தமிழ்நாட்டில் தரமற்ற கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு - ரவிக்குமார்

Views : 59

பதிவு செய்த நாள் 07-Feb-2020

நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்பி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில் வெளிப்பட்ட தகவல்

===


நாடு முழுவதும் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாக உள்ளனவா என்பதை பரிசோதித்து தரமற்ற பொருட்கள் விற்கப்பட்டால் அவற்றைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதா? மாநில வாரியாக அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அத்தகைய கடைக்காரர்கள் மீது அரசு எடுத்த சட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விழுப்புரம் எம்பி ரவிக்குமார் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே பின்வருமாறு தெரிவித்துள்ளார்: 


உணவுத் தரம் மற்றும் பாதுகாப்புக்கான சட்டம் 2006 செயல்படுத்துவது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகார வரம்புக்குள் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை. இந்த சட்டத்தை சரியாக நிறைவேற்றுவதற்கு போதுமான ஊழியர்களை நியமிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 38 சோதனைக் கூடங்களை மேம்படுத்துவதற்கு சுமார் 270 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது. இந்த சோதனைக் கூடங்கள் மட்டுமின்றி 54 நடமாடும் சோதனைகளும் பயன்பாட்டில் உள்ளன. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ரிஸ்க் பேஸ்டு இன்ஸ்பெக்சன் சிஸ்டம் ( RBIS) என்ற முறையை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் நோக்கம் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதைத் தடுப்பது; உணவுப் பரிசோதனை ஒழுங்கமைப்பு முறை ஒன்றை உருவாக்குவது; லைசென்ஸ் வழங்கும் முறையோடு இதை இணைப்பது என அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர் அளித்துள்ள பட்டியலைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உணவுக் கலப்படக் குற்றங்கள் பெருகி வருவது தெரிகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்த குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்திருக்கிறது.


தமிழ்நாட்டில் 2014 -15 ஆம் ஆண்டில் 550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன 35 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 2016- 17 ஆம் ஆண்டில் 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன 79 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் 1321 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரண்டு கோடியே 25 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 


2018 - 19 ஆம் ஆண்டில் 2384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.