சிதம்பரம் களப்பிரர்களின் தலைநகராக இருந்ததா? - ரவிக்குமார்

Views : 143

பதிவு செய்த நாள் 14-Nov-2022

கடைச்சங்க காலம் கி.மு.250-ல் முடிவுற்றதாகக்கூறுவர். அதற்குப்பிறகான தமிழக வரலாறு தெளிவு பெறாமல் கிடந்தது.'இருண்டகாலம்' என வரலாற்று ஆசிரியர்கள் சிலரால் குறிப்பிடப்பட்ட அக்காலத்தில் எவருடைய ஆட்சி நடந்தது என்பது புலப்படாமல் இருந்தது. சோழநாட்டின் ஊர் ஒனறில் வாழ்ந்த, களப்பாளன் என்பானின் சந்ததியினர் 'களப்பாளர்'-'களப்பாளராயர்' என அறியப்பட்டனர். அவர்களும் களப்பிரர்களும் வேறுவேறு(தமிழராகிய களப்பாளரும் ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரேயாவர் என்னும் முடிவு எவ்வாற்றாலும் ஒத்துக்கொள்ளக் தக்கதன்று எனும் டி.வி. சதாசிவப்பண்டாரத்தார் கூற்றைத் தளவாய்புரச் செப்பேடு மறுத்துவிட்டது(வேள்விக்குடிச் செப்பேட்டில் களப்பிரர் என்று குறிப்பிட்டிருப்பதை தளவாய்பபுரச்செப்பேடு களப்பாழர் என்று கூறுகிறது).

களப்பிரர் சமண, பௌத்த மதங்களை ஆதரித்தவர்கள். அவர்கள் கன்னட வடுகர் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி. அவர்கள் கன்னட தேசத்தில் களப்பு என்னும் நாட்டையாண்ட சிற்றரசர் என்பது கல்வெட்டுகளால் தெரியவருவதாக அவர் கூறுகிறார்.

சேர, சோழ, பாண்டியரை வென்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் ஆண்டனர். இதை வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் உறுதிப்படுத்துகிறது. அவர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுள்ளனர்.

களப்பிரர் ஆட்சிக்காலம் குறித்து ஆராயும் விதத்தில் பாண்டிச்சேரியில் இருக்கும் பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி ( E F E O ) 20.10.2010 அன்று களப்பிரர் காலம் குறித்த ஒரு நாள் பட்டறை ஒன்றை நடத்தியது. அதில் பார்வையாளராக அப்போது கலந்துகொண்டேன். முற்பகலில் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் தயாளனும் , தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறையைச் சேர்ந்த முனைவர் செல்வகுமாரும் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். திரு.தயாளன் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தில் சுமார் நூற்றியிருபதுக்கும் அதிகமான பௌத்த மையங்கள் உருவானதையும் அவை அப்போது சமூகத்தில் பெற்றிருந்த செல்வாக்கையும் விரிவாக எடுத்துரைத்தார். பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட தகவல்களும், அங்கு கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் பொருட்களும் பௌத்தம் செழித்திருந்ததன் அடையாளமாகத் திகழ்வதை அவர் ஒளிப்படங்களோடு விளக்கினார். இவ்வாறு பௌத்தம் செழித்திருந்தது என்றால் அதற்கு அப்போது அரச ஆதரவு இருந்திருக்கிறது என்றே பொருள். ஏனெனில் சங்க காலத்தில் பௌத்தம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. பட்டினப்பாலையில் ஓரிடத்தில் மட்டுந்தான் அதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும்கூட பௌத்தம் குறித்ததா என்பது ஐயமாகவே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அப்போது தமிழ்நாட்டை ஆண்டதாகக் கூறப்ப்டும் களப்பிரர்களை பௌத்தர்கள் அல்லது சமணர்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாது என்றாலும் அவர்கள் காலத்தில் பௌத்தம் செழித்திருந்ததை உறுதியாகக் கூறலாம் என்று அவர் தெரிவித்தார்.

அடுத்ததாகப் பேசிய திரு. செல்வகுமார் , சங்க காலம் மற்றும் பிற்காலச் சோழர்கள் குறித்த மிகையான மதிப்பீடுகள் காரணமாக இடைப்பட்டக் காலம் ‘ இருண்ட காலம் ‘ என அழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டுவரை கிரீஸ் , ரோம் முதலான பகுதிகளோடு வாணிபத் தொடர்பு மிகவும் மும்முரமாக நடந்திருக்கிறது. அதன் பின்னர் அதில் ஒரு தொய்வு ஏற்பட்டு அதற்குப் பதிலாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளோடு வாணிபம் தீவிரம் அடைந்தது என்பதைப் பார்க்க முடிகிறது. அக்காலக் கட்டத்தில் சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் இங்கு பௌத்தம் தழைக்கக் காரணமாக அமைந்தது என அவர் கூறினார். அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பீங்கான் பொருட்கள் பற்றி விவரித்த அவர் இத்தகையக் கண்டுபிடிப்புகளின் பின்னணியில் மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பற்றி நல்லதொரு நூலை எழுதியிருக்கும் பால் யங்கர் என்பவர் , சிதம்பரம் ஒரு காலத்தில் களப்பிரர்களின் தலை நகராக இருந்தது என்று கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி அதுபற்றிய உங்களின் கருத்து என்ன என்று நான் கேட்டபோது ‘ களப்பிர மன்னன் ஒருவனுக்கு சிதம்பரத்தில் இருந்த தீக்‌ஷதர்கள் முடிசூட்ட மறுத்துவிட்டதாக ஒரு கதை உண்டு. களப்பிரர்களின் தலைநகராக சிதம்பரம் இருந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்க முடியுமா ? எனத் தயாளன் என்னிடம் வினவினார். சத்ரபதி சிவாஜிக்கு நேர்ந்ததை நினைவில்கொண்டால் இந்தக் கேள்வி அர்த்தமற்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.நான் கவனப்படுத்த முயன்றது, சிதம்பரம் நடராஜர் கோயில் பௌத்த நோக்கிலிருந்து ஆராயப்படவேண்டும் என்பதைத்தான்.

