பெரும்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்

Views : 114

பதிவு செய்த நாள் 29-Jan-2020

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்துக்குட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில்

பாராளுமன்ற உறுப்பினர் முன் முயற்சியில்

இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்று ஆற்றிய உரையின் சுருக்கம்:

மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு சுகாதாரத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. இந்திய அளவில் சுகாதாரத் திட்டங்களை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவி திட்டம் என்பது தலைவர் கலைஞர் ஆட்சியின் போது 2006- 2011 இல் உருவாக்கப்பட்டது. அதைப்பார்த்துதான் மத்திய அரசு அதை பிற மாநிலங்களுக்கும் இப்போது பகுதி அளவில் விரிவுபடுத்தி இருக்கிறது.

இங்கே இப்போது நாம் நடத்திய ‘சமுதாய வளைகாப்பு’ என்கிற திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. ஏழை குடும்பங்களில் வளைகாப்பு நடத்துவது எவ்வளவு சிரமமானது என்பது நமக்குத் தெரியும். அப்படி சிரமப்பட்டு நடத்துகிற வீடுகளில் கூட இந்த அளவுக்குக் கர்ப்பிணிகளுக்கு சத்தான மாத்திரை மருந்து உணவுகள் அளிக்கப்படுவதில்லை. அரசே அதை செய்கிறது என்பது பாராட்டுக்குரியது. அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 நமது மாவட்டத்தில் அதிக அளவில் தாய்மார்களுக்கு ரத்த சோகை நோய் இருப்பதாக இயக்குனர் தெரிவித்தார். ரத்தசோகை நோய் என்பது கர்ப்பிணியாக ஆனதற்குப் பிறகு வருவது அல்ல. சிறுவயதிலிருந்தே சத்தான உணவுகளை உண்ணாத காரணத்தால் ஆண் பெண் இருபாலருக்கும் ரத்தசோகை ஏற்படுகிறது. அதை தடுப்பதற்கு நாமே முயற்சிக்கவேண்டும். தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை அளிக்கவேண்டும். நமது சுற்றுப்புறத்தில் இருக்கும் பல உணவுப் பொருட்களில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் மிகுந்த உணவுப் பொருட்கள் உள்ளன.

 உதாரணத்துக்கு முருங்கையை சொல்லலாம். இதன் மதிப்பை அறிந்து உலக நாடுகள் பல இப்போது அதை இறக்குமதி செய்கின்றன. நம் வீட்டுக்கு முன்னால் இருக்கின்ற முருங்கையை நாம் அந்த அளவுக்குப் பயன்படுத்துவது இல்லை. இப்படி நாமே நமது சத்தை மேம்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். அதுபோல நமது மாவட்டத்தில் தொழுநோய் இருக்கிறது.

 அதனால் பாதிக்கப்பட்டவர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் என்று சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். பல மாவட்டங்களில் தொழுநோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இங்கே அது இருக்கிறது என்று சொன்னால் அதற்கு நாம் அதைப் பற்றி அக்கறை செலுத்தாததுதான் காரணம். யாரேனும் தொழுநோய்தொடர்பான அறிகுறி உள்ளவர்கள் நம் பகுதியில் இருந்தால் அவர்களை மருத்துவ சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டியது நம்முடைய கடமை. மருத்துவ அலுவலர்கள் வந்து கண்டுபிடிக்கும் வரை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

 வானூர் வட்டத்தில் 120 பேருக்கு காச நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாலும் காசநோய் தொழுநோய் போன்றவற்றை ஒழிப்பதில் ஒட்டுமொத்த சமூகமும் அக்கறை காட்டினால் தான் அது சாத்தியப்படும். எனவே நமது சுற்றுப்புறத்தில் இத்தகைய நோய் அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிந்து மருத்துவமனைக்கு நாம் அனுப்புவதற்கு முன் வர வேண்டும்.

 இந்த வசதிகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு நமது பகுதியை சுகாதாரத்தில் மேம்பட்ட பகுதியாக மாற்றுவதற்கு நாமெல்லாம் ஒத்துழைப்பு தரவேண்டும் இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மற்றும் மருத்துவர்களுக்கும் இதில் பங்கேற்று சிகிச்சை அளிக்க முன் வந்திருக்கின்ற லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த மருத்துவர்களுக்கும் இங்கே சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிகளை செய்து கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றி.