ரத்தசோகை பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகம்

Views : 315

பதிவு செய்த நாள் 21-Mar-2020

“ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழ்நாட்டில் அதிகம்” 


ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தகவல்


ரவிக்குமார் எம்.பி இது தொடர்பாக எழுப்பிய கேள்வியும் அதற்கு அமைச்சர் அளித்த பதிலும் பின்வருமாறு: 


கேள்வி: 


நாட்டில் ஏராளமான பெண்கள் அதிலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருப்பதை அரசு அறியுமா? பாதிக்கப்பட்டவர்களின் மாநில வாரியான விபரங்களை தருக.


இது தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி தெரிவிக்கவும்


பதில்: 


தேசிய குடும்ப சுகாதார சர்வே iv இல் (2015-16)15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 53.1% பேர் ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதே வயதுகளுக்கிடையே உள்ள கர்ப்பிணிப் பெண்களில் 50.4% பேர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்தது. ( இதுதொடர்பான மாநில வாரியான புள்ளிவிபரங்கள் கொண்ட பட்டியல் தனியே தரப்பட்டுள்ளது) 


இந்த பிரச்சினை தொடர்பாக தேசிய சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: 


1. ரத்த சோகை இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ் 6 முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கும், பள்ளிக்குச் செல்வதற்கு வயது முற்பட்ட 5 முதல் 9 வயது உள்ள குழந்தைகளுக்கும், வளர் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மொத்தம் 10 முதல் 19 வயது வரை உள்ளவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் 15 முதல் 49 வயதுவரை உள்ளவர்கள் ஆகியோருக்கும், சத்து குறைபாடுகளைக் கண்டறிந்து நீக்குவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இரும்புச் சத்து நிறைந்த மருந்துகள்,

குடல் புழு நீக்க சிகிச்சை,

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரத்தசோகை கண்டவர்களைக் கண்டறிந்து தொடர் சிகிச்சை அளித்தல், பொது சுகாதார நலத் திட்டத்தில் இரும்புச்சத்து உள்ள மருந்துகளைக் கட்டாயமாக சேர்த்தல்,

சத்துக்குறைபாடு அல்லாத பிற நோய்களின் வழியாக ரத்தசோகை ஏற்பட்டால் அதைக் கண்டறிந்து நீக்குதல் முதலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


இவை தவிர சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் அமைச்சர் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். 


அமைச்சர் அளித்துள்ள மாநில வாரியான பட்டியலைப் பார்க்கும்போது 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களில் ரத்தசோகை கொண்டவர்களின் சதவீதத்தில் தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டின் சதவீதம் கூடுதலாக உள்ளது. தேசிய சராசரி 53.1% ஆகும். ஆனால் தமிழ்நாட்டின் சதவீதம் 55% ஆக உள்ளது. கேரளாவில் 34.3% பெண்களும் , கர்னாடகாவில் 44.8% பெண்களும் மட்டுமே இந்த குறைபாட்டுக்கு ஆளாகியுள்ளனர். மகளிர் சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளதையே இது காட்டுகிறது.