விழுப்புரம் மாவட்ட ஆய்வுக் கூட்டம்

Views : 227

பதிவு செய்த நாள் 01-Nov-2021

இன்று விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ( DISHA) கூட்டம் இன்று எனது தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை நமது மாவட்டத்தில் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்பதோடு மாவட்டத்தின் கற்றோர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு மேலதிகக் கவனம் செலுத்தப்படவேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன்.

நூறுநாள் வேலைத் திட்டத்தில் ( MGNREGS) வேலை செய்த தொழிலாளர்களுக்கு செப்டம்பர் 23 ஆம் தேதிவரைதான் ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற விவரம் ஆய்வில் தெரியவந்தது. தீபாவளிக்கு முன்பு நிலுவைத்தொகையை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். உடனே ஏற்பாடு செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த புற்றுநோய், ரத்தசோகை, காசநோய், தொழுநோய் முதலானவற்றுக்கான சுகாதார சேவைகளை முழு வேகத்தில் செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன். கருவாய்ப் புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளைக் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தினேன்.

விழுப்புரம் நகராட்சியில் ஜி ஆர் பி தெருவில் நான் நேரடியாக ஆய்வு செய்து பல்வேறு பணிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். அவை இன்னும் செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவற்றை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டேன்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற துறைவாரியான ஆய்வில் அதிகாரிகளுக்குப் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.