கோயில் நுழைவுச் சட்டமும் சிதம்பரம் பகுதி தலித் மக்களும் - ரவிக்குமார்

Views : 473

பதிவு செய்த நாள் 10-Feb-2020

பல்கலைக்கழக மானியக் குழு நிதி நல்கை வழங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியராக இருந்த எஸ் வி ஐயர் தலைமையில் 1956ஆம் ஆண்டு 

ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்காக இயற்றிய சட்டங்கள், நடைமுறைப்படுத்திய திட்டங்கள் 

எந்த அளவுக்கு பயன் அளித்துள்ளன என்பதைக் கள ஆய்வின் மூலம் கண்டறிந்து அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளது. அவர்களும் ஆய்வை மேற்கொண்டு 1957 ஆம் ஆண்டு அந்த அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறார்கள். நான்கு பகுதிகளைக் கொண்ட அந்த அறிக்கை 1965 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் 145 

பக்கங்கள் கொண்ட நூலாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 


கல்வி தொடர்பான நலத் திட்டங்கள், தலித் மக்கள் கோவில்களில் நுழைவதற்கு அனுமதி அளித்த சட்டம், படிப்பு உதவித் தொகையால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்ட பலவற்றையும் ஆராய்ந்து சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கள ஆய்வு செய்து அந்த அறிக்கையில் வழங்கியுள்ளனர். 


1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இயற்றப்பட்ட கோயில் நுழைவு சட்டம் தலித் மக்களிடையே எத்தகைய வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள திருவேட்களம், கீழ மூங்கிலடி, முகையூர், சின்ன நெற்குணம், முத்து காமாட்சி அம்மன் தோட்டம் ஆகிய பகுதிகளில் வசித்த 101 நபர்களிடம் விசாரித்து அவர்களது மனநிலையைப் பதிவு செய்துள்ளனர். 


அந்த 101 நபர்களில் 61 பேர் நிலமற்ற கூலி விவசாயிகள், 

9 பேர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோட்டத் துறையில் பணி செய்பவர்கள், 9 பேர் சொந்த நிலம் உள்ள விவசாயிகள், ஆறு பேர் ஆசிரியர்கள். 


இந்த 101 பேரில் 61 பேர் படித்தவர்கள். கோயில் நுழைவு சட்டம் தங்களை மத நம்பிக்கை உள்ளவர்களாக ஆகிவிட்டது என 54 பேர் கூறியுள்ளனர். பெரும்பாலோர் திருவிழா காலங்களில் தான் கோயில்களுக்கு போகும்

 வழக்கத்தை வைத்துள்ளனர். அந்த நேரத்தில் எல்லோரோடும் கலந்து சகஜமாக கோயில்களுக்குள் போய் வர முடிகிறது. மற்ற நேரங்களில் போக முடியுமா என்பது தெரியவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.


கள ஆய்வின்போது தலித் மக்கள் கூறியுள்ள ஆலோசனைகள் நமது கவனத்தை ஈர்ப்பதாக 

மட்டுமின்றி அவர்களுடைய அரசியல் 

விழிப்புணர்வை எடுத்துக் கூறுவதாகவும் உள்ளன. கோயில் நுழைவு சட்டத்தை பிற தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள், டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை இருப்பதையும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாத அவலம் தொடர்வதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கோயில் நுழைவு சட்டம் மட்டும் போதாது எனக் குறிப்பிட்ட தலித் மக்கள்,  


* தீண்டாமை தொடர்பான வழக்குகளை கையாள போலீஸ் அதிகாரம் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளனர். 


* கோயில் நிர்வாகத்தில் தலித்துகளும் பங்கேற்க வேண்டும், 


* தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும், 


* பிற சமூகத்தவர் வசிக்கும் இடங்களில் தலித்துகள் அவர்களோடு சேர்ந்து வசிக்க அனுமதிக்கப்பட வேண்டும், 


* தலித்துகளின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தலித் மக்கள் ஆலோசனை கூறியுள்ளனர். 


தஞ்சாவூர் மாவட்டம் வரகூர் என்னும் ஊரில் கோயிலுக்கு தலித்துகளை அழைத்துச் செல்ல முயன்றபோது ஆச்சார்யா வினோபா பாவே உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்கள் அந்தக் கோயிலுக்குள் தலித்துகள் செல்வதைத் தடுக்கவில்லை என்று அந்த மக்கள் கூறியுள்ளனர். 


தமிழ்நாட்டில் 

கோயில் அறங்காவலர்களாக தலித்துகளும் நியமிக்கப்பட்டது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது, சமத்துவபுரம் அமைக்கப்பட்டது, வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது ஆகிய எல்லாவற்றுக்கும் இதில் உள்ள தலித் மக்களின் ஆலோசனைகள் முன்னோடியாக இருந்துள்ளன. தமிழ்நாட்டு தலித் மக்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பே எந்த அளவுக்கு அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு 

சான்று ஆகும். 


சமூக, பொருளாதார பிரச்சனை தொடர்பான கள ஆய்வு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு கையேடாகத் திகழ்கிறது.