பொதுவெளியில் சிறுமைப்படுத்துதல் என்பது பண்டமாகிவிட்டது

Views : 32

பதிவு செய்த நாள் 08-Jan-2020

நண்பர்களே வணக்கம்!

நான் ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மட்டுமின்றி எழுத்தாளர்களின் பிரதிநிதியாகவும் உங்கள் முன்னால் நிற்கிறேன்.கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதுபற்றி அண்மைக்காலமாக நிறைய பேசப்படுகிறது.ஏனென்றால் கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.எழுத்தாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து இதே நோக்கத்துக்காக ’சரிநிகர்’ என்ற அமைப்பைத் துவக்கியிருக்கிறோம்.இப்போது ஊடகவியலாளர்கள் இப்படியொரு கூட்டத்தை நடத்த முன்வந்திருப்பதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்து சுதந்திரம் என்பதைப்பற்றிப் பேசும்போது நாம் இன்னொன்றையும் சேர்த்தே பேசவேண்டியுள்ளது.வெறுப்புப் பிரச்சாரம்.ஹேட் ஸ்பீச் – வெறுப்புப் பிரச்சாரம் என்பதோடு சேர்த்தே கருத்துரிமைப் பறிப்பு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.வெறுப்புப் பிரச்சாரத்தின் நீட்சியாகவே கருத்து சுதந்திரப் பறிப்பு நடக்கிறது.வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறவர்கள்தான் அதற்கு மாறுபட்ட கருத்து எதையும் மற்றவர்கள் சொல்லக்கூடாது எனத் தடை போடுகிறார்கள்.

 

தமிழ்நாட்டில் இரண்டு மூன்று ஆண்டுகளாக இந்த வெறுப்புப் பிரச்சாரம் தங்கு தடையில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது.அது கட்டுப்படுத்தப்படவில்லை.அதனால் ஊக்கம் பெற்ற அந்த சக்திகள்தாம் இப்போது கருத்துரிமைப் பறிப்பில் ஈடுபடுகின்றனர். பெருமாள் முருகன் மீதான தாக்குதலாக இருந்தாலும், புலியூர் முருகேசன் மீதான தாக்குதலாக இருந்தாலும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான தாக்குதலாக இருந்தாலும் அதில் இந்த வெறுப்புப் பிரச்சார சக்திகள்தான் ஈடுபட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.

கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக இங்கே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பேச வந்துள்ளனர்.கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பதில் சிரமம் ஒன்றும் இல்லை.அது எளிது.ஆனால் வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்ப்பதுதான் கடினம்.இன்றைய தேர்தல் அரசியல் முறை வாக்கு வங்கி அரசியல் முறையாக மாறிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டே கருத்து சொல்லும் சூழல் இருக்கிறது.அதனால் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரைக் கண்டிக்கவோ, கட்டுப்படுத்தவோ அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலேயே விவாதங்கள் நடந்தன.இந்திய தணடனை சட்டத்தில் அதற்காக 153 ஏ என்ற பிரிவு இருக்கிறது.292,293 மற்றும் 295 ஏ ஆகிய பிரிவுகள் இருக்கின்றன.ஆனால் அந்தப் பிரிவுகள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இரண்டு மதத்தினருக்கிடையில், இனங்களுக்கிடையில், மொழி பேசுவோருக்கிடையில் பகைமையை ஏற்படுத்தினால் அப்படிப் பேசினால், செயல்பட்டால் இந்தப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்தப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன.ஆனால் இந்தப் பிரிவுகளை யாருக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்?காவிரி நீர் உரிமைக்காகப் போராடினால் அவர்கள்மீது பயன்படுத்துகிறார்கள்; ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடினால் அவர்கள்மீது ஏவுகிறார்கள்.சிறுபான்மையினர்மீதே இந்தப் பிரிவுகள் ஏவப்படுகின்றன.

இந்திய தண்டனைச் சட்டத்திலோ,குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ ’ஹேட் ஸ்பீச்’ என்பது சரியாக விளக்கப்படவில்லை.அண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.இந்திய சட்ட ஆணையம் ’ஹேட் ஸ்பீச்’ என்பதை வரையறுக்கவேண்டும் என அது உத்தரவிட்டிருக்கிறது.வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுகுறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை விரைந்து நடைமுறைப்படுத்தவேண்டும் என இங்குள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தவேண்டும்.வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுபடுத்தினால்தான் பேச்சுரிமையைக் காப்பாற்ற முடியும்.எனவே வெறுப்புப் பிரச்சாரத்தை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் கண்டிக்கவேண்டும் என இங்கிருக்கும் அரசியல் தலைவர்களிடம் வேண்டுகிறேன்.

இங்கே வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலும்,நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானங்களிலும் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள்.அதை ஏதோ ஒரு பின்னொட்டு என்பதாகவோ பின்னிணைப்பு என்பதாகவோ நான் கருதவில்லை.அது மிகவும் முக்கியமானது.

