“இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை இந்த கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த வேண்டாம்”

Views : 315

பதிவு செய்த நாள் 23-Jul-2021

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் , விழுப்புரம் எம்.பி ரவிக்குமாரும் மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு புருஷோத்தம் ருபாலாவிடம் நேரில் மனு அளித்து வலியுறுத்தல்

“ அதிகரித்துவரும் டீசல் விலையாலும் இயற்கைப் பேரிடர்களாலும் மீனவர்கள் ஏற்கனவே பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த மசோதா அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கும் அவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும்தான் அக்கறை காட்டுகிறது. மீன்பிடித் தடைக்காலம் மீன்பிடித் தடைப் பகுதி என அறிவிக்கும் போது அதனால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் அளிக்க இந்த மசோதாவில் ஏற்பாடு செய்யப்படவில்லை. மாநில அரசு மீன்பிடி தடை காலத்தின்போது அவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. இந்த மசோதா அவர்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது


கடல்சார் மீன்வள மேம்பாட்டு நிதி என ஒரு நிதியை உருவாக்குவது குறித்து இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நீதி மீனவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் லைசென்ஸ் கட்டணம் மற்றும் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு இந்த நிதிக்காக எந்தத் தொகையும் வழங்குவதாக இதில் சொல்லப்படவில்லை. இது மீனவர் நலனில் ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்த மசோதாவின் பிரிவு 9 ஒன்றிய அரசுக்கு மீனவர்களைக் கண்காணிக்க அதிகாரத்தை வழங்குகிறது. பிரிவு 19 இதற்கான அதிகாரியை நியமிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. இவையெல்லாம் மீனவர்களை குற்றவாளிகள் ஆக்குவதற்கான முயற்சியே ஆகும்

இந்த மசோதாவின் பிரிவு 18 (2 ) பொழுதுபோக்குக்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ மீன் பிடிப்பதற்கு லைசென்ஸ் வழங்குவதைப் பற்றி குறிப்பிடுகிறது. இது இந்திய கடல் எல்லைக்குள் மறைமுகமாக மற்றவர்களை அனுமதிக்கும் ஏற்பாடோ என்ற ஐயம் எழுகிறது. இந்த மசோதாவின் பிரிவு 3 முதல் 8 வரை மீன் பிடிப்பதற்கான லைசென்ஸ் வழங்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த சிறப்பு லைசென்ஸ் வழங்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசு வைத்திருப்பது மாநில அரசின் அதிகாரத்தில் தலையீடு செய்வதாக உள்ளது.

எனவே இந்த மசோதாவை இந்த வடிவத்தில் இப்போது அறிமுகப்படுத்தக் கூடாது. மீனவப் பிரதிநிதிகள் மற்றும் இது தொடர்பான அனைத்து தரப்பினரிடமும் கருத்து அறிந்து அதற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்த பிறகே அறிமுகப்படுத்த வேண்டும் “

என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனு அளித்த இருவரது கருத்துகளையும் விரிவாகக் கேட்டறிந்த அமைச்சர், அது தொடர்பான விளக்கங்களையும் அளித்தார். இந்த மசோதா மீனவர்களுடைய நலன்களுக்காகத்தான் கொண்டுவரப்படுகிறது என்று அவர் உறுதிபடக் கூறினார். மாநில அரசுகளின் அதிகாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது, மீன்பிடித் தடைக்காலம், மீன்பிடி தடை பகுதி ஆகியவற்றை அறிவிப்பதில் ஒன்றிய அரசு தலையீடு செய்யாது அதை மாநில அரசுகளே செய்யலாம் என்று கூறினார். ஆனால் சட்ட மசோதாவில் அவற்றையெல்லாம் ஒன்றிய அரசு செய்யும் என்று தான் இருக்கிறது என்று எம்.பிக்கள் இருவரும் சுட்டிக்காட்டினர்.

மீன் பிடிப்பதற்கு லைசென்ஸ் பெறுவது என்ற முறை தேவையற்றது என அவர்கள் கூறியபோது , மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்டறிவதற்கு அதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? என்று அமைச்சர் கேட்டார். பதிவு செய்துகொள்ளச் சொல்லலாம் ஆனால் உரிமம் பெறவேண்டும் என்று சொல்லுவது தேவையற்றது என எம்.பிக்கள் எடுத்துக்கூறினர்.

டீசல் மானியம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்கிறார்கள் எனத் தெரிவித்த போது, அதை சட்டத்தில் குறிப்பிட முடியாது அது கொள்கை சார்ந்த விஷயம் அது தனியாகப் பேசப்பட வேண்டியது என்று அமைச்சர் சொன்னார். அது போலவே மீனவர்களுக்கான மேம்பாட்டு நிதி ஒன்றை உருவாக்குவதாகவும் அந்த நிதிக்கு மீனவர்கள் செலுத்தும் லைசென்ஸ் கட்டணம் மற்றும் மீனவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதம் இவற்றை மட்டும் வைத்து அந்தத் தொகை உருவாக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை அதற்கு வழங்கினால் தான் உண்மையிலேயே மீனவர்கள் மீது அதற்கு அக்கறை இருக்கிறது என்று மீனவர்கள் ஏற்பார்கள் என்று ரவிக்குமார் சுட்டிக்காட்டியபோது இது ஒரு நல்ல யோசனை நிச்சயமாக இதை நாங்கள் பரிசீலிக்கிறோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் கடலோரத்தில் பல மாநிலங்கள் இருக்கின்றன ஆனால் தமிழ்நாடு மட்டும் தான் இந்த சட்டத்தை எதிர்க்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். மீனவ மக்களுடைய குரல்களைத்தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம் என்று எம்பிக்கள் அவரிடம் எடுத்துக் கூறினார்கள். பாரம்பரிய மீனவர்களை பாதுகாப்பது தான் இந்த அரசின் நோக்கம் என்று அமைச்சர் திரும்பத் திரும்பக் கூறினார். நாங்கள் எழுத்துப்பூர்வமாக எங்களுடைய ஐயங்களைத் தெரிவித்திருக்கிறோம் அவற்றைப் பற்றிய விளக்கங்களை நீங்களும் எழுத்துப்பூர்வமாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்’ என்று தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தெரிவித்தார். நிச்சயமாக நான் எழுத்துப்பூர்வமாக உங்களுக்கு விளக்கங்களை அளிக்கிறேன் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 சுமார் அரை மணி நேரம் அமைச்சரோடு இது தொடர்பாக விவாதம் நடந்தது.

இவ்வளவு நேரம் ஒதுக்கி உங்களுக்கு இந்த விளக்கங்களை நான் கொடுத்ததற்குக் காரணம் தமிழ்நாட்டிலிருந்து மட்டும்தான் எதிர்ப்பு வந்திருக்கிறது என்பதனால்தான் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில முதலமைச்சர் அவர்களும் இந்த மசோதாவை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப் படுத்த வேண்டாம் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதி இருப்பதை அமைச்சரிடம் எம்பிக்கள் சுட்டிக்காட்டினர்