முனைவர் ரவிக்குமார்

நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு ’தமிழில் தொழிற்பட்ட மூன்று இலக்கிய இயக்கப் போக்குகளாக எழுத்து இலக்கியப் போக்கு, வானம்பாடி இலக்கியப் போக்கு, நிறப்பிரிகை இலக்கியப்போக்கு ஆகியவற்றை விமர்சகர்கள் சுட்டுவர். அவற்றுள் நிறப்பிரிகை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்ததோடு அந்த இதழைப் பதிப்பித்து வெளியிட்டவர் ரவிக்குமார். அந்த இதழ் ஒரு இயக்கமாக அறியப்படுவதற்கான களப் பணிகளை முன்னெடுத்தவர்.

பின் நவீனத்துவ சிந்தனையை தமிழ்ச் சூழலில் இலக்கிய, சமூக விமர்சனங்களுக்குப் பொருத்திக் காட்டியவர். அதற்கு உறுதுணையாக அமையுமாறு பல்வேறு சிந்தனையாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.

தமிழில் தலித், பெண்ணிய இலக்கியப் போக்குகள் வளர்வதற்கு இவரது பங்களிப்பு முக்கியமானது. தலித் என்ற இலக்கிய இதழின் மூலம் பல புதிய எழுத்தாளர்களையும் படைப்புகளையும் தமிழுக்கு அளித்தவர். தற்போது அவர் ஆசிரியராக இருந்து நடத்திவரும் மணற்கேணி ஆய்விதழ் தமிழ் ஆய்விதழ்களிலேயே தனித்துவமானதாகத் திகழ்கிறது.

கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இவரது விமர்சனங்கள் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் முதல் பின் நவீனத்துவ இலக்கியம் வரை விரிந்து செல்கின்றன. இலக்கியம் மட்டுமின்றி வரலாறு, கல்வெட்டியல்,தொல்லியல் எனப் பரந்துபட்ட தளத்தில் செயல்படும் ரவிக்குமார், Indian Express, Pioneer, Seminar, Himal , தினமணி, இந்து தமிழ் திசை, தினமலர், இந்தியா டுடே, ஜூனியர் விகடன் உள்ளிட்ட இதழ்களில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 1000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிபிசி தமிழோசை வானொலியில் 5 ஆண்டுகள் மாதாந்திர நிகழ்ச்சியை வழங்கியவர். தமிழ்ச் செவ்வியல், சமஸ்கிருதமும் தமிழும், தமிழ்த் தொல்லியல் ஆய்வுகள், தமிழ் பௌத்தம் முதலான பொருள்கள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளைமுன்வைத்திருப்பவர். தற்போது தமிழில் இயங்கிவரும் இலக்கிய, அரசியல் திறனாய்வாளர்களுள் முக்கியமானவர்.

கல்வித் தகுதி :

எம்.ஏ (தமிழ்) (2010) தமிழ்ப் பல்கலைக்கழகம்.

பி.எல் (1983) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

பி.எச்டி (2017) தமிழ்ப் பல்கலைக்கழகம்.

வகித்த பொறுப்புகள்:

1. சிண்டிகேட் உறுப்பினர்,தமிழ்ப் பல்கலைக்கழகம்.

2. செனட் உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

3. உறுப்பினர், எண்பேராயம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

4. உறுப்பினர், சமூக சீர்திருத்தக் குழு, தமிழக அரசு.

5. உறுப்பினர், புதிரை வண்ணார் நலவாரியம், தமிழக அரசு.

விருதுகள்

1. அறிஞர் அண்ணா விருது (2010) தமிழக அரசு.

2. விகடன் மொழிபெயர்ப்பு விருது (2014) ஆனந்த விகடன் குழுமம்.

3. திறனாய்வுச் செம்மல் விருது (2019) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

4. பாரதி விருது (2019) விடியல் டிரஸ்ட், சென்னை

காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு (2006-2011) சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய இவர் தற்போது விழுப்புரத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுகிறார்.