பழங்குடி மாணவர்களுக்காக ஒரு ஐடிஐ அமைக்கவேண்டும்

Views : 207

பதிவு செய்த நாள் 05-Feb-2020

தோழர்களே வணக்கம்!

ஆசிரியர் பொன்.மாரியைப் பாராட்டுவதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். அவர் எந்த அளவுக்கு ஒரு சிறந்த ஆசிரியராக இருக்கிறார் என்பதற்கு அவரிடம் படித்த மாணவர் இங்கே பேசியதே சான்றாக இருக்கிறது. அவரை எதற்காக நாம் பாராட்டுகிறோம். அவரது கல்விக்காக. அவரே ஒரு ஒப்பந்ததாரராக இருந்து லட்சாதிபதியாகியிருந்தால் பேராசிரியர் கல்யாணி அவருக்காக இப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்திருக்கமாட்டார். நாமும் வந்திருக்கமாட்டோம். கல்விதான் நமக்கு எல்லாமே.

சுவர்களை இடித்து பாலத்தை அமைப்போம்:

இந்த சமூகத்தில் மக்களைப் பிரித்து பிரித்து சுவர்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். நீ இந்த சாதி, அவர் அந்த சாதி என்று சாதிகளால் சுவர் கட்டியிருக்கிறார்கள். அந்த சுவர் கண்ணுக்குத் தெரியாது. அந்த

கண்ணுக்குத் தெரியாத சுவர் நம்மை மறிக்கிறது. அந்த தெருவுக்குப் போகாதே, அந்த கோயிலுக்குள் நுழையாதே , அந்த வீட்டுக்குள் போகாதே என்று நம்மை ஒதுங்கிப்போக வைக்கிறது. அப்படித்தான் பெண்களைச் சுற்றியும் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த சுவர்களை நாம் உடைக்கவேண்டும். அவற்றுக்குப் பதிலாக பாலங்களை அமைக்கவேண்டும். அப்படியான பாலத்தை அமைப்பதற்கு நமக்கு உதவுவது கல்விதான். ஆசிரியர் பொன்.மாரி என்னென்ன இயக்கங்களிலெல்லாம் பங்கெடுத்தார் என பேராசிரியர் கல்யாணி துண்டறிக்கையில் அச்சிட்டிருக்கிறார். அதெல்லாம் மாரி கட்டிய பாலங்கள். அவர் போட்ட பாலத்தின் வழியாகத்தான் இங்கே பொன்.தனசேகரன் வந்திருக்கிறார், அகரம் அறக்கட்டளையிலிருந்து வந்திருக்கிறார்கள், சகோதரி லூசினா வந்திருக்கிறார். படிப்புதான் மனிதர்களுக்கிடையே பாலத்தைக் கட்ட உதவுகிறது.

பெண்கள் கல்வியை மேம்படுத்துவோம்:

நான் நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டரை பார்க்கப்போயிருந்தேன். இந்த மாவட்டம் கல்வியிலே மிகவும் பின் தங்கியுள்ளது. ஆண்களின் படிப்பறிவு சதவீதத்துக்கும் பெண்களின் படிப்பறிவு சதவீதத்துக்கும் இடையே பதினேழு சதவீதம் இடைவெளி உள்ளது. எனவே பெண் கல்விக்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திண்டிவனத்தில் ஒரு பெண்கள் பள்ளி வேண்டும் என்பதற்காக போராடியதுதான் பேராசிரியர் கல்யாணி எடுத்த முதல் போராட்டம் என்று சொன்னேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து பெண்கள் பள்ளிகளைத் துவக்குவதற்கு நடவடிக்கை எடுங்கள் எனக் கேட்டுக்கொண்டேன்.

இந்த மாவட்டத்தில் பெண்களில்

 நூற்றில் அறுபத்து மூன்றுபேர்தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இது பொது நிலவரம். பழங்குடி பெண்களை எடுத்துக்கொண்டால் அது இன்னும் குறைவாகவே இருக்கும். தமிழ்நாட்டில் ஐம்பத்து நான்கு சதவீதம் பழங்குடிப் பெண்கள்தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அதாவது பாதிக்குப் பாதி மட்டும்தான்.

