சிவில் சமூகமும் வகுப்புவாதமும்

Views : 53

பதிவு செய்த நாள் 08-Jan-2020

தோழர்களே வணக்கம்!
மனித உரிமைக் காப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டம் முக்கியமானது.இங்கு பேசும்போது திரு ஹென்றி என்னை ஒரு மனித உரிமைக் காப்பாளர் எனக் குறிப்பிட்டார்.அந்த அடையாளத்தை கௌரவமாகக் கருதுகிறேன். மனித உரிமைகள்,சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என்பவை தமக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகள் என  அரசியல் கட்சிகள் கருதிய காலம் உண்டு.ஆனால் அவை இப்போது அனைத்து மக்களின் ஜீவாதாரப் பிரச்சனைகள் என்ற புரிதல் உருவாகியுள்ளது.அதனால்தான் ஹைட் ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே திமுக திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.விசிக சார்பில் நாளை (11.10.18) சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 
மனிதநேய மக்கள் கட்சி சில நாட்களுக்கு முன்னால் திருச்சியில் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டை நடத்தியது.விசிக சார்பில் 2016லேயே அந்த மாநாட்டை சுமார் ஒரு லட்சம் பேரைத் திரட்டி பாண்டிச்சேரியில் நடத்தினோம்.மோடி அரசு பண மதிப்பு அழிப்பு நடவடிக்கையை அறிவித்ததும் அதை எதிர்த்து அந்த மாநாட்டை நடத்தினோம். 500, 1000 ரூபாய் செல்லாது என்பதற்கும் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கலாம்.நாம் வைத்திருக்கும் ரூபாய் நோட்டு ஒரு பிராமிசரி நோட்டுதான்.அதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்துப்போட்டிருப்பார். அதற்குமேலே i promise to pay the bearer the sum of rupees என்று எழுதியிருக்கும்.அந்த ரூபாய் நோட்டை தனது விருப்பத்துக்கு ஒரு அரசு செல்லாமல் ஆக்கமுடியாது.அதற்கான சட்டப்படி செய்யவேண்டும்.அது குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.ஆனால் மோடி என்ன செய்தார்?நேரடியாக டிவியில் தோன்றி ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார்.அது அடிப்படை உரிமையைப் பறிப்பது.அரசியல் சட்டத்துக்கு எதிரானது. 
பணமதிப்பு அழிப்பு மிகப்பெரிய ஊழல்.தனியார் வங்கிகளையும்,கூட்டுறவு வங்கிகளையும் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷன் வாங்கியுள்ளனர். 2000 ரூபாய் நோட்டுகளை பொதுத்துறை வங்கிகளுக்குக் கொடுக்காமல் தனியார் வங்கிகளுக்குக் கொடுத்ததில் ஊழல் நடந்துள்ளது.இந்தியாவில் மிக அதிக அளவில் நோட்டு மாற்றப்பட்ட கூட்டுறவு வங்கி பாஜக தலைவர் அமித் ஷா இயக்குனராக உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிதான்.ஐந்தே நாட்களில் சுமார் 750 கோடி அங்கே மாற்றப்பட்டது.அடுத்து குஜராத் பாஜக அமைச்சர் இயக்குனராக இருக்கும் ஒரு கூட்டுறவு வங்கியில் 700 கோடி ரூபாய் மாற்றியுள்ளனர். 
பணமதிப்பு அழிப்பு சட்டம் பண மசோதாவாக மாநிலங்கள் அவையின் ஒப்புதல் பெறாமல் குறுக்கு வழியில் நிறைவேற்றப்பட்டது.ஆதார் சட்டத்தையும் அப்படித்தான் செய்தார்கள்.அதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.குடிமக்களின் அடிப்படை உரிமை தொடர்பான அந்த சட்டம் அரசியலமைப்புச்சட்ட திருத்த மசோதாவாகவே அறிமுகப்படுத்தப் பட்டிருக்கவேண்டும்.மோடி அரசு அப்படிச்செய்யவில்லை.அதனால்தான் அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என நாங்கள் மாநாடு போட்டோம். 
