‘உயிரை எவர் இழக்கத் துணிகிறாரோ அவரே அதைக் காக்க முடியும்’ அம்பேத்கரும் காந்தியும் - குறிப்பு 4 - ரவிக்குமார்

Views : 41

பதிவு செய்த நாள் 27-Sep-2021

ஒரு மனிதன் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும்- உயிர் பிழைத்திருப்பதற்கா? சுய மரியாதையைக் காப்பதற்கா? அடிமைத் தனத்தை எதிர்க்கும் மனிதர்களின் முன்னால் எல்லா காலங்களிலும் இந்த வினா கேட்கப்பட்டிருக்கிறது. சுய மரியாதைக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதே எல்லா நேரங்களிலும் அதற்கான விடையாகவும் இருந்திருக்கிறது.

1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் கொலாபா மாவட்டத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் மாநாடு மகத் என்னுமிடத்தில் நடைபெற்றது. சுமார் 3 ஆயிரம் பேர் திரண்டிருந்த அந்த மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய அம்பேத்கர் தனது பேச்சில் பின்வருமாறு குறிப்பிட்டார் :

" நான் உறுதியான ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். நாம் நமக்கான அதிகாரம் என்கிற நிழலை நாம் வாழ்வதற்காக உருவாக்கிக் கொள்ளவில்லையென்றால் ஒருபோதும் வசதியான வாழ்க்கையை நாம் வாழ முடியாது. உயர் சாதியைச் சார்ந்தவர்களை போல நாமும் அரசாங்க வேலைக்குச் செல்லவில்லையென்றால் அத்தகைய அதிகார நிழலை உருவாக்க முடியாது. எனவே நாம் உயர்கல்வியைப் பெறுவதை நோக்கி நம்முடைய கவனத்தைச் செலுத்தியாக வேண்டும். தாய் மொழியில் நான்காம் வகுப்பு வரை படிக்கும் ஆயிரம் மாணவர்களை விட ஒரு பட்டதாரி இந்தச் சமூகத்துக்கு அதிகமான நன்மைகளைச் செய்ய முடியும். இப்படி நான் சொல்வதால் ஆரம்பக்கல்வியை நான் புறக்கணிக்கிறேன் என்பது பொருள் அல்ல. நம்முடைய நிலை இன்றைய சூழலை எதிர்கொள்வதற்குப் போதுமானதாக இல்லை. எவ்வளவு சீக்கிரம் நமது பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமது சமூகத்துக்கு நல்லது. எனவே மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதியை இங்கே உருவாக்க வேண்டியது அவசியம். நான் பானாவெல் (panavel) என்ற இடத்தில் ஒரு மாணவர் விடுதியை உருவாக்க முடிவு செய்திருக்கிறேன். தானே, கொலாபா என 2 மாவட்ட மாணவர்களுக்கும் அது பயன்படும். நீங்களும் அந்த மாணவர் விடுதியைத் துவக்குவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசிய அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

“ தீண்டாத வகுப்புகளில் மகர் சாதி தான் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறது. பொருள் ஈட்டுவதற்கான எந்தத் தொழிலும் அதற்கென்று இல்லை. கிராமங்களில் ஆண்டு முழுவதும் வேலை செய்து அறுவடை சமயத்தில் நிலவுடைமையாளர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு அதை வைத்து ஆண்டு முழுவதும் பிழைக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையை நடத்துவதற்கு கையேந்தி நிற்கிறார்கள். ஊர்க் கூட்டம் நடந்தால் அதைப் பறையடித்து கிராமம் முழுவதும் சந்து பொந்துகளிலெல்லாம் சொல்ல வேண்டிய வேலை அவர்களுடையதாக இருக்கிறது. அவர்கள் இப்படியான தாழ்வான வேலைகளைச் செய்கின்ற காரணத்தால் அவர்களை யாரும் கௌரவமாக நடத்துவதில்லை. இது அவர்களுடைய சுயமரியாதையைக் கடுமையாக சேதமடையச் செய்திருக்கிறது. ‘நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள் உயிர்ப் பிழைத்து கிடப்பதற்குச் சாப்பாடு போடுங்கள்’ என்று கேட்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையிலிருந்து தப்பித்துச் செல்ல இயலாத பலவீனர்களாக அவர்கள் உள்ளனர். கோயில்களில் நுழைவோம் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்போம் செத்த விலங்குகளை அகற்றும் பணியில் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் சொன்னால் உயர்சாதி இந்துக்கள் அவர்களுக்குக் கொடுக்கும் ரொட்டித் துண்டுகளைக் கொடுக்க மாட்டார்கள். வீணாகிப் போன ஜோவார் ரொட்டித் துண்டுகளுக்காக நமது தன்மானத்தை இழப்பது அவமானகரமானது. நமது மக்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தால் இப்படி கையேந்தி நிற்க வேண்டிய நிலை இருக்காது” என்று குறிப்பிட்ட அம்பேத்கர், “இப்படி மிச்சம் மீதி இருக்கும் உணவுக்காகக் கையேந்தி நிற்பதில் நாம் திருப்தி அடையும் வரை இந்த நிலைமை மாறாது. பழைய முறை நீடிக்கும்போது புதிய பாதையில் போக வேண்டும் என்று எவரும் விரும்ப மாட்டார்கள். பழைய நடைமுறைகளின் காரணமாக நாம் நமது மனிதத்தன்மையை, சுயமரியாதையை இழந்து விட்டோம். எவ்வளவு நாளைக்கு இப்படியே இருப்பது என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்” என்று பேசினார். இந்த மாநாட்டின் இறுதியில்தான் சௌதார் குளத்தில் நீர் அருந்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அது மகாராஷ்டிராவில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உயிர் பிழைத்திருப்பதைவிட சுயமரியாதையுடன் இருப்பதே முக்கியம் என்பதை அம்பேத்கர் மட்டுமல்ல, காந்தியும் வலியுறுத்தியிருக்கிறார்.

