தமிழ்நாட்டின் நிதி நிலை: முன்னாள் தலமைச் செயலாளரின் ஆலோசனைகள் - ரவிக்குமார்

Views : 1030

பதிவு செய்த நாள் 19-Apr-2023

முன்னாள் தலைமைச் செயலாளர் கே. சண்முகம் அவர்களும், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கே.ஆர். சண்முகம் அவர்களும் இணைந்து எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி பத்திரிக்கையில் ( April 8,2023)  தமிழ்நாட்டினுடைய நிதிநிலைமை குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளனர். கடந்த ஆட்சியைக் காட்டிலும் திமுக தலைமையிலான ஆட்சியில் நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது என்றாலும் அதை இன்னும் சீர்படுத்த வேண்டும் என்று அந்த ஆய்வுக் கட்டுரை வலியுறுத்துகிறது. 


2021- 22 ஆம் ஆண்டுக்கான எகனாமிக் சர்வே இந்தியாவில் ஜிடிபிக்கும் பொது கடனுக்குமான விகிதம் 90 % ஐ 2022- 23 இல் கடந்து விடும் என்று தெரிவித்திருக்கிறது. ஒன்றிய அரசின் கடன் மட்டுமே 60.2% இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இது சமாளிக்க கூடியது அல்ல என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


சமாளிக்கக்கூடிய கடன் ஜிடிபி விகிதம் என்பது 59.3 % ஆக 2018 -19 இல் இருந்தது. இந்தியாவுக்கு ஒட்டுமொத்தமாக 60% கடன் இருக்கலாம் என்று கூறுகிற எஃப் ஆர் பி எம் சீராய்வுக் குழு அதில் 40 % ஒன்றிய அரசும் மாநில அரசுகள் எல்லாம் சேர்ந்து 20% இருக்கலாம் என்று நிர்ணயித்துள்ளது. இதை எடுத்துக்காட்டுகிற இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்கள் 2022-23 பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 6.53 லட்சம் கோடி என்றும் அது கடன் - ஜி எஸ் டி பி விகிதம் 26.3% இருப்பதாகவும் குறிப்பிட்டார். இது 15 வது நிதிக் குழு நிர்ணயித்த எல்லைக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2005 -2006 முதல் 2011 -12 வரையிலான ஆண்டுகளில் தமிழ்நாட்டினுடைய நிதிநிலை வளர்ச்சியானது 10.3% ஆக இருந்தது, அதற்குப் பிறகு அது 6.43% ஆக சரிந்துவிட்டது. இந்தப் பின்னணியில் பின்வரும் கேள்விகள் எழுவதாக கட்டுரை ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்: 

(i) தமிழ்நாட்டில் பொதுக்கடன் தாக்குப்பிடிக்கக்கூடியதா இல்லையா? (ii) தமிழ்நாட்டின் ஜிஎஸ்டிபி- கடன் விகிதம் வளர்ச்சியைத் தூண்டுகிறதா இல்லையா? (Iii) தமிழ்நாட்டின் கடன் வரம்பு எவ்வளவு? (iv) இந்திய மாநிலங்களுக்கு FRBM மறுஆய்வுக் குழு நிர்ணயித்த வரம்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு 15 ஆவது நிதிக்குழு நிர்ணயித்த வரம்பு ஏன் வேறுபடுகிறது? (v) பொதுக் கடன் அதிக அளவில் இருப்பதற்கான காரணங்கள் என்ன? மற்றும் (vi) கடன் பொறியிலிருந்து விடுபட மாநிலத்திற்குத் தேவையான நிதிக் கொள்கை உத்திகள் என்ன?  