சிதம்பரம் கோயில் வளாகத்திலிருக்கும், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்த அவனியாளப்பிறந்தான் என்ற சிற்றரசனது கல்வெட்டு அக்கோயிலின் வளாகத்தில் காமக்கோட்டம் ஒன்று இருந்ததுபற்றியும் அதில் குழந்தைகளுக்குப் பாலமுது வழங்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. இந்தச் செய்தியை ஆராய்ந்திருக்கும் முனைவர் ஆ.பத்மாவதி அது பௌத்தத்தோடு கொண்டிருந்த தொடர்பின் அடையாளம்தான் என்று வலியுறுத்தியிருக்கிறார். நடராசர் என்பதே புத்தரின் பெயர்களில் ஒன்றுதான் என வீரசோழியத்தை ஆதாரமாககொண்டு அயோத்திதாசப் பண்டிதர் கூறியிருப்பதையும் நாம் நினைவுபடுத்திப் பார்க்கலாம் . சிதம்பரத்துக்கு அருகில் இருக்கும் திருச்சோபுரம், திருப்பாதிரிப்புலியூர் என்கிற கடலூர் ஆகிய இடங்களின் பௌத்தத் தொடர்புகளையும் இத்துடன் சேர்த்து ஆராய்ந்தால் அது மேலும் துலக்கம் அடையும்.

பாண்டிய மன்னன் கடுங்கோனும், பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வென்று வீழ்த்தியது கி.பி.575-ல் இருக்கலாம் என வரலாற்றறிஞர்கள் கூறுவர்.

களப்பிரர் சமண, பௌத்தத்தை ஆதரித்தாலும் இந்து மதத்தை வெறுக்கவில்லை. அவர்கள் காலம் இருண்ட காலமென்பது உண்மையல்ல. இக்காலத்தில்தான் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது கி.பி.10 வரை வழக்கத்தில் இருந்தது.

அவர்கள் காலத்தில் பல்வேறு தமிழ் நூல்கள் எழுதப்பட்டன.

யாப்பிலக்கண நூல்களான அவிநயம், காக்கை பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப்புறனடை; சமண இலக்கிய நூல்களான நரிவிருத்தம், சீவகசிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், விளக்கத்தார் கூத்து, பெருங்கதை ஆகியவை களப்பிரர் காலத்தில்தான் வெளிவந்தன. சைவ இலக்கிய நூல்களான மூத்த திருப்பதிகங்கள், திருவரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழு கூற்றிருக்கை, பெருந்தேவபாண் கோபப்பிரசாதம், காரெட்டுப்போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்பர் தேவர் திருமறம் ஆகியவையும்; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக்காஞ்சி, நாலடியார் ஆகியன போக மீதமுள்ள 14 நூல்கள் களப்பிரர்காலத்தைச் சேர்ந்தவையாகும்.

இவைதவிர சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றிலும் களப்பிரர்காலம் குறித்தப் பதிவுகள் உள்ளனவா என்பதும் களப்பிரர் சிதம்பரத்தைத் தலைநகராக’கொண்டு ஆட்சி புரிந்தனர் என்ற கூற்றும் ஆராயப்படவேண்டும்.

1975-ல் சீனி வேங்கடசாமி ‘ களப்பிரர் காலத் தமிழகம் ’ என்ற நூல் எழுதப்பட்டதற்குப் பிறகு வெளிவந்துள்ள கல்வெட்டுப் பதிவுகள், அகழ்வாய்வுகள், சங்க இலக்கியங்கள் மீதான புதிய ஆய்வுகள் முதலானவற்றின் துணைகொண்டும் கர்நாடகத்தில் வெளியாகியுள்ள நூல்களின் துணைகொண்டும், அகழ்வாய்வு முடிவுகள், மெக்கன்சி சுவடிகள் முதலியனவற்றின் உதவியோடும் களப்பிரர் காலத்தைக் குறித்து மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டும்.

களப்பிரர் குறித்த ஆராய்ச்சி தமிழ் பௌத்தம் குறித்த ஆராய்ச்சியோடு நெருங்கிய தொடர்புகொண்டது. அந்த ஆராய்ச்சியில் சிதம்பரம் ஒரு முக்கிய மையமாக இருக்கும். அதைப்பற்றி இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை, தமிழ்நாட்டு வரலாற்றைத் தெளிவாக உருவாக்கவேண்டும் என்று அக்கறைகொண்டுள்ள தமிழ்நாடு அரசு களப்பிரர் காலம் குறித்து ஆராய சிறப்புத் திட்டம் ஒன்றை வகுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.