எல்லோரும் கையெழுத்துப் போடவாவது

கற்றுக்கொள்ளுங்கள் :

இங்கே சுமார் நூறு பெண்கள் வந்திருக்கிறீர்கள். உங்களில் எத்தனை பேருக்கு எழுதப் படிக்கத் தெரியும் ? ( நாலைந்துபேர் மட்டும்தான் கையை உயர்த்தினார்கள்) எழுதப் படிக்கத் தெரியாது என்பதற்காக வருத்தப் படாதீர்கள். எழுதப் படிக்கத் தெரியாத ஒரு தாய்க்குப் பிறந்தவன் தான் நான். ஆறாம் வகுப்புப் படிக்கும்போதுதான் என் அம்மாவுக்கு கையெழுத்து போட கற்றுத் தந்தேன். அவருக்கு அது மிகப்பெரிய சந்தோஷம். அவர் அடகுக்கடை ரசீதில்தான் கையெழுத்துப் போட்டார். ஆபீசுக்குப் போய் கையெழுத்துப் போடவில்லை. ஆனால் அதுவே அவருக்குப் பெருமையாக இருந்தது. நீங்களெல்லாம் இன்றைக்கு ஒரு சத்தியம் செய்துகொள்ளுங்கள். இன்னும் ஒரு வருடத்துக்குள் நீங்கள் அனைவரும் கையெழுத்துப்போட கற்றுக்கொள்ளவேண்டும். மிக அழகாகக் கோலம் போடத் தெரிந்து வைத்துள்ள நீங்கள் கையெழுத்துப் போட கற்றுக்கொள்வது கஷ்டமல்ல. அதை ஒரு சுய மரியாதையாக, மானப் பிரச்சனையாகக் கருதவேண்டும்.

செஞ்சி வட்டத்தில் ஐடிஐ அமைக்கச் செய்வோம்:

பழங்குடி மக்களுக்காக இந்த அரசாங்கம் நிறைய நிதி ஒதுக்குகிறது. அது எப்படி செலவாகிறது என்பது நமக்குத் தெரியாது. நாம் தாசில்தாரிடமோ, கலெக்டரிடமோ போய் என்ன கேட்டிருக்கிறோம். நம் பிள்ளைகள் படிக்க சாதிச் சான்றிதழ் வேண்டும் என்றுதான் கேட்டிருக்கிறோம். அதற்குமேல் எதுவும் கேட்டதில்லை. நமது கையை வைத்தே நாம் நம்மை உயர்த்திக்கொள்கிறோம். நமக்காக உதவுவதற்கு சகோதரி லூசினா, அருட்தந்தை ரஃபேல், பேராசிரியர் கல்யாணி, வாழை அமைப்பு , அகரம் பவுண்டேஷன் இப்படி சிலர் வருவதால் கொஞ்சம் முன்னேறியிருக்கிறோம். நமது பெயரால் ஒதுக்கப்படும் நிதியை, நமக்கான திட்டங்களை நாம் கேட்டுப் பெறவேண்டும். அது நம் உரிமை.

தமிழக அரசு பழங்குடி மக்களுக்காக ஆறு ஐடிஐகளை நடத்துகிறது. அதில் ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியில் ஒரு ஐடிஐ வேண்டும் எனக் கேட்டால் நிச்சயம் அதைச் செய்ய வைத்துவிடலாம். இந்த செஞ்சி வட்டத்தில் ஒரு ஐடிஐ அமைக்க நாம் முயற்சிக்கவேண்டும். அந்தக் கோரிக்கையையும் இன்னும் சில கோரிக்கைகளையும் இணைத்து கலெக்டரைப் பார்த்து மனு கொடுப்போம். நிச்சயம் அவர் செய்வார். நேற்று பேசும்போது சாதிச் சான்றிதழ்கள் கொடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை அவர் கூறினார். கல்வராயன் மலையில் மூன்று மணி நேரம் நின்று சான்றிதழ் கொடுத்ததாகச் சொன்னார். எனவே அவர் இருக்கும்போதே ஒரு ஐடிஐ இங்கே கொண்டுவந்துவிடலாம்.

அரசியல் கட்சிகளில் எத்தனையோ பிரிவுகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லா கட்சிகளிலும் பழங்குடியினருக்கான பிரிவு இருப்பதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வைத்திருக்கிறோம். உங்களிடம் ஓட்டு கேட்டு வருகிறவர்கள் அல்ல நாங்கள். உங்களுக்கான உரிமையைக் கேட்டு உங்களுக்காகப் போராட வருகிறவர்கள். அதனால்தான் தலைவர் திருமாவளவன் உங்களுக்காக விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். மாநாட்டுக்கும் வருவதாக சொல்லியிருக்கிறார். இப்போது இருப்பதுபோலவே

உங்களோடு எப்போதும் துணை நிற்போம். நன்றி , வணக்கம் !

( 07.10.2018 அன்று செஞ்சி வட்டம் அனந்தபுரத்தில் ஆசிரியர் பொன்.மாரிக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம் )