இந்த ஆண்டுக்குள், பத்து பள்ளிகளிலாவது பாகுபாடற்ற நிலையை உருவாக்குவோம்

Views : 201

பதிவு செய்த நாள் 24-Jan-2020

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக கல்வி தொடர்பான பல்வேறுவிதமான பிரச்சனைகளைக் கையிலெடுத்து பேராசிரியர் கல்யாணி, தோழர் ரவிகார்த்திகேயன்,பாலு உள்ளிட்ட பல தோழர்கள் இணைந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். மற்றவர்கள் கவனம் செலுத்தாத கல்விப் பிரச்சனைகளின்மீது கவனத்தை ஈர்ப்பதற்காகவே மக்கள் கல்வி இயக்கம் துவக்கப்பட்டது. அப்படியும்கூட பல பிரச்சனைகள் நம் கவனத்திற்கு வராமல் இருப்பது பின்னர்தான் எனக்குப் புரிந்தது.

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் விஜயகுமார் ஐ ஏ எஸ் செயல்வழிக் கற்றல் முறையை அறிமுகப்படுத்தினார். அப்போது சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் சிலவற்றில் அது சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. அந்தப் பள்ளிகளுக்குச் சென்று பார்த்தபின் சட்டமன்றத்தில் அந்த முறையை ஆதரித்துப் பேசியதோடு அந்த முறையின் சிறப்புகளை முதல்வராயிருந்த கலைஞர் அவர்களிடமும் நேரில் வலியுறுத்தினேன். தமிழகம் முழுவதற்கும் அது விரிவுபடுத்தப்பட நானும் என்னாலான பங்களிப்பைச் செய்தேன்.

அந்த நேரத்தில்தான் உலக வங்கிக் குழு ஒன்று தமிழகப் பள்ளிகளைப் பார்வையிட்டு அறிக்கை ஒன்றை அளித்தது. அந்தக் குழு கூட்டத்துக்கு நானும் அழைக்கப்படிருந்தேன். பள்ளிகளில் மாணவிகள் இடை நிற்றலுக்கான காரணங்களில் ஒன்றாகக் கழிப்பறைகள் இல்லாதது உலக வங்கிக் குழுவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி ( CSR)

நிதி மூலமாக பள்ளிகளுக்கு கழிப்பறைகள் கட்டித் தர வைக்கலாம் என அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த பூங்கோதை ஆலடி அருணா அவர்களிடம் நான் சென்று கேட்டபோது அவர் இசைவளித்து அதற்கென ஒரு கூட்டத்தைக் கூட்டச் செய்தார். அதற்காக ஏற்படுத்தப்பட்ட கமிட்டியிலும் நான் இருந்தேன்.

மாவட்டவாரியாக கழிப்பறை தேவைப்படும் பள்ளிகளின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பெறப்பட்டு ஐடி கம்பெனிகளோடு விவாதித்து ஒரு சில மாவட்டங்களில் கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. யுனிசெஃப் மூலமாக சில மாவட்டங்களில் இன்சுனரேட்டர்கள் அமைக்க ஏற்பாடு செய்தேன். இலவச நாப்கின்கள் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அதையொட்டித்தான் சட்டப் பேரவையில் முன்வைத்தேன்.

இந்த விஷயங்களில் கவனம் செலுத்தியபோதுதான் பள்ளிகளில் பாலின பாகுபாடு இருப்பது என் கவனத்தில் பட்டது. அது தொடர்பாக தேடும்போதுதான் 'நேஷனல் நாலட்ஜ் கமிஷன்' ( National Knowledge Commission) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று கிடைத்தது. பள்ளிகளில் பாகுபாடுகளைக் களைவதற்கான அந்த

செயல் திட்ட அறிக்கை திருமதி சோனியா காந்தி அம்மையார் தலைமையிலான நேஷனல் அட்வைசரி கவுன்சிலால் ( National Advisory Council) தயாரிக்கப்பட்டு அரசுக்கு அளிக்கப்படிருந்தது. அதை செயல்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. அந்த அறிக்கை மட்டுமின்றி சர்வ சிக்ஷ அபியான் உள்ளிட்ட அமைப்புகள் முன்வைத்திருந்த மேலும் பல அறிக்கைகளும் இது தொடர்பாக வெளியாகியிருந்தன.

அந்த அறிக்கைகளைப் படித்த தூண்டுதலில்தான், வகுப்பறைகளில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஆசிரியர்களை கௌரவிப்பதற்காக நிகரி விருதை 2013ல் நான் உருவாக்கினேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக மணற்கேணி சார்பில்

அந்த விருதை வழங்கி வருகிறோம். நேஷனல் அட்வைசரி கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை பேராசிரியர் கோச்சடையைக்கொண்டு பேராசிரியர் கல்யாணி தமிழாக்கம் செய்யவைத்தார். 2014ல் அந்த அறிக்கையை மணற்கேணி மூலமாக வெளியிட்டோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்க்கும்போது பாகுபாடுகளில் அளவிலும் பண்பிலும் மிக மோசமான மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. அது வன்முறையாக வெளிப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த அரசும் சமூக இயக்கங்களும் தலையிட்டே ஆகவேண்டும் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. அதற்காகத்தான் இந்த கலந்துரையாடல் இங்கே அவசரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

பல்வேறுவிதமான பாகுபாட்டு வடிவங்கள் அறிக்கைகளில் சுட்டப்பட்டுள்ளன. தீர்வுக்கான நடவடிக்கைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும் இங்கு வந்துள்ள ஆசிரியர்கள் தமது அனுபவங்களிலிருந்து தமிழ்நாட்டில் நிலவும் பிரத்யேகமான புதிய பாகுபாட்டு வடிவங்களை சுட்டிக்காட்ட முடியும், தீர்வுகளையும் முன் மொழிய முடியும். அப்படி உங்களால் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு அதனடிப்படையில் செயல் திட்டம் ஒன்றை உருவாக்குவோம்.

எந்தவொரு விஷயத்திலும் சாத்தியமான உடனடி இலக்கு ஒன்றை நிர்ணயித்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஆண்டு முடிவுக்குள் பத்து பள்ளிகளிலாவது பாகுபாடுகள் குறைக்கப்படுமென்றால் அதுவே பெரிய சாதனைதான்.

( 06.01.2019 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆற்றிய துவக்கவுரையின் சுருக்கம்)