“மரக்காணத்தில் இருக்கும் உப்பளம் மூடப்படாது. உப்பளத் தொழிலாளர்களுக்கு தூத்துக்குடியிலும், மரக்காணத்திலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்”

Views : 289

பதிவு செய்த நாள் 28-Jul-2021

“மரக்காணத்தில் இருக்கும் உப்பளம் மூடப்படாது. உப்பளத் தொழிலாளர்களுக்கு தூத்துக்குடியிலும், மரக்காணத்திலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்”

ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு வணிகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் மாண்புமிகு சோம் பிரகாஷ் பதில்

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று நாடாளுமன்றத்தில் பின்வரும் கேள்விகளை எழுப்பியிருந்தார்:

* தமிழ்நாட்டிலுள்ள இந்திய ஒன்றிய அரசுக்குச் சொந்தமான 17 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களை வணிக நோக்கத்துக்காக குத்தகைக்கு விடும் திட்டம் அரசிடம் உள்ளதா? ஆம் எனில் அதன் விவரங்களைத் தருக

* தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் இருக்கும் உப்பளத்தை மூடும் திட்டம் அரசிடம் உள்ளதா? ஆம் எனில் விவரங்களைத் தருக

* மரக்காணத்தில் அயோடின் செறிவூட்டும் ஆலையை அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா? அவ்வாறெனில் விவரங்களைத் தருக

* உப்பளத் தொழிலாளர்களுக்கு முன்பு இருந்ததைப்போல மருத்துவ முகாம்களை மீண்டும் நடத்துவதற்கும், அவர்களுடைய குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கும், அவர்களுடைய பிள்ளைகளில் தகுதியானவர்களுக்கு நிதி நல்கைகளை வழங்குவதற்கும் அரசிடம் திட்டம் உள்ளதா ? அவ்வாறெனில் அதன் விவரங்களை தருக

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த வணிகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் பின்வரும் தகவல்களைத் தெரிவித்துள்ளார்:

* மரக்காணத்தில் உள்ள உப்பளங்களை வணிக நோக்கத்திற்குக் குத்தகைக்கு விடும் திட்டம் இல்லை. அந்த நிலங்கள் பொதுப் பயன்பாட்டுக்கென ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

* மரக்காணத்தில் இருக்கும் உப்பளத்தை மூடும் திட்டமோ, அங்கு அயோடின் செறிவூட்டும் ஆலையைத் திறக்கும் திட்டமோ அரசிடம் இல்லை.

* வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ‘சால்ட் கமிஷனர் ஆர்கனைசேஷன்’ அளித்துள்ள தகவலின்படி உப்பளத் தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துவது, அவர்களது குழந்தைகளுக்கு படிப்பு உதவித் தொகை வழங்குவது ஆகியவை கொரோனா காரணத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் மீண்டும் அவை துவக்கப்படும். நடப்பு ஆண்டில் (2021-22) தூத்துக்குடி, மரக்காணம் ஆகிய இடங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்காக மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உப்பளத் தொழிலாளர்களின் குழந்தைகளில் திறமையான குழந்தைகளுக்கு சன்மானம் வழங்குவதற்கான விண்ணப்பங்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

ரவிக்குமார் எம்.பி வினா எழுப்பியதால் இதுவரை செயல்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த- உப்பளத் தொழிலாளர்களுக்கு மருத்துவமுகாம் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் - ஆகிய நலத்திட்டங்கள் மீண்டும் 2021 - 22 ஆம் ஆண்டில் துவக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.