அமெரிக்க அதிபர் கிளிண்டனின் செயலாளராக இருந்த மோனிகா லெவின்ஸ்கியைப் பற்றி நாம் அறிந்திருப்போம்.அவர் எந்தப் பிரச்சனைக்காகப் பிரபலமானார் என்பதும் நமக்குத் தெரியும்.சில நாட்களுக்கு முன்னால் அவர் முக்கியமானதொரு உரையை நிகழ்த்தியிருக்கிறார்.இணையம் என்பது பரவலான காலத்தில்தான் மோனிகா லெவின்ஸ்கி பிரச்சனை வெளியானது. ஒரு நொடியில் உலகம் முழுவதும் ஒரு விஷயத்தைப் பரப்புவதில் ஒருவரை பொது வெளியில் சிறுமைப்படுத்துவதில் இணையத்துக்கு இருக்கிற வலிமையை சுட்டிக்காட்டியிருக்கும் அவர் நாம் அனைவரும் சிந்திக்கத்தக்க ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். “இப்போது புதிதாக ஒரு சந்தை உருவாகியிருக்கிறது.அங்கே பொதுவெளியில் ஒருவரை சிறுமைப்படுத்துவது ஒரு பண்டமாகவும் அவமானம் என்பது ஒரு தொழிலாகவும் மாறியிருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

இணையத்துக்கு மட்டுமல்ல நேரலை என்பதே அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கிற நம் காட்சி ஊடகங்களுக்கும் இது பொருந்தும்.இப்போது ஒரு ஊடகவியலாளர் நினைத்தால் எந்தவொரு அரசியல் தலைவரையும் ஒரு நொடிக்குள் பொதுவெளியில் சிறுமைப்படுத்திவிடமுடியும். இங்கே வந்திருக்கிற அண்ணன் ஈவிகேஎஸ் அவர்களுக்குக்கூட அப்படியான அனுபவம் உண்டு, பொதுவெளியில் சிறுமைப்படுத்துவதையே சில நியூஸ் சேனல்கள் தங்களது டிஆர்பியை உயர்த்திக்கொள்வதற்கான யுக்தியாகக் கையாள்கின்றன.ஆங்கில சேனல்கள் மட்டுமின்றி அந்த யுக்தி தமிழ் சேனல்களிலும்கூட பின்பற்றப்படுகிறது.

பப்ளிக் ஹியுமிலியேஷன் (Public humiliation) – பொதுவெளியில் ஒருவரை சிறுமைப்படுத்துவது என்பது தார்மீகம் சம்பத்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அது பொருளாதாரம் தொடர்பானது.அதனால் யார் லாபம் ஈட்டுகிறார்கள் என்பதையும் தாங்கள் எப்படி அந்த லாபவேட்டையில் கருவிகள் ஆக்கப்படுகிறோம் என்பதையும் ஊடகத் துறையில் பணியாற்றும் நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.கருத்துரிமைக்கான போராட்டத்தில் அத்தகைய புரிதல் இருந்தால்தான் நாமெல்லாம் ஒன்றிணைந்து நிற்கமுடியும்.

கருத்துரிமைப் பறிப்பு என்பது மணியோசை போல இப்போது முன்னே வந்திருக்கிறது.நம்மை மிதித்து துவம்சம் செய்யப்போகிற யானை பின்னே வந்துகொண்டிருக்கிறது.சில நாட்களின் முன்னே மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற 14 ஆவது நிதிக்குழு அறிக்கை மிக மூர்க்கமான பொருளாதாரத் தாக்குதலைத் தொடுப்பதாக இருக்கிறது.குடி தண்ணீருக்கு மட்டுமல்ல பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீருக்கும் கூட விலை நிர்ணயித்து வசூலிக்கவேண்டும் என அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். போக்குவரத்துக் கட்டணங்களை அவ்வப்போது உயர்த்தி நிர்ணயிப்பதற்கு சுயேச்சையான அமைப்பு ஒன்றை 2017 ஆம் ஆண்டுக்குள் மாநில அரசுகள் உருவாக்கவேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள்.அந்தப் பரிந்துரைகளையெல்லாம் மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களையெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகத் திருத்தம் செய்துகொண்டிருக்கும் பாஜக அரசு நம் மீது மிக மூர்க்கமான தாக்குதலைத் தொடுப்பதற்கான தயாரிப்புகளைச் செய்துகொண்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு எழக்கூடாது என்பதற்காகத்தான் பல்வேறு உதிரி அமைப்புகளைத்  தூண்டிவிட்டு கருத்துரிமைப் பறிப்பு நடவடிக்கையைத் தூண்டிவிட்டிருக்கிறது.இதை ஊடக நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.கருத்துரிமையைக் காத்து நிற்பதென்பது இவை எல்லாவற்றோடும் தொடர்புடையது என்பதை உணர்வோம்.ஒன்றிணைந்து நிற்போம்.

நன்றி

 

(29.03.2015 அன்று சென்னையில் ‘ மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையமும் சென்னை பத்திரிகையாளர் சங்கமும் ’ இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘ கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான கணடனக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்)