சாதி அமைப்பைத் தூய்மைப் படுத்துதல் (அம்பேத்கரும் காந்தியும் - குறிப்பு 3 ) - ரவிக்குமார்

Views : 18

பதிவு செய்த நாள் 26-Sep-2021

பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அரிஜன் என்ற பெயரில் ஆங்கில வார இதழ் ஒன்றை காந்தி ஆரம்பித்தார். தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செய்திகளை அதில் காந்தி வெளியிட்டார். குறிப்பாக பட்டியல் இன மக்களுக்கு எங்கெங்கே கோயில்கள் திறந்துவிடப்பட்டன, எந்தெந்த ஊர் கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டது முதலான செய்திகள் அதில் இடம் பெற்றன. ஒரு செய்திப் பத்திரிக்கையாக வெளியிடப்பட்ட அந்த இதழில் அவ்வப்போது தாகூரின் கவிதையும் வெளியிடப்பட்டது. 1948 வரை 15 ஆண்டுகள் அந்த பத்திரிக்கை தொடர்ந்து வெளிவந்தது. அதன் முதல் இதழில் வெளியிடுவதற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்புமாறு அம்பேத்கரை காந்தி கேட்டுக்கொண்டார். சனாதன இந்துக்களின் சாதிவெறி நடவடிக்கைகளால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த அம்பேத்கர் பின்வரும் சுருக்கமான அறிக்கையை 07.02.1933 அன்று காந்திக்கு அனுப்பினார். அதை ச்ம்பேத்கரும் சாதியும் என்ற தலைப்பில் காந்தி முதல் இதழிலேயே (பக்கம் 3) வெளியிட்டார்: 

“கடந்த சனிக்கிழமை நமது உரையாடல் முடிவு பெற்றபோது உங்களது புதிய வார ஏடான அரிஜனில் வெளியிடுவதற்கு செய்தியொன்றை அனுப்புமாறு நீங்கள் கேட்டீர்கள். நான் அப்படி ஒரு செய்தியை அனுப்புவது இயலாது என்று நினைக்கிறேன். ” எனக் குறிப்பிட்ட அம்பேத்கர் பின்வரும் குறிப்பை ‘அறிக்கை’ எனத் தலைப்பிட்டு காந்திக்கு அனுப்பிவைத்தார்.

அறிக்கை

“ சாதியால் புறமொதுக்கப்பட்டவர்கள் என்போர் சாதி அமைப்பின் விளைபொருளாக இருக்கிறார்கள். சாதி அமைப்பு இருக்கும்வரை அவர்களும் புறமொதுக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.சாதி அமைப்பை அழித்தொழிக்காமல் அவர்களை விடுதலைபெறச் செய்ய முடியாது. இந்த கொடூரமான, தீய கோட்பாட்டின்மீதான நம்பிக்கையைத் துடைத்தெறிவதுதவிர , இந்துக்களைக் காப்பாற்றவோ, எதிர்வரும் போராட்டத்தில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தவோ வேறு எதுவும் உதவ முடியாது.” 

இதைப் பிரசுரித்துவிட்டு அதற்குக் கீழே காந்தி நீண்ட விளக்கம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். முதலில் அம்பேத்கரைப் பாராட்டுவதுபோல் எழுதிவிட்டு அதன் பிறகு, ‘சாதி அமைப்பு தவறானதல்ல, தீண்டாமைதான் தவறு. உடம்பில் கட்டி வளர்ந்தால் அதற்காக உடம்பையே அழிக்க முடியாது, களைகளுக்காக பயிரையே நாம் தூக்கிஎறிந்துவிட முடியாது’ என்றெல்லாம் சாதி அமைப்பை காந்தி நியாயப்படுத்தியிருக்கிறார். 

காந்தியின் இந்த வாதத்தின் குறைபாடுகளை அம்பேத்கர் சாதி ஒழிப்பு என்ற தனது உரையில் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் இங்கே அம்பேத்கரின் இரண்டு வரி குறிப்புக்கு ஒரு பக்கம் விளக்கம் எழுதியுள்ள காந்தி, அம்பேத்கரின் சாதி ஒழிப்பு உரைக்கு எந்த பதிலையும் கூறவில்லை. 

காந்தியின் எழுத்துகளைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருவது, தீண்டாமை ஒழிப்பு எனக் காந்தி பேசியதுகூட சாதி அமைப்பைத் தூய்மைப்படுத்துவதற்குத்தானே தவிர தீண்டாத மக்களின் துயரங்களைப் போக்குவதற்கு அல்ல என்பதுதான் . 

படம்: அரிஜன் பத்திரிகையின் முதல் இதழ் முதல் பக்கம்