விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய், தொழுநோய் ஒழிக்கும் வழி- இணை இயக்குனர் அலுவலகத்தில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆலோசனை

Views : 129

பதிவு செய்த நாள் 20-Feb-2020

விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய், தொழுநோய் - இணை இயக்குனர் அலுவலகத்தில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் சுகாதார சேவைகள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிவதற்காக இன்று சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக காசநோய், தொழுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரம் ஆகியவற்றைக் கேட்டறிந்தார்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 4654 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 2406 பேரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2248 பேரும் உள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் 456 புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

காசநோயை 2025 ஆம் ஆண்டுக்குள் முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கோடு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. காசநோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மாதம்தோறும் 500 ரூபாய் நேரடியாகப் பணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவர்களுக்கான மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. காசநோய் பாதிப்பு உள்ளவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் அப்படி அழைத்து வருபவருக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்தலாம் என்று நான் ஆலோசனை கூறினேன். ஏற்கனவே அப்படி ஒரு மகளிர் சுய உதவிக்குழுவை தேர்ந்தெடுத்து அதில் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலமாக காசநோயாளிகள் மற்றும் தொழு நோயாளிகளைக் கண்டறியும் திட்டம் செயல்படுத்தப் படுவதாக இணை இயக்குனர் தெரிவித்தார்.

காச நோயைக் கண்டறிவது முன்பு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக இருந்தது. இப்போதோ மிகவும் மேம்பட்ட நவீன கருவிகள் இதற்காக வந்துவிட்டன. அவற்றின்மூலம் இரண்டு மணி நேரத்தில் ஒருவருக்கு காசநோய் இருக்கிறதா இல்லையா என்பதைப் பரிசோதித்து சொல்லிவிட முடிகிறது என்று இணை இயக்குனர் தெரிவித்தார். அந்த கருவி தற்போது மாவட்டத்தில் 2 இருப்பதாகவும் கள்ளக்குறிச்சி தனியாக பிரிக்கப்பட்டு விட்டதால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரே ஒரு கருவி தான் இருக்கிறது என்றும் அதை ஒரு வாகனத்தில் வைத்து கிராமங்களுக்கு கொண்டு சென்று நேரடியாக அங்கேயே நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கூடுதலாக இன்னொரு கருவி இருந்தால் இன்னும் அதிக அளவில் நோயாளிகளைக் கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தவர்கள் வேலைக்குப் போக முடியாத நிலை இருந்தால் அவர்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. அதன் கீழ் 800க்கும் அதிகமானவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உதவித்தொகை பெறுகிறார்கள் என்ற தகவலை அந்தத் துறை சார்ந்த அதிகாரி தெரிவித்தார். 2020 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முகாம் மூலமாக புதிதாக 292 தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் 400 முதல் 500 வரையிலான புதிய தொழுநோயாளிகள் இந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்படுவதாக அவ்ர் கூறினார்.

இந்த மாவட்டத்தில் இரண்டு முக்கியமான சுகாதார பிரச்சினைகள் உள்ளன எனக் குறிப்பிட்ட இணை இயக்குனர் கட்டுப்பாடில்லாத மக்கள்தொகை பெருக்கமும் போலி மருத்துவர்கள் நடமாட்டமும்தான் அந்தப் பிரச்சனைகள் என்றார்.போலி மருத்துவர்களால் ஏராளமான சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்கிற விழிப்புணர்வு இந்த மாவட்டத்தில் குறைவாக உள்ளது, ஆறு குழந்தைகள் உள்ள தாய்மார்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு வர மறுக்கின்றனர். அதிக குழந்தை பெற்ற தாய்மார்கள் காசநோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புக்கு அதிகம் ஆளாகின்றனர். இதை அவர்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்று இணை இயக்குனர் கேட்டுக்கொண்டார். அதுபோலவே தகுதி இல்லாத நபர்கள் மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டு கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர், குறைந்த செலவில் சிகிச்சை பெறுவதற்காக அங்கெல்லாம் மக்கள் போகின்றனர், இதனால் மிகப்பெரிய பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினரின் ஒத்துழைப்பு அவசியமாக இருக்கிறது என்பதையும் இணை இயக்குனர் தெரிவித்தார்.

’காசநோய் தொழுநோய் மற்றும் இணை இயக்குனர் தெரிவித்த சுகாதார பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அனைவருக்குமே இருக்கிறது. எல்லோரும் இணைந்து பாடுபட்டால் தான் 2025 இல் காசநோய், தொழுநோய் இல்லாத மாவட்டமாக விழுப்புரத்தை மாற்றமுடியும். நிச்சயம் அந்த இலக்கை எட்ட நான் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பேன்’ என நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் உறுதியளித்தார்.