பேராசிரியர் கல்யாணி பேசும்போது ஒரு புத்தகத்தைக் காட்டினார்.அது 1999 ஆம் ஆண்டு மரண தண்டனையை எதிர்த்து நான் தொகுத்து வெளியிட்ட We The Condemned என்ற ஆங்கிலப் புத்தகம். அதைப் பார்த்ததும் என் நினைவுகள் இருபது வருடங்கள் பின்னோக்கிப் போய்விட்டன.ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த தடா நீதிமன்ற நீதிபதி நவநீதம் என்பவர் 1998 ஆம் ஆண்டு 26 பேருக்கு மரண தண்டனை அளித்தார்.அதனால் நாடே அதிர்ச்சி அடைந்தது.அந்தத் தண்டனையை எதிர்ப்பதைவிட மரண தண்டனையை எதிர்த்து ஒரு இயக்கத்தை முன்னெடுக்க நினைத்தேன்.அதற்காக ஹைதராபாத் சென்று கே.பாலகோபாலை சந்தித்து இந்தியாவில் உள்ள மற்ற மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைக்கக் கேட்டுக்கொண்டேன்.அதைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் மரண தண்டனைக்கு எதிரான இரண்டு நாள் தேசிய மாநாட்டை பியுசிஎல் சார்பில் ஒருங்கிணைத்தோம்.அதில் சிறப்புரையாற்ற அன்றைய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி மோகினி கிரியை அழைத்தோம்.அவரிடம் நாங்கள் அளித்த மனு தான் நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் காரணமானது. 
நாங்கள் மரண தண்டனைக்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்தை முன்னெடுப்பதற்கு முன்பு இந்தியாவில் அதற்கென இயக்கம் எதுவும் நடந்ததில்லை.நாங்கள் மேற்கொண்ட முயற்சி இங்கு மட்டுமல்ல அந்த நேரத்தில் ஆந்திராவின் சிலுக்கலூரிபேட் என்ற இடத்தில் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்ட இரண்டுபேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவும் ஊக்கமாக இருந்தது. அவர்களின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நேரத்தில் அந்த ஆண்டுக்கான ஞானபீட விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற இருந்த எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி ஞானபீட விருதைப் பெறும்போது கருணை மனு ஒன்றை குடியரசுத் தலைவரின் கையில் கொடுத்துவிட்டார்.மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி மரண தண்டனை நிறுத்தப்பட்டது.பிறகு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.அந்த வழக்கை நடத்திய வழக்கறிஞர் சந்திரசேகர் பாண்டிச்சேரியில் நாங்கள் நடத்திய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். 
இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு நாங்கள் எடுத்த லாக் அப் டெத் வழக்கு ஒன்றில்தான் முதன்முறையாக அதனால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.சந்திரசேகர் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அமைக்கப்பட்ட அந்த ஆணையத்தில் நீதிபதியாக ரத்தினம் என்பவர் நியமிக்கப்பட்டார்.அதன் விளைவாக அந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் தண்டிக்கப்பட்டனர். இப்படி மனித உரிமைப் பணிகளை மேற்கொள்வோரை மனித உரிமைக் காப்பாளர்கள் (human rights defenders) என அழைப்பது டெல்லியில் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் நடத்திய பயிற்சிப் பட்டறைக்குப் பிறகுதான்.2000 ஆவது ஆண்டில் நடந்த அந்தப் பட்டறையில் திரு ஹென்றி கலந்துகொண்டார்.நானும் பங்கேற்றேன். 1999 தேர்தலின்போது சிதம்பரம் தொகுதியில் நடந்த கலவரம் குறித்த அறிக்கையை ஆம்னஸ்டியிடம் அப்போது சமர்ப்பித்தேன்.இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மனித உரிமைக் காப்பாளர் என என்னை திரு ஹென்றி அழைத்தது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்.
இங்கே பேசிய எல்லோருமே சனாதன பயங்கரவாதத்தின் ஆபத்தை சுட்டிக்காட்டினார்கள்.அந்த பயங்கரவாதிகள் ஏன் என்னைக் கொலைசெய்ய திட்டமிடவேண்டும்?இன்று இந்தியாவில் வகுப்புவாதத்தோடு சமரசம் செய்துகொள்ளாத ஒரே தலித் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் இருக்கிறது. பீகாரில் அதிக வாக்குகள் பெற்று கின்னஸ் சாதனை செய்த ராம் விலாஸ் பாஸ்வான் இப்போது பாஜக அணியில் அமைச்சராக உள்ளார்.மகராஷ்டிராவில் துடிப்புமிக்க தலித் தலைவராக இருந்த ராம்தாஸ் அத்வாலே பாஜக அமைசாரவையில் இணைந்துவிட்டார். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியை விமர்சனம் செய்து கட்சி ஆரம்பித்த உதித்ராஜ் இப்போது பாஜகவில் உள்ளார்.வகுப்புவாதிகளின் எந்த சதி வலையிலும் சிக்காத இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள்தான்.அதனால்தான் கோபம், அதனால்தான் எங்களைக் குறி வைக்கிறார்கள். 