பெண்களின் பாதுகாப்புக்கென காந்தி சொல்லியிருக்கும் ஒரு கருத்து ஒவ்வொரு நிமிடமும் சாதிய வன்கொடுமைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்றையச் சூழலுக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. அதை இங்கே தருகிறேன்:

“ ஆணோ அல்லது பெண்ணோ சாவைப் பற்றிய பயத்தையெல்லாம் விட்டொழித்திருந்தால் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுவது அவர்களாலே முடியும். உண்மையில் சாவுக்கு அதிகமாக நாம் பயந்துவிடுகிறோம். இதனால் முடிவில் அதிகமானதாயிருக்கும் உடல் வலுவுக்குப் பணிந்து போய்விடுகிறோம். படையெடுத்து வந்தவனுக்குச் சிலர் முழந்தாளிட்டு வணங்கிவிடுவார்கள். சிலர் லஞ்சம் கொடுக்க முற்படுவர். சிலர் வயிற்றினாலேயே ஊர்ந்து செல்வதற்கும் மற்ற அவமானகரமான முறைகளுக்கும் உடன்படுவர். சில பெண்கள் சாவதற்குப் பதிலாகத் தங்கள் உடலையே ஒப்படைத்தும் விடுவார்கள். குற்றம்கூறும் உணர்ச்சியுடன் இதை நான் எழுதவில்லை. மனித சுபாவத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறேன். நமது வயிற்றினாலேயே நாம் ஊர்ந்து சென்றாலும் சரி, அல்லது ஒருவனுடைய காம இச்சைக்கு ஒரு பெண் இடங்கொடுத்துவிட்டாலும் சரி, இழிவானதொன்றைச் செய்வது உயிர்மேல் வைத்திருக்கும் ஆசையைத்தான் காட்டுகிறது. ஆகையால் உயிரை எவன் இழக்கிறானோ அவனே அதைக் காக்க முடியும். “ தேனத்யக்தேன புக்ஜீதா” . ஒவ்வொருவரும் இந்த ஒப்பற்ற சுலோகத்தை மறவாமல் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.இதில் வெறும் வாயளவு நம்பிக்கை போதாது. அது உள்ளத்தின் ஆழத்தில் ஊடுருவி நிற்கவேண்டும். வாழ்வின் இன்பத்தை அனுபவிக்க வாழ்வின்மீதிருக்கும் ஆசையை ஒருவர் விடவேண்டும். அதுவே நமக்குச் சுபாவமாகிவிட வேண்டும்”

(மகாத்மா காந்தி நூல்கள் ,இரண்டாம் தொகுப்பு, தமிழாக்கம்: ரெ.வெங்கடராஜுலு, காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்,சென்னை, இரண்டாம் பதிப்பு , 1961, பக்கம் 690-691)

அம்பேத்கரும் காந்தியும் முரண்பட்ட கொள்கை கொண்டவர்கள் தான். ஆனால் அவர்கள் ஒன்றுபடுகிற புள்ளிகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது.

‘சுயமரியாதையோடு வாழவேண்டுமென்றால் உயிரை விடத் துணியவேண்டும்’ என்பதே அவர்கள் சொன்ன செய்தி.