3.7 லட்சம் மாணவர்களுக்கு மட்டும்தான் ஸ்காலர்ஷிப் வழங்கமுடியும். இந்தியா முழுவதும் இந்த ஸ்காலர்ஷிப் பெறுவதற்குத் தகுதியான சுமார் அறுபத்தைந்து லட்சம் தலித் மாணவர்கள் இருக்கின்றனர். அதில் வெறும் 3.7 லட்சம் மாணவர்களுக்கு மட்டும்தான் கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கியிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம்.

பத்தாம் வகுப்போடு படிப்பை இடைநிறுத்தம் செய்வதில் தலித் மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம். பத்தாம் வகுப்போடு இடைநிறுத்தம் செய்யும் தலித் மாணவர்களின் அளவு 19.36% ஆக உள்ளது என மத்திய அரசின் National University of Educational Planning and Administration அமைப்பு வெளியிட்டுள்ள School Education In India என்ற அறிக்கை கூறுகிறது. இப்படி ஸ்காலர்ஷிப் தொகை நிறுத்தப்பட்டால் அவர்களின் இடைநிற்றல் அளவு மேலும் அதிகரிப்பது தவிர வேறு வழியில்லை.

பள்ளிக்கல்வியின் நிலை இதுவென்றால் உயர்கல்வியின் நிலையோ இன்னும் மோசம். பள்ளிக்கல்வியை முடித்து பட்டப்படிப்புகளில் சேரும் தலித் மாணவர்களுக்கென போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்ற கல்வி உதவித்தொகை திட்டம் உள்ளது. அது 1943ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது அம்பேத்கர் போராடி பெற்ற திட்டமாகும். அந்தத் திட்டத்தின்கீழ் உதவித்தொகையை மாநில அரசுகள் வழங்கிவிட்டு, அதில் மத்திய அரசு தரவேண்டிய பங்கை ஒவ்வொரு ஆண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பாஜக அரசு அமைந்ததிலிருந்து மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை மாநிலங்களுக்கு சரிவர அனுப்புவதில்லை. அதைப்பற்றி 2016ஆம் ஆண்டு தேசிய எஸ்சி ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 2015-16ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கல்லூரியில் படித்த 37,089 தலித் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (NCSC Report: Problems faced by SC students in obtaining Scholarships, page 27) அதற்குக் காரணம் மத்திய அரசு தமிழக அரசுக்குத் தரவேண்டிய தொகையைத் தராததுதான். 2015-16இல் மட்டுமின்றி அதற்கு முந்தைய ஆண்டான 2014-15லும் தமிழக அரசுக்குத் தரவேண்டிய தலித் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தொகையைப் பாஜக அரசு தரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதினார். 2014-15ஆம் கல்வியாண்டில் தலித் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைக்கென மத்திய அரசு தரவேண்டிய தொகையில் 1175.10 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது என அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதுமட்டுமின்றி 2015-16க்கும் பாக்கி உள்ளது. எல்லாமாக சேர்த்து 1549.76 கோடி ரூபாய் தமிழ்நாட்டு தலித் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தொகை பாக்கி உள்ளது என அன்றைய முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். (Economic Times, 17.12.2015)

தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையே ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடி வரும்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்கிற தலித் மாணவர்களின் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்காக 2017-18 பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள தொகை 3347.99 கோடி ரூபாய் மட்டும்தான். இது தமிழ்நாட்டின் பழைய பாக்கியைக் கொடுப்பதற்கே போதாது.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் பட்ஜெட்டுக்கு முன்பாகவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விசிக சார்பில் சந்தித்து மனு ஒன்றை அளித்தோம். போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கென பல்வேறு மாநிலங்களுக்கு 11 ஆயிரம் கோடி பாக்கி தரவேண்டியுள்ளது எனவே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அதில் வலியுறுத்தினோம். ஆனால் 2018-19 இல் 6 ஆயிரம் கோடியாக இருந்ததை அவர் 2019-20 பட்ஜெட்டில் 3 ஆயிரம் கோடியாகக் குறைத்துவிட்டார். 2020-21 பட்ஜெட்டிலும் அது உயர்த்தப்படவில்லை.

தற்போது எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஓபிசி, மைனாரிட்டி மாணவர்களுக்கும் போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இந்த எல்லா ஸ்காலர்ஷிப்களையும் ஒழித்து விட்டு ஒரேயொரு ஸ்காலர்ஷிப் திட்டத்தைக் கொண்டுவர மோடி அரசு முடிவுசெய்துள்ளது. பிரதம மந்திரி இளம் சாதனையாளர்கள் உதவித்தொகைத் திட்டம் (Pradhan Mantri Young Achievers Scholarship Award Scheme for Vibrant India (PM-YASASVI) என அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மைனாரிட்டி மாணவர்களோடு முன்னேறிய சாதி மாணவர்களும் (EWS) சேர்க்கப்படுவார்கள். இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்றால் மட்டுமே உதவித்தொகை கிடைக்கும். அதுவும் இந்தியா முழுவதும் அனைத்துப் பிரிவினரையும் சேர்த்து 62 லட்சம் பேருக்கு மட்டும் தான் உதவித்தொகை. மருத்துவம், பொறியியல், சமூகவியல் என எந்தப் படிப்பாக இருந்தாலும் ஆண்டுக்கு வெறும் 30 ஆயிரம் மட்டுமே தரப்படும் என மோடி அரசு கூறியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் இனி எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாகிவிடும். இந்த அநீதிக்கு தமிழ்நாட்டில் விசிக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளும் தமது எதிர்ப்பைப் பதிவுசெய்யவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சாதியினரைத்தவிர மற்றவர்கள் படிக்கக்கூடாது என்ற மனுஸ்மிருதிக் கோட்பாட்டை மீண்டும் கொண்டுவரப் பார்க்கிறது சனாதன பாஜக அரசு. இந்த சதியை முறியடிக்காவிட்டால் நமது எதிர்காலத் தலைமுறையினர் மீண்டும் தற்குறிகளாக்கப்படுவார்கள்.