வாஜ்பாய் ஆட்சியின்போது இரண்டு சோதனைகளைச் செய்து பார்த்தார்கள்.முதலில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்தார்கள்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி கட்சிகள் எதுவும் ஆதரவை வாபஸ் வாங்கவில்லை;அடுத்து 2002 ல் குஜராத்தில் இனப்படுகொலையைச் செய்தார்கள்.அப்போதும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெறவில்லை.வகுப்புவாத செயல்திட்டம் அப்படித்தான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டது.இப்போதும் ஆர்.எஸ்.எஸ் ஒரு பரிசோதனையை செய்துகொண்டிருக்கிறது. 
இங்கு நடப்பதைப் பாசிசம் என நாம் குறிப்பிடுகிறோம்.ஆனால் 1930 களில் இத்தாலியில் முசோலினியால் பேசப்பட்ட பாசிசத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது.ஒற்றுமைகளும் உள்ளன.ஹிட்லர் யூதர்களை அழித்தொழித்ததுபோல சிறுபான்மை மதத்தவரை அழிக்கப் பார்க்கிறார்கள்- அதில் ஒற்றுமை இருக்கிறது.உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பகைவர்களை கட்டியமைக்கிறார்கள் அதில் ஒற்றுமை உள்ளது.ஆனால் அந்த பாசிசத்தைப்போல இது ராணுவத்தைப் பயன்படுத்தவில்லை.  ஹிட்லருக்கும், முசோலினிக்கும் நாடு பிடிப்பதற்கான தேவை இருந்தது, சந்தை தேவைப்பட்டது.ஆனால் ஒரு துருவ உலகமாக மாறிவிட்ட இன்றைய சூழலில் வகுப்புவாத பாசிசத்துக்கு அது தேவையில்லை.இங்கே அவசரப்படாமல் பொறுமையாக ஒரு பாசிச அரசை ஆர்.எஸ்.எஸ் கட்டியெழுப்ப விரும்புகிறது. 
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப்போல உலகில் வேறு எந்த நாட்டிலும் சுமார் 90 ஆண்டுகால தொடர்ச்சியான வரலாறுகொண்ட வகுப்புவாத இயக்கம் இல்லை.இந்தியாவில் அதற்கு சுமார் 56 ஆயிரம் கிளைகள் உள்ளன.முப்பது, நாற்பது பெயர்களில் துணை அமைப்புகள் உள்ளன.அதில் ஒன்றுதான் சனாதன் சன்ஸ்தா என்று சொல்லப்படுகிறது. 
இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு உண்மையை இந்தியா டுடே டிவி அம்பலப்படுத்தியது.2009 ஆம் ஆண்டு மர்மகோவாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பைப் புலனாய்வு செய்த போலிஸ் அதிகாரி பட்டீல் என்பவர் ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறார், ‘அந்த குண்டுவெடிப்பு மட்டுமின்றி மகராஷ்டிராவில் நடந்த பல குண்டுவெடிப்புகளோடு சனாதன் சன்ஸ்தாவுக்குத் தொடர்பு இருந்தது.அதை தடை செய்ய நான் பரிந்துரை செய்தேன்.உயர் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.தடை செய்திருந்தால் கௌரி லங்கேஷ் உள்ளிட்ட நால்வர் மரணத்தைத் தடுத்திருக்கலாம்’ எனக் கூறியிருக்கிறார். ‘கோவாவில் ஆளும் பாஜக அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரின் மனைவி சனாதன் சன்ஸ்தாவின் பொறுப்பாளராக இருப்பதாக பட்டீல் கூறியுள்ளார்.அந்த அமைப்பு தமிழ்நாட்டில் வெளிப்படையாக செயல்பட்டுவருகிறது.இதுவரை அதன் நிர்வாகிகள் போலிஸால் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.அதுவே ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருந்தால் காவல்துறை இப்படி அலட்சியமாக இருக்குமா? 
இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் முக்கியமானது.இந்தப் பிரச்சனை தெரிய வந்ததும் எமது கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.பல ஊர்களிலும் ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகளை நடத்துகிறோம்.இன்று செங்கல்பட்டில் எமது தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடந்துகொண்டிருக்கிறது.வகுப்புவாதத்தை தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் தோற்கடிப்பது