மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடு- வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ரவிக்குமார் எம்பி ஆய்வு

Views : 713

பதிவு செய்த நாள் 19-Feb-2020


மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப்பற்றி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ரவிக்குமார் எம்பி ஆய்வு மேற்கொண்டார். 19.02.2020 காலை 10.30 மணிக்கு காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கெடுத்தனர். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி கிசான் திட்டம் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வட்டாரத்தில் எத்தனை பேருக்கு காசநோய் மற்றும் தொழுநோய் இருக்கிறது என்ற விவரங்களையும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ரவிக்குமார் கேட்டறிந்தார். அதன் பின்னர் பகல் 12 மணிக்கு முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கும் இந்த நான்கு திட்டங்கள் குறித்து எந்த அளவுக்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவற்றில் காணப்படும் சுணக்கத்துக்குக் காரணம் என்ன? என்பதைப் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தார். பிற்பகல் 2 மணிக்கு திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கும் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி அவர் கேட்டறிந்தார்.

ஆய்வுக் கூட்டங்களில் ரவிக்குமார் எம்பி பேசியதன் சுருக்கம்:

”ஒவ்வொரு ஊரிலும் மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசின் திட்டங்கள், மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்படுத்தும் திட்டங்கள் என்று மூன்று வகையான நலத்திட்டங்கள் / வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசு 26 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் நீண்டகாலமாக செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், வேலை உறுதித் திட்டம், கல்வி வளர்ச்சித் திட்டங்கள், சுகாதார திட்டங்கள் முதலானவை தவிர அண்மையில் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் பிரதம மந்திரி கிசான் திட்டம் போன்றவை நேரடியாக மக்களுக்கு உதவக்கூடிய திட்டங்களாக உள்ளன. 26 திட்டங்கள் இருந்தாலும் ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ,பிரதம மந்திரி கிசான் திட்டம் மற்றும் சுகாதாரத் திட்டம் ஆகிய நான்கு திட்டங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்வதற்காக நான் இங்கு வந்து இருக்கின்றேன்.

கிராமப்புற வேலை உறுதி திட்டம் உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவமான திட்டமாகும். எந்த நாட்டிலும் மக்களுக்கு வேலை அளிப்பதற்கு ஒரு சட்டம் இயற்றப்படவில்லை. இங்குதான் சட்டத்தின் அடிப்படையில் இந்த வேலை உறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குடும்பம் ஒன்றுக்கு 100 நாட்கள் வேலை அளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் சராசரியாக 30 - 40 நாட்கள்தான் வேலை வழங்க முடிகிறது. இதற்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் குறைந்து கொண்டே வருவது இதற்கு முதன்மையான காரணமாகும். இதற்கான நிதியை உயர்த்த வேண்டும் என்று நான் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி இருக்கிறேன். இங்கு எத்தனை பயனாளிகள் இதில் பதிவு செய்து கொண்டுள்ளனர், அவர்களுக்கு எந்த அளவுக்கு வேலை வழங்கப்படுகிறது என்ற விவரங்களைக் கேட்க விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல் தற்போது பொது வளங்களை உருவாக்குவதற்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியில் வேலைக்காகக் கொடுக்கப்படும் சம்பளத்துக்கான தொகை குறைவாகவும், வளங்களை உருவாக்குவதற்கான பொருட்களை வாங்குவதற்கு ஒதுக்கப்படும் தொகை கூடுதலாகவும் இருக்கிறது. இதனால் வேலை நாட்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இத்தகைய பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி உங்கள் ஆலோசனைகளைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

 அடுத்ததாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம். இந்த திட்டத்திற்கு முன்னோடி மாநிலம் தமிழகம்தான். தலைவர் கலைஞர் தான் முதலில் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதைப் பார்த்து தான் மத்திய அரசு அந்தத் திட்டத்தை தேசிய அளவில் உருவாக்கியது. நான் சட்டமன்ற உறுப்பினராக 2006 -2011 காலத்தில் பணியாற்றியபோது ’குடிசை இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும்’ என்ற ஒரு இலக்கை உருவாக்கிக்கொண்டு தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்தேன். அதுதொடர்பாகத் தரவுகளை சேகரிக்கும் போது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் குடிசை வீடுகள் இருப்பது தமிழ்நாட்டில் தான் என்பதுதான் அந்த அதிர்ச்சிகரமான செய்தி. அதிலும் பேரதிர்ச்சி என்னவென்றால் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமான குடிசை வீடுகள் இருக்கின்றன. விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்கள் தான் தமிழ்நாட்டிலேயே குடிசை வீடுகள் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் ஆகும். இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்த நேரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்காக இந்த திட்டத்தை அதில் சேர்த்துக் கொள்ளுமாறு அன்றைய மாநில திட்டக் கமிஷன் தலைவராக இருந்த பேராசிரியர் நாகநாதன் அவர்களிடம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இது தொடர்பாக தொடர்ந்து ரவிக்குமார் வலியுறுத்தி வருகிறார் அவரிடம் அதற்கான தரவுகளைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். அதனடிப்படையில் பேராசிரியர் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து இதுதொடர்பான தரவுகளோடு நேரில் வாருங்கள் என்று கூறினார் அவற்றை எல்லாம் எடுத்துச் சென்று அவரோடு விவாதித்து இந்த திட்டம் அந்தத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற காரணத்தினால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் முடிவுசெய்தார். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற குடிசை வீடுகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. 21 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவற்றை படிப்படியாக கான்கிரீட் வீடுகளாக மாற்றுவது என்ற மாபெரும் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு அதற்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்று பெயரிடப்பட்டது. 2010 மற்றும் 2011 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அதிகமான வீடுகளைப் பெற்ற மாவட்டம் விழுப்புரம் தான். நான் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், நான் எழுப்பிய கோரிக்கையால் அதிகம் பயன் அடைந்தது விழுப்புரம் மாவட்டம் தான்.

தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் வீடு கட்டும் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்தே வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னால் வெளியிடப்பட்டுள்ள தமிழக பட்ஜெட்டில் 1 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் வீடுகள் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இரண்டு லட்சம் வீடுகள் இந்த ஆண்டில் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கில் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் அந்த இலக்கை எட்டுவதில் மிகப்பெரிய தேக்கநிலை இருப்பதைப் பார்க்கிறேன்.

பல ஒன்றியங்களில் 20 முதல் 30 சதவீத வீடுகள் தான் முழுமையடைந்து இருக்கின்றன. மணல் கிடைக்காதது ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. தற்போது வந்துள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் கிராமப்புற மக்களின் இன்னல்களைப் பற்றி நன்கு அறிந்தவர். அவர் பொறுப்பேற்றதும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மணல் வழங்குவதற்கு சிறப்பு அனுமதியை அளித்திருக்கிறார். அதனால் இப்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதில் வேகம் கூடியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

மூன்றாவதாக, பிரதம மந்திரி கிசான் திட்டம். நான் மத்திய அரசினுடைய வேளாண் அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கின்றேன். அதன் முதல் கூட்டம் மத்திய வேளாண் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் சில நாட்களுக்கு முன்னால் டெல்லியில் நடந்தது. அதில் பங்கேற்ற போது பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் குறைவான எண்ணிக்கையிலேயே பதிவு செய்து கொண்டிருப்பதை அறிய முடிந்தது. நமது வட்டாரத்தில் எல்லா விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு பயன் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதற்கு நமது அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

 அடுத்தது சுகாதாரத் திட்டங்கள். காசநோய், தொழுநோய் நமது நாட்டில் பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டு விட்டதாக நமது அரசுகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. ஆனால் நான் போகிற இடங்களில் எல்லாம் இதைப் பற்றி விசாரிக்கும்போது ஒவ்வொரு வட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. அதுபோல ஒவ்வொரு வட்டத்திலும் தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்த அளவில் மிக அதிகமானவர்களை காசநோய் பாதித்து இருப்பது தெரியவருகிறது. இதற்கான காரணம் என்ன என்று மருத்துவர்களைக் கேட்கும் போது இங்கிருந்து வேறு மாநிலங்களுக்கும் வேறு இடங்களுக்குச் சென்றும் பணிபுரியும் தொழிலாளிகள் அங்கிருந்து இந்த நோயைத் தொற்றிக் கொண்டு வந்து அவர்கள் மூலமாக இது பரவுகிறது என்றும், ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இது எளிதில் தொற்றுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த நோய்களைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் இதற்கான சிகிச்சையை மக்கள் சரியாக எடுத்துக்கொள்வதில்லை. இப்பொழுது 60 நாட்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் காசநோயை ஒழித்துவிட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த மருந்துகள் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதுபோலவே தொழுநோய்க்கான மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு நோய்களும் தொற்று நோய்களாகும். இவற்றை சரியாக கவனிக்காமல் விட்டால் இது மிக வேகமாக பரவும். யாருக்கோ தானே வந்திருக்கிறது என்று காசநோய் பற்றி அலட்சியமாக இருந்தால் அது நமது வீட்டுக்குள்ளும் நுழைந்துவிடும். எனவே இதை மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தான் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராமுகமாக இல்லாமல் ஒவ்வொருவரும் நமது பகுதியில் இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் இருக்கிறார்களா என்பதைப் பார்த்து அவர்களை மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நாம் வலியுறுத்த வேண்டும். நாமெல்லாம் இணைந்து செயல்பட்டால் தான் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும், ஒழிக்க முடியும். இது தொடர்பான விபரங்களையும் அலுவலரிடம் இருந்து நான் கேட்டறிய விரும்புகிறேன்.

 இந்த நான்கு திட்டங்கள் குறித்து மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி இந்த ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புகிறேன்” என்று ரவிக்குமார் தெரிவித்தார்.

அதன் பின்னர் அதிகாரிகள் இந்தப் பொருண்மைகள் குறித்த புள்ளி விவரங்களையும், அவற்றை செயல்படுத்துவதில் இருக்கிற சிக்கல்களையும், அவற்றை எந்த அளவுக்கு செயல்படுத்துகிறோம் என்ற விவரங்களையும் எடுத்துரைத்தனர்.ஒவ்வொரு ஊரிலும் ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்பு அங்கிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை ரவிக்குமார் எம்பி பெற்றார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.