“ சி எஸ் ஆர் நிதியைச் செலவிடும்போது கல்வி,சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்”-ரவிக்குமார்

Views : 228

பதிவு செய்த நாள் 04-Feb-2020

“ சி எஸ் ஆர் நிதியைச் செலவிடும்போது கல்வி,சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்”

ரவிக்குமார் எம்பி வினாவுக்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில்

கனரகத் தொழிற்சாலைகள் 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 வரை கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி (CSR) திட்டத்தின் கீழ் செலவிடப்பட்ட தொகை விபரங்களைத் தெரிவிக்கவேண்டும்; 

சி எஸ் ஆர் தொகையைச் செலவிடும் முறை குறித்து கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சகம் என்னவிதமான கண்காணிப்பை மேற்கொள்கிறது? என்று தெரிவிக்கவேண்டும் என மக்களவையில் ரவிக்குமார் எம்பி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்திருக்கும் பதிலில் தெரிவித்துள்ள விவரம் வருமாறு: 

கம்பெனிகள் சட்டம் 2013 செக்‌ஷன் 135 இன் படி அனைத்து தொழிற்சாலைகளும் தமது லாபத்தில் இரண்டு சதவீதத்தை கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி நடவடிக்கைகளுக்காக செலவிட வேண்டும். இதற்கான விதிகள் 2014ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிஎஸ்ஆர் நிதியை செலவிடும்போது எதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிதி பொதுத்துறை நிறுவனங்களில் எப்படி செலவிடப்படுகிறது என்பதைப்பற்றி பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு இதுகுறித்த விவரங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படுகின்றன” என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார். தற்போது சிஎஸ்ஆர் நிதியை செலவிடுவதற்கு கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து முதலான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு சுமார் 4000 கோடி வரை சி எஸ் ஆர் திட்டத்தின்கீழ் செலவிடுகின்றன எனத் தெரிகிறது. அந்தத் தொகை முறையாக செலவிடப்பட்டால் அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் இன்னும் சிறப்பான கட்டமைப்போடு விளங்கமுடியும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படும் தொழிற்சங்கங்கள் தத்தமது தொழிற்சாலைகளில் எபடி சிஎஸ்ஆர் நிதி செலவிடப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவேண்டும். அவை முறையாக விதிகளின்படி செலவிடப்படுகிறதா என்பதை உறுதிசெய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.