" என்.சி.இ.ஆர்.டி முலம் நடத்தப்பட்டு வந்த ’ தேசிய திறமை தேடல் திட்டத்தை’ (NTSS) நிறுத்தக்கூடாது " ரவிக்குமார் எம்.பி கடிதம்

Views : 122

பதிவு செய்த நாள் 01-Nov-2022

என்.சி.இ.ஆர்.டி முலம் நடத்தப்பட்டு வந்த ’ தேசிய திறமை தேடல் திட்டத்தை’ (NTSS) நிறுத்தக்கூடாது.

ஒன்றிய அரசின் கல்வி அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம். அதன் விவரம் வருமாறு:

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) 1961 ஆம் ஆண்டு இந்திய அரசால் கல்வியில் முன்னேற்றம் மற்றும் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டது.அது அமைக்கப்பட்ட உடனேயே, பல திட்டங்களை அது அறிவித்தது. திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை வளர்ப்பது அத்தகைய ஒரு திட்டமாகும். இந்தத் திட்டம் 1963 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் திறன் தேடல் திட்டம் (NSTSS) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்கும் இத்திட்டம் முதல் ஆண்டில், டெல்லி யூனியன் பிரதேசத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. அபோது 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஸ்காலர்ஷிப்புகள் மட்டும் வழங்கப்பட்டன.

1964 ஆம் ஆண்டில், இத்திட்டம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 350 ஸ்காலர்ஷிப்புகளுடன் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. எழுத்துத் தேர்வு, திட்ட அறிக்கை மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. எழுத்துத் தேர்வில் அறிவியல் திறன் தேர்வு மற்றும் கொடுக்கப்பட்ட அறிவியல் கருப்பொருளில் ஒரு கட்டுரை எழுதுவது ஆகியவை அடங்கும். எழுத்துத் தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மூன்று கூறுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டனர். முனைவர் பட்டம் வரை அடிப்படை அறிவியலில் மட்டுமே கல்வி கற்பதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.

 10+2+3 கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, 1976 ஆம் ஆண்டில் NSTS திட்டமும் மாற்றத்திற்கு உள்ளானது. இது அடிப்படை அறிவியலுடன் மட்டும் நின்றுவிடாமல், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டது. இது தேசிய திறமை தேடல் திட்டம் (NTSS) என பெயர் மாற்ரம் செய்யப்பட்டது. நாட்டில் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றத்துக்கு ஏற்ப ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டன. ஸ்காலர்ஷிப்புகளின் எண்ணிக்கை 500 ஆக உயர்த்தப்பட்டது.

அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் முனைவர் பட்டம் வரையிலான படிப்புகளுக்கும், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழில்முறை படிப்புகளில் இரண்டாம் நிலை வரையிலான படிப்புகளுக்கும் தற்போதைய திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறதுதற்போதுவரை 2000 ஸ்காலர்ஷிப்புகள் வழங்கப்படுகின்றன. அதில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதம், எஸ்டிக்கு 7.5 சதவீதம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் மாற்ருத் திறனாளி மாணவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

 இந்தச் சூழ்நிலையில், இந்த திட்டம் மார்ச் 2021 முதல் நிறுத்தப்படும் என்று NCERT தலைவர் அறிவித்துள்ளார் (F.No.1-12/2021-22/ESD/NTS-1 Educational Survey Division, NCERT) . இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திறமையான மாணவர்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்கென கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு நல்ல திட்டம் காரணமின்றி நிறுத்தப்படுவதை ஏற்க முடியாது. இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துமாறு வலியுறுத்துகிறேன். தற்போது வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்பின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்தவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவண்

முனைவர் து.ரவிக்குமார்