கட்டண உயர்வைத் திரும்பப்பெறுக! புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்

Views : 73

பதிவு செய்த நாள் 12-Feb-2020

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி துணைவேந்தருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: 

“ தங்கள் பல்கலைக்கழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டண உயர்வானது மாணவர்களைக் கோபமடையச் செய்திருப்பது மட்டுமின்றி பல்கலைக்கழக வளாகத்தின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு 225 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதைப்போலவே எம்.ஏ; எம்காம்; எம்.எஸ்.டபிள்யூ முதலான படிப்புகளுக்கும் சுமார் 10,000 ரூபாய் கட்டணம் உயர்த்தி இருக்கிறீர்கள். இதனால் கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கனவு பாழாக்கப்படும்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கங்களில் சமத்துவம், சமூக பொறுப்புணர்வு ஆகியவற்றை நோக்கமாக சரியான முறையில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதற்கேற்ப அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வைத் திரும்பப் பெற்று ஏழை மாணவர்களுக்கு உதவுமாறு வலியுறுத்துகிறேன்” என்று அக்கடிதத்தில் ரவிக்குமார் குறிப்பிட்டிருக்கிறார்