"மதிக்காத மதத்தில் ஏன் இருக்கவேண்டும் ?" - ரவிக்குமார்

Views : 324

பதிவு செய்த நாள் 03-Oct-2022

1936 ஆம் ஆண்டு தாதரில் நடைபெற்ற மாநாட்டில் நிகழ்த்திய உரையில் புரட்சியாளர் அம்பேத்கர் ஒன்றைக் குறிப்பிட்டார். " இப்போது உங்களுக்கு இருக்கும் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் சாதி இந்துக்களின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள முடியாது. சிறுபான்மையினராக இருப்பதால் இந்த நிலை என நான் சொல்லமாட்டேன். முஸ்லிம்கள்கூடத்தான் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் வம்புக்குச் செல்ல ஒருவரும் துணிவதில்லை. ஒரு ஊரில் இரண்டு முஸ்லிம் வீடுகள் இருந்தால்கூட பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் வம்பு செய்தால் இந்தியாவிலிருக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அவர்களுக்கு ஆதரவாக வருவார்கள் என்பது சாதி இந்துக்களுக்குத் தெரியும். தலித்துகளை ஒடுக்கினால் அவர்களுக்கு ஆதரவாக எவரும் வரமாட்டார்கள் என்பதால்தான் உங்கள்மீது வன்முறையை ஏவ அவர்கள் தயங்குவதில்லை" என்று அம்பேத்கர் சொன்னார். ‘சாதியவாதிகளின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள வேண்டுமென்றால் தலித் மக்கள் தமக்கான ஆதரவைத் திரட்டவேண்டும்’ என்று சொன்ன அம்பேத்கர், அதற்காகத்தான் மதமாற்றத்தை முன்மொழிந்தார்.

’இந்துவாகப் பிறந்துவிட்டேன் ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன்’ என சூளுரைத்த அம்பேத்கர் மதம் மாறும் முடிவை ஆத்திரத்திலோ அவசரத்திலோ மேற்கொள்ளவில்லை. மதம் மாறுவது என அவர் அறிவித்ததற்கும் (1926) அவர் பௌத்தத்தைத் தழுவியதற்கும் (1956) இடையே முப்பது ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். இடைப்பட்ட காலத்தில் சீக்கியம், இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம் எனப் பல்வேறு மதங்களின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் அவர் ஆராய்ந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலித் மக்களின் மாநாடுகளைக் கூட்டி அங்கு பல்வேறு சமயத் தலைவர்களையும் அழைத்து அவர்களது கருத்துகளைக் கேட்டார்.

