ஜிப்மரில் பழங்குடியினர் இட ஒதுக்கீடு புறக்கணிப்பு- மத்திய சுகாதார அமைச்சரிடம் ரவிக்குமார் எம்பி முறையீடு

Views : 574

பதிவு செய்த நாள் 12-Feb-2020

ஜிப்மரில் பழங்குடியினர் இட ஒதுக்கீடு புறக்கணிப்பு- மத்திய சுகாதார அமைச்சரிடம் ரவிக்குமார் எம்பி முறையீடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பழங்குடியினருக்கு அளிக்கப்படவேண்டிய இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி அங்குள்ள எஸ்சி/ எஸ்டி நலச்சங்கத்தினர் விழுப்புரம் எம்பி ரவிக்குமாரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் அந்த அநீதியைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். 

அவர் அமைச்சரிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

ஜிப்மரில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 20 சீனியர் நர்சிங் ஆபீசர் பதவிகள் காலியாக உள்ளன. இந்தப் பதவிகளுக்குப் பொருத்தமான பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த பல ஊழியர்கள் அங்கு பணிபுரிந்தாலும் ஜிப்மரில் கடைபிடிக்கப்படும் விதி ஒன்றின் காரணமாக அவர்களுக்கு இந்தப் பதவி உயர்வை வழங்க முடியாத நிலை உள்ளது. ஜிப்மரில் பின்பற்றப்படும் நடைமுறை எய்ம்ஸ் மருத்துவமனையில் பின்பற்றப்படும் நடைமுறை விட வேறுபட்டதாக இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனையைப் போன்று செலக்‌ஷன் என்பதை நான் செலக்‌ஷன் என மாற்றியமைத்திருந்தால் 5 ஆண்டுகள் பணிபுரிந்த பழங்குடியின ஊழியருக்கு பதவி உயர்வு பெறத் தகுதி ஏற்பட்டிருக்கும். எய்ம்ஸில் இருப்பதைப்போன்ற விதி ஜிப்மரில் இருந்தால் இந்த பணியிடங்கள் எப்போதோ நிரப்பப்பட்டிருக்கும். பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு இப்படியொரு விதியை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் உருவாக்கி வைத்துள்ளது. எனவே இதில் மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ரவிக்குமார் எம்பி அதில் வலியுறுத்தியுள்ளார்.