“ டிசம்பர் 6: இந்திய கிராம அமைப்பை மாற்றுவதற்கு உறுதியேற்போம்! “ - ரவிக்குமார்

Views : 117

பதிவு செய்த நாள் 06-Dec-2021

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளைக் கடைப்பிடிக்கும் இன்றைய தினத்தில், 1942ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி, அவர் ‘அகில இந்திய பட்டியலினத்தோர் மாநாட்டில்’ ஆற்றிய உரையை அவரது நினைவுநாளில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

தனது அரசியலின் மையமான அம்சம் எது ?என்பதை அந்த உரையில் புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருந்தார். பட்டியலின மக்கள் என்போர் இந்துக்களின் உப பிரிவினர் அல்ல, இந்த நாட்டில் முஸ்லிம்கள் எப்படி இந்துக்களிலிருந்து வேறுபட்டவர்களோ அப்படி அவர்களும் இந்துக்களிலிருந்து வேறுபட்டவர்கள், தனித்துவமான பண்பு கொண்டவர்கள். எனவே அவர்கள் தமக்கென்று தனி உரிமைகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள்” என்று குறிப்பிட்ட அம்பேத்கர், அந்தத் தனித்துவமான கூறை வலியுறுத்துவதுதான் தனது அரசியலின் மையமான அம்சம் என்று சுட்டிக்காட்டினார். 

அந்த உரையில் தலித் மக்களின் பலம் எது பலவீனம் எது என்பதை அவர் பட்டியலிட்டு விளக்கினார். தலித்துகளைப் பலவீனப்படுத்தும் சக்திகள் எவை என்பதை அவர் அடையாளம் காட்டியிருந்தார். அதுமட்டுமின்றி, ‘நம்முடைய போராட்டம் எதற்கானது என்பதைப்பற்றி தீண்டாத மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று குறிப்பிட்ட அம்பேத்கர், அவற்றை ஒவ்வொன்றாக அந்த உரையில் அட்டவணைப்படுத்தி இருந்தார். 

1. இந்திய தேசிய வாழ்வில் இந்துக்களிலிருந்து வேறுபட்ட, தனித்துவம் கொண்ட சமூகத்தினர் தாம் என்பதை நிறுவ வேண்டும்.

2. தலித் சமூகத்தினரின் கல்விக்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

3.அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவீதத்தை தமக்கு ஒதுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

4.அரசு நிர்வாகத்தில் அதிகாரம் உள்ள இடங்களில் தனக்கான இடத்தைப் பெற வேண்டும்.

 - எனப் பட்டியலின மக்கள் வலியுறுத்த வேண்டியவற்றை அட்டவணைப்படுத்திய அம்பேத்கர், இறுதியாக ஒன்றைக் குறிப்பிட்டார்: “இந்துக்களின் கிராமங்களிலிருந்து விலகி தமக்கென்று தனியான குடியிருப்புகளை தலித்துகள் அமைத்துக்கொள்ள வேண்டும்” .

“ இந்தியா முழுவதும் சுமார் ஏழு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்தையொட்டியும் ஒரு சிறு குடியிருப்பு தலித்துகளுக்கென்று இருக்கிறது. அந்தக் குடியிருப்பில் உள்ள தலித்துகள் பெரும்பாலும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ளனர்; பொருளாதாரத்திலும் பலவீனமாக இருக்கின்றனர்; பெரும்பாலும் அவர்கள் நிலமற்ற கூலி விவசாயிகள். தீண்டாமை காரணமாக அவர்களால் கிராமத்தில் எந்தவொரு வர்த்தகத்திலும் ஈடுபடமுடியாது. அவர்கள் தமது ஜீவனத்துக்காக அந்த கிராமத்தில் உள்ள இந்துக்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதற்காகத் தமது உழைப்பை மிக மலிவாக விற்க வேண்டியுள்ளது. தலித்துகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஏன் இப்படி வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு இந்த கிராம அமைப்பே காரணம்.”

“இந்திய கிராம அமைப்பு இது போலவே தொடரும் வரை தலித்துகளால் தமது சுதந்திரத்தை ஒருபோதும் அடைய முடியாது. அது பொருளாதார சுதந்திரமாக இருந்தாலும் சரி, சமூக சுதந்திரமாக இருந்தாலும் சரி அவர்களால் தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட முடியாது. எனவே, இப்போது இருக்கும் கிராம அமைப்பு முறை தகர்க்கப்பட வேண்டும். தலித்துகள் விடுதலை பெற வேண்டுமென்றால் அவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே வழி இதுதான். தலித்துகள் மட்டுமே கொண்ட சுதந்திரமான கிராமங்களை அமைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழி ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக அரசாங்கத்திடம் தலித் மக்கள் வலியுறுத்த வேண்டும். அரசாங்கத்தின் கையில் கணிசமான நிலம் இருக்கிறது. அத்தகைய நிலத்தை இப்படியான குடியிருப்புகளுக்கு ஒதுக்குமாறு தலித்துகள் கோரவேண்டும்”

“ தற்போதுள்ள கிராமங்களிலிருந்து வெளியேறி சுதந்திரமாக அமைக்கப்பட்ட தலித் கிராமங்களில் குடியேறுவதும், அங்கேயே விவசாயிகளாக வாழ்க்கை நடத்துவதும் தலித்துகளால் இயலாத ஒன்றல்ல. இதற்குக் கொஞ்சம் காலம் பிடிக்கலாம். அதனால் பிரச்சனை இல்லை . ஆனால், இப்படியான சுதந்திரமான தலித் கிராமங்களை அமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்” என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார்.

இந்திய கிராம அமைப்பு உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு மேலும் சாதிய இறுக்கம் கொண்டதாக மாறிவிட்டது. அதை சனநாயகப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக இல்லை. மறைமுகத் தேர்தல் முறை பணமும், சாதி அதிகாரமும் கொண்டவர்களே பிரதிநிதிகளாக வரமுடியும் என்ற சூழலை ஏற்படுத்திவிட்டது. அங்கு அதிகரிக்கும் கொடுங்கோன்மையும் , கிராமப்புற தலித்துகள் மேலும் மேலும் நிலமில்லாதவர்களாக ஆக்கப்படுவதும் அவர்களை புலம்பெயர் தொழிலாளர்களாக நகரங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் விரட்டுகின்றன. 

அரசாங்கம் வகுக்கும் திட்டங்கள் தலித்துகளின் நிலவுடைமையை அதிகரிப்பதற்குப் பதிலாக குறைப்பதற்கே வழிவகுக்கின்றன. 

இந்தச் சூழலில் அம்பேத்கர் முன்வைத்த தனி கிராமம் என்ற கருத்தாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. அதற்காகப் போராடுவதைப்பற்றி தலித் மக்களுக்கான இயக்கங்களும், கட்சிகளும் இன்றைய நாளில் சிந்திக்கவேண்டும்.