டெல்லி தமிழர் குடியிருப்புக்கு ஒரு விசிட்

Views : 61

பதிவு செய்த நாள் 10-Feb-2020

டெல்லி நிஜாமுதீன் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் ஜங்புரா என்னுமிடத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். அந்த குடியிருப்புக்கு 08.02.2020 அன்று போயிருந்தேன். அவர்கள் பெரும்பாலும் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளாக வாழ்பவர்கள். திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இங்கு இருக்கிறார்கள்.

இன்று இங்கு வாக்குப் பதிவு நடக்கிறது. ஆனால் அதற்கான எந்தவொரு பரபரப்பும் மக்களிடையே இல்லை. சுமார் இரண்டுமணி நேரம் அவர்களோடு செலவிட்டேன். அவர்களுக்கான தேவைகளைக் கேட்டறிந்தேன். பொதுக்கழிவறையோ, கழிவுநீர் வெளியேற்றும் இணைப்போ இல்லாததுதான் அவர்களது முதன்மையான பிரச்சனையாக இருக்கிறது

அங்கு ஒரு முருகன் கோயில் உள்ளது. இன்று தைப்பூசம் என்பதால் விழா கொண்டாடுவதற்கு ஷாமியானா போட்டு ஏற்பாடு செய்திருந்தனர். பக்கத்திலேயே ஒருவர் மரணம் அடைந்து விட்டதால் சவ அடக்கம் செய்யப்படும் வரை விழா ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒரு சிறு மண்டபத்தின் உள்ளே முருகனை வைத்து வழிபடுகிறார்கள். கோயிலுக்கு வெளியே இருபுறமும் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. கோயில் வாசலுக்கு எதிரில் ஒரு சூலம் நடப்பட்டிருக்கிறது. நம் ஊர்களில் இருப்பது போல் அல்லாமல் வட இந்தியக் கோயில்களில் உள்ளது போல சிவப்பு மஞ்சள் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அதில் வரையப்பட்டுள்ள ஸ்வஸ்திக்கும் வட இந்தியாவை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. கோயிலுக்கு உள்ளே நின்ற நிலையில் முருகனுடைய உருவம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களுக்கு அந்தப் புறமாக இன்னொரு கோயில் உள்ளதைப் பார்க்க முடிந்தது. அது சற்றே பெரிய கோயிலாகத் தெரிந்தது.

அங்கே நான் சந்தித்த பெரியவர் ஒருவர் தான் 1965 ஆம் ஆண்டு டெல்லிக்கு வந்ததாகச் சொன்னார். ‘யார் முதலில் வந்தார்கள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து இங்கே வர வேண்டும் என்று எப்படித் தோன்றியது?’ எனக் கேட்டேன். யாரோ ஒரு மூதாட்டி நடந்தே டெல்லிக்கு வந்து சேர்ந்ததாகவும் இங்கே வந்ததற்குப் பிறகு அவர்தான் தங்கள் ஊரில் இருந்து ஒவ்வொருவரையாக அழைத்து வந்து இங்கே குடியமர்த்தினார் என்றும் சொன்னார்கள்.

இளைஞர்கள் எல்லோரும் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள்தான். பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அரசு வேலை இல்லை என்றாலும் ஏதோ ஒரு வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நான் பார்த்தவர்களில் நான்கைந்து பேர் குடியரசுத் தலைவர் மாளிகையில் வேலை செய்வதாகச் சொன்னார்கள். டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் பல பேர் வேலை செய்கிறார்கள்.

எல்லா வீடுகளுக்கும் குடிநீர், மின்சார வசதி இருக்கிறது. சென்னை குடிசைப் பகுதிகளைப் போலில்லாமல் தெரு முழுவதும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு குண்டுகுழி இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். 10 க்கு 10 அடி அளவு கொண்ட ஒரு அறைதான் வீடு. கீழே டைல்ஸ் பதிக்கப்பட்டு சுத்தமாக இருந்தது. தரையில் கால் வைக்க முடியாத அளவுக்குக் குளிர்.

இந்தத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவராம். இதற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து அங்கே வெற்றி பெற்று இருந்திருக்கிறது. மீண்டும் காங்கிரஸ் வரும் என்று அங்கிருந்த பெரியவர் ஒருவர் நம்பிக்கையோடு சொன்னார். முன்பு சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் இவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்களா என்று கேட்டேன். ஓரளவு செய்திருக்கிறார்கள், ஆனால் இந்த குடியிருப்பை எடுக்கப்போவதாக அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள், நிரந்தரமான அச்சத்திலேயே நாங்கள் வாழ்கிறோம். சுமார் 50 ஆண்டு காலமாக இங்கே இருந்து விட்டோம். வெளியேறச் சொன்னால் நாங்கள் எங்கே போகமுடியும்? என்று கேட்டார் அந்த பெரியவர். மாற்று இடம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அது எங்கே என்று இதுவரை தெளிவாகச் சொல்லவில்லை என்றும் அவர் சொன்னார்.

ஏற்கனவே ரயில் பாதைக்கு அருகில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டு அங்கே கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. எல்லோருக்குமே வாக்குரிமை இருக்கிறது. நான் பார்த்தவர்கள் எல்லோரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அடையாளத்தைக் காண்பித்தார்கள். ஏப்ரல் மாதத்தில் துவங்க இருக்கும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழைக் கேட்டால் இங்கிருக்கும் முக்கால்வாசிப் பேரால் கொடுக்கமுடியாது. இன்று வாக்காளர்கள் என்ற அடையாளத்தோடு இருக்கும் இவர்கள் அனைவரையும் சட்டவிரோதக் குடியேறிகள் என ஆக்கப்பார்க்கிறது மோடி அரசு.

‘50 வருஷத்துக்கு முன்ன நாங்க இங்க வந்தப்போ இதெல்லாம் ஒரே காடா இருந்துச்சி’ என்றார் ஒரு பெரியவர். தமிழர்கள் இல்லாவிட்டால் இந்தப் பகுதி இப்படி மேம்பட்டிருக்காது. இந்த ஊரை முன்னேற்றுவதற்கு உழைத்த தமிழர்கள் குடியிருக்க இடம் கேட்டுப் போராடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலோ 40 வருஷத்துக்கு முன்னால் வேறொரு மாநிலத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் முதலமைச்சராகவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்!