திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரவிக்குமார் எம்பி ஆய்வுக்கூட்டம்

Views : 510

பதிவு செய்த நாள் 13-Feb-2020

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் 13.02.2020 பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. அந்த வட்டாரத்துக்குட்பட்ட கிராமங்களில் மத்திய அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எந்த நிலையில் உள்ளது என்று துறைவாரியாக ஆய்வு செய்யப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் முன் மாதிரி கிராமத் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் காந்தலவாடி கிராமத்தில் என்னென்ன திட்டங்கள் தேவைப்படுகின்றன, என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என ஆய்வு செய்யப்பட்டது. அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், கழிப்பிடம், மின் இணைப்பு, சுகாதாரம், கல்வி, குடியிருப்பு முதலானவற்றுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வந்திருந்த அதிகாரிகள் ஒவ்வொரு துறை சார்ந்தும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தனர்.

காந்தலவாடி கிராமத்துக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வின் (baseline survey) விவரங்களை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்த புள்ளி விவரங்களையும் தெரிவித்தனர். அங்குள்ள ஆரம்ப பாடசாலைக்கு வகுப்பறைகள் வேண்டும் என்ற கோரிக்கையை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார். கால்நடைத்துறை துணை நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று அந்தத் துறை அதிகாரி கேட்டுக்கொண்டார்.

முன்மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தவிர கூடுதலாக அங்கே மருத்துவ முகாம் நடத்தப்பட்டதையும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட இருப்பதையும், சிஎஸ்ஆர் நிதியின் கீழ் சில திட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கினார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை ரவிக்குமார் எம்பி பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்குச் சென்று அங்கிருக்கும் அதிகாரிகளையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.