 1936 ஏப்ரல் 13-14 இல், அம்பேத்கர் அமிர்தசரஸில் சீக்கிய பிரச்சார மாநாட்டில் கலந்து கொண்டார். சமத்துவத்தைப் பற்றி பேசும் சீக்கிய குருக்களின் போதனைகளால் கவரப்பட்டு, சாதியற்ற சமுதாயத்தில் நம்பிக்கை கொண்ட அவர் சீக்கிய மதத்திற்கு மாறுவதற்கான தனது ஆர்வத்தை அந்த மாநாட்டில் பேசும்போது தனது உரையில் வெளிப்படுத்தினார். அம்பேத்கரோடு அம்மாநாட்டிற்குச் சென்ற சிலர் சீக்கிய மதத்துக்கு மாறவும் செய்தனர். அங்கு பேசிவிட்டு வந்த அடுத்த மாதமே ( மே) தனது மகன் யஷ்வந்த் ராவையும் மருமகனையும் பொற்கோவிலுக்கு அனுப்பிவைத்தார். அவர்கள் இருவரும் ஒன்றரை மாதங்கள் பொற்கோயிலில் தங்கியிருந்து, அந்த மதத்தில் சமத்துவம் எப்படி பின்பற்றப்படுகிறது என ஆராய்ந்ததோடு , சீக்கிய சமூகத் தலைவர்களையும் சந்தித்து உரையாடினர். 1937ல் லக்னோவில் மாநாடொன்று கூட்டப்பட்டது . அதில் பதின்மூன்று மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பண்டிட் மதன் மோகன் மாளவியா, ஜுகல் கிஷோர் பிர்லா, டாக்டர் மூஞ்சே மற்றும் சிலர் தங்கள் நலனுக்காகவும், இந்து சமுதாயத்தின் நலனுக்காகவும், அம்பேத்கரின் தலைமையில் தலித்துகள் சீக்கிய மதத்திற்கு மாற அனுமதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். சீக்கியர்களை இந்துக்களாகக் கருதுவதாக காந்தி அடிக்கடி வெளிப்படுத்திய கருத்துகளின் பின்னணியில் இந்த முடிவை அவர்கள் எடுத்தனர். காந்திக்கு இது குறித்து பின்னர் மிக ரகசியமாக தெரிவிக்கப்பட்டது. அவர், தான் நடத்திவந்த ஹரிஜன் பத்திரிகையில் (ஆகஸ்ட் 22, 1936 ) அதை கண்டித்து எழுதினார். 'ஒரு ஆபத்தான முன்மொழிவு' ( A Dangerous Proposal ) என அந்தக் கட்டுரைக்கு அவர் தலைப்பிட்டிருந்தார். சீக்கிய மதத்துக்கு மாறும் அம்பேத்கரின் திட்டத்தை “சகோதர கொலை" எனவும் "பேரழிவு" எனவும் காந்தி வர்ணித்தார் . "ஹரிஜனங்களை கிறிஸ்தவர்கள் என்றோ அல்லது முஸ்லிம்கள் என்றோ அழைப்பதுகூட அவ்வளவு மோசமாக இருக்காது" என்று சொல்லும் அளவுக்கு காந்தி சென்றார். அம்பேத்கரை " தானே தலைவர் என சொல்லிக்கொள்பவர்" ( Self constituted leader ) என்று அவர் கேலி செய்தார். தனது தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் உரையாடல்களில் இந்த முடிவுக்கு எதிரான பிரச்சாரத்தை அவர் தொடர்ந்தார். 1936 செப்டம்பர் 19 தேதியிட்ட ஹரிஜனில் அவர் மீண்டும் தாக்கி ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

 அவரது எதிர்ப்பு மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இருந்தது. "சீக்கியர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி உரிமை கொடுக்கப்பட்டிருந்தது " எனவே அவர்கள் இந்துக்கள் அல்ல, என்று காந்தி புலம்பினார். சீக்கிய மதத்தில் சேர்ந்துவிட்டால் தீண்டாத மக்களும் அந்த உரிமையைப் பெற்றுவிடுவார்கள் என அவர் அஞ்சினார்.

காந்தியின் எதிர்ப்பால் சீக்கிய மதத் தலைவர்களும் அம்பேத்கரின் முன்மொழிவை ஆதரிப்பதற்குத் தயங்கினர்.

இதற்கிடையில் பஞ்சாபில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மஜாபி, ராம்தாசியா, கபீர் பந்தி (ஜுலாஹாஸ்) மற்றும் சிக்லிகர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த சீக்கியர்கள் ஜாட் சீக்கியர்களின் ஆதிக்கத்தால் தாங்கள் அனுபவிக்கும் சாதிய கொடுமைகளை அம்பேத்கரிடம் தெரிவித்தனர். சீக்கிய மதத்தில் இருக்கும் சாதிய பாகுபாடு அந்த மதத்தைத் தழுவும் அம்பேத்கரின் முடிவை மறு பரிசீலனை செய்ய வைத்தது. பௌத்தத்தை நோக்கி அவரது கவனம் நகர்ந்தது.

