விழுப்புரம் மாவட்டத்தில் பெண் கல்வியை 75% ஆக உயர்த்துவோம்! - ரவிக்குமார்

Views : 258

பதிவு செய்த நாள் 06-Sep-2021

தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மட்டுமன்றி விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுமே நல்லாசிரியர்கள் தான். ஏனென்றால் இங்கே ஆசிரியர் பணி செய்வது என்பது மிகவும் சவாலானது. தமிழ்நாட்டில் படிப்பறிவு குறைவாக உள்ள மாவட்டங்களில் முதன்மையானது விழுப்புரம். அதிலும் குறிப்பாக பெண் கல்வி என்பது மிக மிகக் குறைவாக உள்ள மாவட்டம் இது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இம்மாவட்டத்தின் படிப்பறிவு பெற்றோர் 80 சதவீதமும் பெண்கள் 63 சதவீதமும் இருப்பதாகக் கணக்கிடப் பட்டது. ஆண் கல்விக்கும் பெண் கல்விக்கும் இடையில் 17 சதவீத இடைவெளி கொண்ட மாவட்டம் இது ஒன்றுதான். ஊரகப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. அங்கே இருக்கும் பெண்களில் பாதி பேர் கூட கல்வி பெற்றவர்கள் இல்லை. இத்தகைய சூழல் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்ற மாவட்டங்களில் பணி யாற்றுபவர்களைவிட அதிக அர்ப்பணிப்பும் உழைப்பும் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியராக இருப்பதை விட விழுப்புரத்தில் ஆசிரியராக இருப்பது இருமடங்கு கடினமானது என்பதால்தான் இங்கே பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் நல்லாசிரியர்கள் என்று நான் குறிப்பிட்டேன்.

 இந்த மாவட்டத்தில் 9 பேர் இப்போது நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று முதலமைச்சரின் கையால் நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர்கள் பெறுவார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அந்த விருதுகளை உங்களுக்கு வழங்கக் கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக மாவட்ட ஆட்சியருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விழுப்புரம் மாவட்டத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதில் ஆசிரியர்களாகிய உங்களுடைய பங்குதான் முதன்மையானது. நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொறுப்பேற்று வந்தபோது அவரை சந்தித்த நான், இங்கே இருக்கும் கல்வி நிலையை உயர்த்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தினேன்.

 முன்பு விழுப்புரம் மாவட்டம் 3 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. இப்போது அது 5 கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. கூடுதலான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அது போலவே பள்ளிக்கான கட்டமைப்பு வசதிகளையும் செய்தாக வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவையெல்லாம் கல்வி வளர்ச்சிக்கு அடிப்படையான முன் தேவைகள். ஆனால் இவற்றை செய்வதாலேயே ஒரு மாவட்டத்தில் கல்வி விகிதத்தை உயர்த்திவிட முடியாது. அதற்கு ஆசிரியர்களாகிய நீங்கள் ஓதுழைப்பு நல்கவேண்டும்.

நமது மாவட்டத்தில் இடைநிறுத்தம் என்பது மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. ஆரம்பக் கல்வியை முடித்து இடைநிலைக்கல்வி போவதற்கு முன்பாகவே ஏராளமான மாணவர்கள் படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். அதன்பின்னர் உயர்நிலைக் கல்விக்கு போகிறவர்களின் எண்ணிக்கை மேலும் குறைவாக இருக்கிறது. உயர்கல்வி என்பதும் மிக குறைவாக உள்ளது. அதனால்தான் ஒப்பீட்டளவில் விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொருளாதாரநிலை மோசமடைந்ததால் பெற்றோர்கள் பலர் தமது பிள்ளைகளை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இது ஒரு முக்கியமான மாற்றமாகும். 1966 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட கோத்தாரி கமிஷன் அறிக்கையில் ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதம் எட்டப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அரசுப் பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர் மாணவர் விகிதம் என்பது அதை விடக் குறைந்து போய்விட்டது. 20 மாணவர்கள் கூட இல்லாத வகுப்பறைகள் கொண்ட அரசுப்பள்ளிகள் ஏராளமாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில் தனியார் பள்ளியில் இருந்து மாணவர்களை அரசுப் பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்ப்பது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகும். இதை ஆசிரியர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இடை நிற்றல் எந்த வட்டாரத்தில் அதிகமாக இருக்கிறது என்ற புள்ளிவிவரத்தைப் பார்த்து அதைக் குறைப்பதற்கு அங்கெல்லாம் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக அளவில் விழுப்புரம் மாவட்டத்தின் கல்விநிலை பின் தங்கியிருந்தால் அது தமிழக அளவிலான கல்வி நிலையையும் பாதிக்கும். எனவே தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்டத்துக்கென சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

படிப்பறிவு இல்லாதவர்கள் திறனற்ற உதிரித் தொழிலாளிகளாக மாறுகிறார்கள். அவர்களால் மாநிலத்தின் பொருளாதாரத்துக்கும் சுமை ஏற்படுகிறது. அவர்கள் ஆக்கபூர்வமாக இல்லாத நிலையில் நுகர்வோர்களாக மட்டுமே இருக்கிறார்கள். இது மனிதவள ஆற்றலில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது. படிப்பறிவுக்கும் மனிதவள ஆற்றலுக்கும்,பொருளாதார மேம்பாட்டுக்கும் இடையிலான உறவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதைத் தெரிந்து கொண்டால் இந்த கல்வி நிலையை உயர்த்துவது என்பது தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்துவதோடு தொடர்பு கொண்டது என்பதை நாம் உணர்வோம்.


விழுப்புரம் மாவட்டத்தின் படிப்பறிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்று நாமெல்லாம் தீர்மானித்துக் கொண்டால் நிச்சயம் அதை சாதிக்கலாம். குறிப்பாக 2011 இல் 63% ஆக இருந்த பெண் கல்வி 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யப்படும்போது 75 % ஆக இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதை எட்டுவதற்கு சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இது அடைய முடியாத இலக்கு அல்ல, ஆசிரியர்களாகிய நீங்கள் நினைத்தால் அந்த இலக்கை எளிதாக அடைந்து விடலாம். அதற்காக இந்த ஆசிரியர் தினத்தில் உறுதியேற்போம்! நன்றி

( 05.9.2021 அன்று காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி ஆற்றிய உரை)