டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விழுப்புரம் தம்பதியினர் நலமாக உள்ளனர்

Views : 269

பதிவு செய்த நாள் 22-Mar-2020

டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விழுப்புரம் தம்பதியினர் நலமாக உள்ளனர்

===

ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது மகனைப் பார்த்து விட்டு சிங்கப்பூர் வழியாக விமானத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த விழுப்புரத்தை சேர்ந்த திரு பர்குணன் திருமதி சாந்தி தம்பதியினர் டெல்லி விமான நிலையத்திலிருந்து அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அங்கே ஒரு மாணவர் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள் இப்போது மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 திரு பர்குணன் அவர்களுக்கு சாதாரண இருமல் இருந்துள்ளது. எனவே இருவரையும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி கொரொனா பாதிப்பு இல்லை என்று அறிந்த பிறகே அனுப்ப முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சற்றுமுன் திருமதி சாந்தி அவர்களிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போதுதான் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அவர்களை அழைத்துச் செல்லும் அதிகாரியிடமும் போனில் பேசினேன். ‘மருத்துவ பரிசோதனை செய்து அதில் கொரொனா பாதிப்பு இல்லை என்று தெரிந்துவிட்டால் 48 மணி நேரத்துக்கு பிறகு அவர்களை வீட்டுக்கு செல்ல அனுமதிக்கலாம்’ என்று அவர் தெரிவித்தார். 


அவர்களைப்போல மேலும் சிலரும் மாணவர் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொருவரும் தனித்தனியே தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் திருமதி சாந்தி அவர்கள் குறிப்பிட்டார்கள். உணவு சரியான முறையில் வழங்கப்படுகிறது என்றும் சொன்னார்கள். 


திரு பர்குணன் ரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். விழுப்புரத்தில் மருதூர் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.


“எனது தொலைபேசி எண்ணை வைத்துக் கொள்ளுங்கள், எந்த உதவி தேவையென்றாலும் என்னிடம் பேசுங்கள்” என்று அவர்களிடம் தெரிவித்திருக்கிறேன். 


இருவரும் உடல்நலத்தோடு பாதுகாப்பாக விழுப்புரம் திரும்ப எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களைப்பற்றிய தகவலைத் தந்த திரு Natther Shah அவர்களுக்கு நன்றி.