பௌத்தத்தின் மீதான ஈடுபாடு அவருக்கு சிறு பிராயம் தொட்டே இருந்தது. அவர் நான்காம் வகுப்பு மாணவராக இருந்தபோது கே.ஏ.கெலுஸ்கர் என்பவர் கூறிய புத்தரின் கதை தன்னை மிகவும் பாதித்தது என ’புத்தரும் அவரது தம்மமும்’ நூலின் முன்னுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த தாக்கத்தினால்தான் 1934 ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு ‘ராஜ கிருஹம்’ என அவர் பெயர் சூட்டினார். 1946 ல் தான் துவக்கிய கல்லூரிக்கு சித்தார்த்தா கல்லூரி எனப் பெயரிட்டார். 1948 ல் அவர் எழுதி வெளியிட்ட தீண்டாதார் குறித்த ஆய்வு நூலில் தலித் மக்களின் பூர்வமதமாக அவர் பௌத்தத்தைக் குறிப்பிட்டார். அதே ஆண்டில் சென்னையைச் சேர்ந்த லட்சுமி நரசுவின் ‘எசன்ஸ் ஆஃப் புத்திஸம்’ நூல் அவரது முன்னுரையோடு மறு பதிப்பு செய்யப்பட்டது.

கருத்தியல் ரீதியாக பௌத்தம் குறித்து அவர் பல பணிகளைச் செய்தாலும் 1954 ஆம் ஆண்டில்தான் பௌத்தம் குறித்த பிரச்சாரத்தை கிராமப்புறத்தைச் சேர்ந்த தலித் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார். தெஹு ரோடு என்ற இடத்தில் தலித் மக்கள் சொக்கமேளருக்குக் கோயில் ஒன்றைக் கட்டி அதன் துவக்க விழாவுக்கு அம்பேத்கரை அழைத்தனர். அங்கு ஒரு புத்த விஹார் கட்டுவதாக இருந்தால் அங்கு தான் வருவதாக அம்பேத்கர் கூறிவிட்டார். அதனால் அங்கு புத்த விஹார் ஒன்று கட்டப்பட்டது. அதுதான் நவீன காலத்தில் மஹராஷ்டிராவில் கட்டப்பட்ட முதல் புத்த விஹார் ஆகும்.

இந்து மதத்துக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான முதன்மையான இரண்டு வேறுபாடுகளை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். இந்து மதம் கடவுளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது, ஆனால் பௌத்தம் ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது; இந்து மதம் ஏற்றத்தாழ்வை அங்கீகரிக்கிறது ஆனால் பௌத்தமோ சமத்துவத்தைப் போதிக்கிறது என அந்த முரண்பாடுகளை அவர் விளக்கினார். பௌத்தத்தை அவர் தழுவியபோது லட்சக்கணக்கான தலித்துகளும் பௌத்தர்களாக மாறினர். 1961 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மஹராஷ்டிராவில் மட்டும் 28 லட்சம் தலித்துகள் பௌத்தர்களாக மாறியது தெரியவந்தது.

அம்பேத்கர் சுட்டிக்காட்டிய ஒழுக்கமின்மையும், சமத்துவமின்மையும் இப்போது மேலும் தீவிரமடைந்துள்ளன. அவற்றுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. அதனால், தலித் மக்கள்மீதான வன்முறை சென்ற நூற்றாண்டில் இருந்ததைவிட இப்போது பல மடங்கு கூடியிருக்கிறது. ஆனால் நீதித்துறையோ இந்த யதார்த்தத்தைப் பார்க்கக் கண் இன்றி பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகள் என்கிறது. இந்நிலையில், அம்பேத்கர் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பிய கேள்விகளை தலித் மக்கள் இப்போது மீண்டும் உரக்க எழுப்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

“ உங்கள் மனிதத் தன்மையை மதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்கவேண்டும்?’ “ உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தராத, உங்களை கோயிலுக்குள் அனுமதிக்காத, உங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவமதிக்கிற மதத்தில் ஏன் நீங்கள் இருக்கவேண்டும்? “ என்ற அம்பேத்கரின் கேள்விகள் இப்போது தலித் மக்களின் மனதில் கடல் அலையாய் ஆர்ப்பரிக்கின்றன.

( தொடரும் )