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வழங்க இந்த ஆய்வுக் கட்டுரையில் அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இந்த ஆய்வுக் கட்டுரையில் பல்வேறு பொருளாதாரக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டினுடைய கடன் நிலையை கட்டுரையாசிரியர்கள் ஆராய்ந்து உள்ளனர். 1996-97 முதல் 2020- 21 வரையிலான ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் இருந்த பொருளாதார நிலையை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். தாங்கக்கூடிய கடன் சுமை எந்த அளவு இருக்க வேண்டும் என்பதையும் இவர்கள் விரிவாக ஆராய்ந்து உள்ளனர். கடனுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். இறுதியாக தமிழ்நாட்டில் சமாளிக்கக்கூடிய கடன் அளவை எவ்வாறு எட்டுவது என்பது பற்றிய ஆலோசனைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

தற்போது இருக்கும் கடன் அளவு 15 ஆவது நிதிக் குழு நிர்ணயித்த வரம்புக்குள் இருந்தாலும் 18.8% க்கு மேல் அது இருக்குமேயானால் பொருளாதார வளர்ச்சியை அது குறைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். கடனுக்கும் ஜிஎஸ்டிபி க்கும் இடையிலான விகிதம் 18% க்கு உட்பட்டு இருக்கும்போது வாங்கிய கடனுக்கு செலுத்துகிற வட்டியின் அளவு குறைவாக இருக்கும். 2014 -15 ஆம் ஆண்டில் அத்தகைய ஒரு நிலை இருந்தது. அப்போது செலுத்தப்பட்ட வட்டி 11.5% ஆக இருந்தது. அது ஜிஎஸ்டிபியில் 1.35% ஆகும். ஆனால் தற்போது அந்த கடன்- ஜிஎஸ்டிபி விகிதமானது 26.94% ஆக உயர்ந்திருப்பதால் கடனுக்கு செலுத்துகிற வட்டியின் அளவு 21.24% ஆக உயர்ந்திருக்கிறது. அது ஜிஎஸ்டிபியில் 1.95% ஆக இருக்கிறது. இந்த வட்டிக்கு இடையிலான வேறுபாடு சுமார் 22500 கோடி ஆகும். இந்த வட்டியைக் குறைத்து இருந்தால் அந்தத் தொகையை ஆக்கபூர்வமான பலவற்றுக்கு மாநில அரசு செலவிட முடிந்திருக்கும் என்பதை கட்டுரை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

மாநில அரசானது14% க்கு மேலே பொருளாதார வளர்ச்சியை இலக்காக வைத்து திட்டமிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கும் கட்டுரை ஆசிரியர்கள் , அந்த நிலையை எட்ட வேண்டும் என்றால் தற்போது இருக்கும் நிலையை ஆராய வேண்டும். வருவாயில் 0.75% உயர்த்தப்பட வேண்டும். அது போலவே செலவுகள் 0.75% குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் சமாளிக்கக் கூடிய கடன் நிலையைத் தமிழ்நாடு எட்ட முடியும். வரியில்லா வருவாயின் அளவைப் பெருக்குவது , மோட்டார் வாகனங்கள் மீதான வரியை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வருவாயைப் பெருக்க முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். வரியில்லா வருவாய் தற்போது 0.65% அளவில் உள்ளது அதை 1.25% என்கிற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்ற விதத்தில் தேவையற்ற மானியங்கள், செலவுகள் ஆகியவற்றைக் குறைத்து நலத்திட்டங்களை இன்னும் செம்மையான விதத்தில் செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். மாநிலத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக போக்குவரத்துக் கழகம், மின் துறை ஆகியவற்றில் கடுமையான நட்டம் ஏற்பட்டு வருகிறது. அதுவே மாநிலத்தின் கடன் அளவு உயர்வதற்குக் காரணமாக இருக்கிறது. அவற்றின் நிதி நிலையை சீர் செய்வதன் மூலமாக கடன் அளவைக் குறைக்க முடியும் என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் நிச்சயம் இந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்திருப்பார். இந்த ஆலோசனைகள் குறித்த அவரது எதிர் வினைகளை இதே எகனாமிக் அண்ட்பொலிடிக்கல் வீக்லியிலேயே எழுதலாம் அல்லது பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக சட்டமன்றத்தில் அறிவிக்கலாம்.