விழுப்புரம் தம்பதியினர் எனது வீட்டில் உள்ளனர்

Views : 1676

பதிவு செய்த நாள் 26-Mar-2020



திரு பர்குணன் - திருமதி சாந்தி தம்பதியினர் டெல்லியில் எனது வீட்டில் பாதுகாப்பாக உள்ளனர்

- ரவிக்குமார் 

ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது மகன் வீட்டுக்குச் சென்று திரும்பி வந்த போது டெல்லி விமான நிலையத்தில் தடுத்து தனிமைப்படுத்தப்பட்ட திரு பர்குணன் - திருமதி சாந்தி தம்பதியினர் நொய்டாவில் ஒரு மாணவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அயல் நாட்டில் இருந்து வந்ததால் அவர்கள் இருவருக்கும் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு நாள் கழித்து 24.03.2020 இரவு தான் அவர்களுக்கு கொரொனா தொற்று எதுவும் இல்லை என்று மருத்துவர்களால் சான்று அளிக்கப்பட்டது. அவ்வாறான சந்தேகத்தோடு பலர் அங்கே தங்கவைக்கப்பட்டிருப்பதால் அவர்களிடமிருந்து இவர்களுக்கு நோய் தொற்றும் ஆபத்து இருப்பதால் உடனே அங்கிருந்து காலி செய்யுமாறு அதிகாரிகள் அவர்களை வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். நொய்டாவில் எங்குமே தங்குவதற்கு இடம் இல்லை என்று தங்கும் விடுதிகள் எல்லாம் மறுத்துவிட்ட நிலையில் அவர்கள் நிர்க்கதியாக விடப்பட்டார்கள். அங்கு சென்ற நாளிலிருந்து தொடர்ந்து நான் அவர்களோடு தொடர்பில் இருந்தேன். 24 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் திருமதி சாந்தி அவர்கள் எனக்கு தொலைபேசியில் இந்த தகவலை கண்ணீர் மல்கத் தெரிவித்தார். 

காவல்துறை அதிகாரி திரு சரவணன் மூலமாக அவர்கள் 24.03.2020 இரவு அங்கேயே தங்கி இருப்பதற்கு ஏற்பாடு செய்தேன். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தின் காவல்துறைக் கண்காணிப்பாளராக எனது நண்பரின் மகன் திரு ராஜேஷ் ஐபிஎஸ் பணிபுரிந்து வந்தார். அண்மையில் அவர் நொய்டாவுக்கு மாற்றலாகி வந்திருக்கிறார் என்ற செய்தி அறிந்து அவரைத் தொடர்பு கொண்டேன். அவருடைய ஆட்சிப் பரப்புக்குள் தான் பர்குணன் தம்பதியினர் தங்கியிருந்த மாணவர் விடுதி இருந்தது. அவரிடத்தில் அவர்கள் இருவரையும் டெல்லியில் உள்ள என்னுடைய வீட்டில் கொண்டு வந்து சேர்க்குமாறு வேண்டிக்கொண்டேன். அவரது உதவியின் காரணமாக 25.03.2020 பகல் தனியார் கார் மூலமாக திரு பர்குணன் தம்பதியினர் போலீஸ் பாதுகாப்புடன் டெல்லியில் உள்ள எனது வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளேன். ஊரடங்கு முடிந்து விழுப்புரம் திரும்பும்வரை அவர்கள் பாதுகாப்பாக அங்கு தங்கியிருப்பார்கள்.